For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை மாநகராட்சியை 3 ஆக பிரிக்க திட்டம்?

By Staff
Google Oneindia Tamil News

Chennai
சென்னை: பல்கிப் பெருகி வரும் சென்னை மாநகரின் நெரிசலைத் தவிர்க்கவும், மக்கள் சென்னை நகரின் வசதிகளை வெளியிலும் அனுபவிக்கும் வகையில், சென்னைக்கு வெளியே உள்ள புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் முதல்வர் கருணாநிதியின் பரிசீலனைக்கு விரைவில் அனுப்பப்படவுள்ளது.

இதுதவிர, புதிதாக மாநகராட்சிகளை உருவாக்காமல், தற்போதைய சென்னை மாநகராட்சியுடன் புறநகர்ப் பகுதிகளை இணைத்து அதை விரிவுபடுத்தும் இன்னொரு திட்டமும் முதல்வர் பார்வைக்கு அனுப்பப்படவுள்ளது.

சென்னை நகரில் நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகி வருகிறது. ஆனால் அதற்கேற்ற இட வசதி நகருக்குள் இல்லை. இதனால் புறநகர்ப் பகுதிகளை மக்கள் நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஆனால் புறநகர்ப் பகுதிகளில் சென்னை மாநகரின் வசதிகள் இல்லை. சாலை வசதி, போக்குவரத்து, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர இல்லை.

இந்த நிலையில் சென்னை மாநகருக்குள் நிலவும் மக்கள் நெரிசலைக் குறைக்கும் வகையிலும், சென்னைக்கு வெளியிலும் மாநகர வசதிகளை ஏற்படுத்தினால், அங்கு மக்கள் இடம் பெயருவது அதிகரிக்கும் என்பதாலும், சென்னைப் புறநகர்ப் பகுதிகளை இணைத்து மேலும் 2 மாநகராட்சிகளை ஏற்படுத்தலாம் என்ற கருத்து கடந்த சில ஆண்டுகளாக நிலவி வருகிறது.

அதன்படி தாம்பரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தென் சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைத்து ஒரு மாநகராட்சியும், அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு வட சென்னை புறநகர்ப் பகுதிகளை இணைத்து வட சென்னை மாநகராட்சி எனவும் புதிததாக இரண்டு மாநகராட்சிகளை உருவாக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

இது பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்காக, கடந்த 2007-ல், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் துணைத் தலைவர் சூசன் மாத்யூ, வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் சுந்தரத்தேவன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் அம்பத்தூர் மற்றும் தாம்பரம் சுற்று வட்டாரப் பகுதிகளில், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினர் ஆய்வுகள் நடத்தி, மக்கள் கருத்துக்களை கேட்டறிந்தனர்.

மாநகராட்சியின் எல்லைகளை மாற்றியமைப்பது...

இந்த ஆய்வுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 2 பரிந்துரைத் திட்டங்களை அரசிடம், இந்தக் குழு சமர்ப்பித்துள்ளது.

அதில் ஒன்று, புதிததாக மாநகராட்சிகளை உருவாக்காமல், சென்னை மாநகராட்சியின் எல்லையை மட்டும் நன்றாக விஸ்தரிப்பது. இந்த விஸ்தரிப்பில் சென்னைக்கு வெளியில் உள்ள பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளை இணைப்பது என்பது இந்த முதல் திட்டம்.

இந்தத் திட்டத்தின் கீழ் சென்னைப் புறநகர்களில் உள்ள தாம்பரம், ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், திருவொற்றியூர், பல்லாவரம், அனாகபுத்தூர், பம்மல், உள்ளகரம்-புழுதிவாக்கம், ஆலந்தூர், மாதவரம், மணலி, பூந்தமல்லி, திருவேற்காடு, வளசரவாக்கம், கத்திவாக்கம் ஆகிய 16 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளை தற்போதுள்ள சென்னை மாநகராட்சியுடன் இணைப்பது.

இதன் மூலம் சென்னை மாநகராட்சியின் பரப்பளவு தற்போது உள்ள 176 சதுர கிலோமீட்டர் என்பதிலிருந்து 600 சதுர கிலோமீட்டராக அதிகரிக்கும்.

