For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் ரகசியமாகவாவது சொல்லட்டும்-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: எனக்கு சிகிச்சை அளித்த டாக்டருக்குச் சொந்தமான மருத்துவமனையில், இலவச கலர் டிவி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள விஜயகாந்த், அது எந்த மருத்துவமனை என்பதைச் சொல்லாமல் விட்டு விட்டார். ரகசியமாகவாவது அதை அவர் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: தி.மு.கழக ஆட்சியில் முக்கியமான சாதனைகளில் ஒன்று ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வழங்கும் திட்டமாகும். அந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்திலே உள்ள எத்தனை குடும்பங்களுக்கு இதுவரை இலவச வண்ணத் தொலைக் காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன?

பதில்: 2006-ம் ஆண்டு மே மாதம் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு-இதுவரை நான்கு கட்டங்களாக வண்ணத்தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. முதலில் ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே என்று திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பிறகு மத்திய தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும், வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி இல்லாத அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

நான்கு கட்டங்களிலும் சேர்த்து மொத்தமாக வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கு ஒரு கோடியே நான்கு லட்சத்து 42 ஆயிரத்து 500 பெட்டிகளாகும். இதில் 9-8-2009 வரை வழங்கப்பட்டுள்ள வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் 72 லட்சத்து 34 ஆயிரத்து 335 ஆகும். அதாவது நாம் நிர்ணயித்த இலக்கில் 69 சதவிகித அளவிற்கு வழங்கப்பட்டு விட்டது. இதிலே கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டவை 5 லட்சம் பெட்டிகளாகும்.

ஆனால் இந்தத் திட்டத்தை அறிவித்த போது இது சாத்தியக் கூறான திட்டமே இல்லை என்றும், இதனை நிறைவேற்றவே முடியாதென்றும், இந்த திட்டம் தேவையற்ற திட்டமென்றும் சொன்னவர்கள் உண்டு. அப்படி குறை சொன்ன கட்சியைச் சேர்ந்தவர்களே முன்வந்து இந்த வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை பெற்றுச் சென்றார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

இது தவிர ஐந்தாவது கட்டமாக இந்த 2009-2010-ம் ஆண்டில் சுமார் 25 லட்சம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வாங்கி வழங்குவதற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி வழங்கப்பட்டு வரும் வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை ஏதோவொரு தெரிந்த மருத்துவமனைக்கு கொடுத்து விட்டதாக ஒருவர் குறை கூறினார். உடனே எந்த மருத்துவமனை என்று விளக்கம் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் கூறினேன். ஆனால் குற்றஞ்சாட்டியவர் எந்த மருத்துவமனை என்பதை அரசே கண்டு பிடிக்க வேண்டுமென்று சொல்லிவிட்டார்.

அப்படியொரு மருத்துவமனை இருந்தால்தானே கண்டு பிடிக்க முடியும்! உண்மையிலே தவறு களையப்பட வேண்டுமென்றால், குற்றஞ்சாட்டியவர் அல்லவா மருத்துவமனையின் பெயரைச் சொல்ல வேண்டும். வெளிப்படையாகச் சொல்வது தவறு என்று நினைத்தால், அந்தத் தகவலை அரசுக்கு ரகசியமாகக் கூறினால்கூட நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயாராகவே உள்ளது.

கேள்வி: கழக அரசின் மற்றுமொரு பெரிய திட்டம் உழவர் சந்தைகளை அமைப்பதாகும். ஏற்கனவே தி.மு.கழக ஆட்சி அமைந்தபோது திறக்கப்பட்ட உழவர் சந்தைகள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலே பராமரிக்கப்படாமல் இருந்து, 2006-ம் ஆண்டு மீண்டும் தி.மு.கழக ஆட்சி அமைந்த பிறகுதான் அந்த உழவர் சந்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நமக்குள்ள சந்தேகம், 2006-ம் ஆண்டுக்குப் பிறகு புதிதாக உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டதா?

பதில்: 2001-ம் ஆண்டிற்கு முன்பிருந்த தி.மு.கழக ஆட்சியிலே 103 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டன. அதற்குப் பின்பு வந்த அ.தி.மு.க. ஆட்சியிலே புதிதாக ஒரு உழவர் சந்தை கூடத் திறக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல, கழக ஆட்சியிலே அமைத்த உழவர் சந்தைகளும் பாரா முகமாகப் புறக்கணிக்கப்பட்டன.

2006-ம் ஆண்டிற்குப் பிறகு மீண்டும் கழக ஆட்சி அமைந்தவுடன் புதிதாக 50 உழவர்சந்தைகளைத் திறக்க திட்டமிட்டு அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்டதில் 41 உழவர் சந்தைகள் விளம்பரம் இல்லாமல் திறக்கப்பட்டு முறையாகச் செயல்பட்டு வருகின்றன. மேலும் 5 உழவர் சந்தைகள் திறப்பதற்கு தயார் நிலையிலே உள்ளன.