புதிதாக 2 மாநகராட்சிகளை உருவாக்குவது...

2வது திட்டம்- முன்னர் கூறியபடி அம்பத்தூரை தலைமையிடமாக ஆக்காமல், ஆவடியை தலைமையிடமாகக் கொண்ட வட சென்னை மாநகராட்சி மற்றும் தாம்பத்தைத் தலைமையிடமாகக் கொண்ட தென் சென்னை மாநகராட்சி என இரண்டு புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது. அதேசமயம், இந்தப் புறநகர்ப் பகுதிகள் சிலவற்றை தற்போது உள்ள சென்னை மாநகராட்சியில் இணைப்பது என்பதாகும்.

இந்த இரு திட்டங்களையும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று உயர் மட்டக் குழுவினர் சமர்ப்பித்து விளக்கம் அளித்தனர். அவர்களுடன் ஸ்டாலின் இரு திட்டங்கள் குறித்தும் விவாதித்தார்.

இதைத் தொடர்ந்து அடுத்து முதல்வர் கருணாநிதியின் பார்வைக்கு இந்த இரு திட்டங்களும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைக்கப்படவுள்ளது. அவர் பார்த்து ஒப்புதல் தந்து விட்டால், புதிய மாநகராட்சிகள் அமைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

பெங்களூர், ஹைதராபாத் வரிசையில்...

சென்னை மாநகராட்சியின் எல்லைகளை மட்டும் விரிவாக்க அரசு முடிவு செய்தால், கிரேட்டர் பெங்களூர், கிரேட்டர் ஹைதராபாத் போல மிகப் பெரிய மாநகராட்சியாக சென்னை உருவெடுக்கும்.

பெங்களூரில், புறநகர்ப் பகுதிகளை அப்படியே இணைத்து கிட்டத்தட்ட 800 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரேட்டர் பெங்களூர் மாநகராட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

அதேபோல ஹைதராபாத்திலும் புறநகர்ப் பகுதிகளை இணைத்து 650 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான மாநகராட்சியாக அது உருவெடுத்துள்ளது.

தற்போது சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் எல்லைக்குள், சென்னை மாநகராட்சிப் பகுதி, காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்டத்தின் பல பகுதிகள் வருகின்றன.
இந்தப் பகுதிகள் அனைத்தும் மொத்தமாக சேர்த்து சென்னைப் பெருநகர் என்று அழைக்கப்படுகின்றன.

பெருநகர எல்லைக்குள், சென்னை மாநகராட்சி, 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள், 10 பஞ்சாயத்து யூனியன்கள், 214 கிராமங்கள் உள்ளன.

சென்னை பெருநகரின் மக்கள் தொகை 1971-ல் 35 லட்சமாக இருந்தது. 2001ல் இது 70 லட்சமாக அதிகரித்தது. 2026ல் 1.25 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளின் பதவிக்காலம் வருகிற 2011ம் ஆண்டில் முடிவடைகிறது. அதற்குள் புதிய மாற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு தீவிரமாக உள்ளது. எனவே விரைவில் முதல்வர் கருணாநிதி தனது பரிசீலனையை முடித்து ஒப்புதலைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் வார்டுகள் பிரிப்பு, மண்டலங்கள் அமைப்பு, நிர்வாக மாற்றங்கள் உள்ளிட்ட பணிகள் தொடங்கும்.

சென்னைக்கு மாற்றம் புதிதல்ல...

சென்னை மாநகரின் எல்லை நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை மாநகர காவல்துறையின் எல்லை மாற்றியமைக்கப்பட்டது.

அதன்படி சென்னைப் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கிய செங்கை கிழக்கு காவல் மாவட்டம், சென்னை மாநகர காவல்துறையுடன் இணைக்கப்பட்டது.

மிகப் பெரிய காவல் மாவட்டமாக மாறியதால் நிர்வாக வசதிக்காக கூடுதல் ஆணையர் பதவியும் உருவாக்கப்பட்டது.

பின்னர் இது மாற்றியமைக்கப்பட்டு மீண்டும் சென்னைப் புறநகர்ப் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டன. பின்னர் அதை சென்னைப் புறநகர் ஆணையமாக மாற்றி, தனியாக ஒரு போலீஸ் கமிஷனர் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X