கேள்வி: தி.மு.கழக ஆட்சியின் மற்றுமோர் திட்டம்; பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம். அதிலே கழக அரசின் சாதனையை விளக்க முடியுமா?

பதில்:- சாதி சமய பிணக்குகளை அகற்றி அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கமாக ஒன்று கூடி சமத்துவ உணர்வுடன் வாழ்கின்ற சூழ்நிலையை உருவாக்கும் வகையில் இந்திய சுதந்திரப் பொன்விழாவையொட்டி- 1997-ம் ஆண்டில் தி.மு.கழக அரசு உருவாக்கிய புதுமையான, புரட்சிகரமான திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுர திட்டம்.

இந்த திட்டத்தின்படி நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு சமத்துவபுர குடியிருப்பிலும், 100 வீடுகள் கட்டப்படும். அந்த 100 வீடுகளில் 40 வீடுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும்- 25 வீடுகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும்- 25 வீடுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களுக்கும்- 10 வீடுகள் இதரப் பிரிவின மக்களுக்கும் என்ற வகையில் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகத்தில் ஏற்கனவே 145 சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 23-1-2008 அன்று கழக அரசின் ஆளுநர் உரையில் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அவற்றில் முதற்கட்டமாக மாவட்டத்திற்கு ஒன்று வீதம் 29 சமத்துவபுரங்கள் அமைக்கப்படுவதற்கான பணி நடைபெற்று வருகின்றது. இந்த 29 சமத்துவபுரங்களிலும் மொத்தம் 2900 வீடுகள் கட்டப்படவுள்ளன. இதுவரை 450 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, அதில் 87 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 1743 வீடுகள் பணி முடிவுற்று வெள்ளை அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதாவது 76 சதவிகித வீடுகள் கட்டப்பட்டுவிட்டன. 674 வீடுகளில் கூரை அமைத்து, பூச்சுப் பணியும், 33 வீடுகளில் கூரை அமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதுதவிர, இந்த ஆண்டிலே மேலும் 29 சமத்துவப்புரங்களை 75 கோடி ரூபாய் செலவில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவபுரங்கள் அமைத்து சமத்துவபுரங்களையும் தந்தை பெரியார் திருவுருவச் சிலைகளுடன் நிர்மாணிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேள்வி: ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில்- எரிவாயு மற்றும் இலவச அடுப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில் எத்தனை பேருக்கு இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டுள்ளன?

பதில்: 2006-2007-ம் ஆண்டில் 3 லட்சம் இலவச எரிவாயு அடுப்புகளும்-2007-2008-ம் ஆண்டில் 8 லட்சத்து 781 இலவச எரிவாயு அடுப்புகளும்-2008-2009-ம் ஆண்டில் 87 ஆயிரத்து 133 இலவச எரிவாயு அடுப்புகளும் ஆக மொத்தம் 11 லட்சத்து 87 ஆயிரத்து 914 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு அடுப்புகளும், அதற்கான சிலிண்டர்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் கடந்த ஜுலை மாதத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

கேள்வி: இந்த திட்டங்கள் தவிர மற்ற பெரிய திட்டங்களைப் பற்றி?

பதில்: ஒரு கோடியே 85 லட்சம் பேருக்கு கிலோ அரிசி ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் 20 கிலோ அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உள்பட 26 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில்- 9 லட்சத்து 85 ஆயிரத்து 329 குடும்பங்களுக்கு இதுவரை 419 கோடியே 9 லட்சத்து 10 ஆயிரத்து 605 ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

1 லட்சத்து 75 ஆயிரத்து 798 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 10 ஆயிரத்து 822 ஏக்கர் நிலம் இலவசமாக வழங்கப்பட்டு, அவற்றில் அவர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள்.

6 லட்சத்து 74 ஆயிரத்து 813 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 44 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 3 லட்சத்து 53 ஆயிரத்து 488 படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு 156 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரத்து 604 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கும் சிகரம் - கலைஞர் காப்பீட்டுத் திட்டம்...

இப்படிப்பட்ட சாதனைப் பட்டியல்களின் சிகரமாகத்தான் இந்த ஆண்டு ஒரு கோடி குடும்பங்கள் மருத்துவ ரீதியாக நலம் பெற்றிட, "உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்'' தொடங்கப்பட்டுள்ளது.

இப்படி பட்டியல் தந்து கொண்டே போகலாம். எழுதுவதற்கு நேரமும் போதாது, ஏட்டில் இடமும் இல்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X