For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜகவை ஆர்எஸ்எஸ் கைப்பற்ற வேண்டும்-அருண் ஷோரி

By Staff
Google Oneindia Tamil News

Arun Shourie
டெல்லி: பாஜக தலைமை சீர்கெட்டுப் போய்விட்டதால் கட்சியை ஆர்எஸ்எஸ் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அக் கட்சியின் மூத்த தலைவரான அருண் ஷோரி கூறியுள்ளார்.

இதையடுத்து அவரும் கட்சியை விட்டு நீக்கப்படுவார் என்று தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டிய அத்வானி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் ஓடி ஒளிவதாகவும் இது குறித்து விவாதமே நடத்த மறுப்பதாகவும் அருண் ஷோரி, ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா ஆகிய மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதையடுத்து சிம்லாவில் அக் கட்சி வேண்டா வெறுப்பாக ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. ஆனால், அதிலும் கூட தோல்வி குறித்த விவாதத்தை திசை திருப்ப ஜஸ்வந்த் சிங்கை கட்சியை விட்டு நீக்கி பரபரப்பை ஏற்படுத்தியது அத்வானி கோஷ்டி.

இந் நிலையில் அருண் ஷோரி நேரடியாகவே கட்சித் தலைமையைத் தாக்கியுள்ளார். நேற்றிரவு நிருபர்களை சந்தித்த அவர்,

தோல்விக்குப் பொறுப்பான ஒவ்வொரு தலைவரும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அடுத்த தலைவரைக் காத்துக் கொள்ளும் வேலைகளில் இறங்கியுள்ளனர். கட்சியே ஒரு பிரைவேட் கம்பெனி ஆகிவிட்டது. இங்கு ஜனநாயகமும் இல்லை, பொறுப்புணர்வும் இல்லை.

தவறை சுட்டிக் காட்டினால் அதை கட்சி விரோத செயல் என்கிறார்கள். ஜின்னா குறித்து அத்வானி என்ன சொன்னாரோ அதையே தானே ஜஸ்வந்த் சிங்கும் சொன்னார். அவரை மட்டும் நீக்கி என்ன பயன்?.

கட்சித் தலைமை குறித்து கேள்வி எழுப்பினால் அதற்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்துவிட்டு அத்வானிக்கு ஆதரவாகவும் கேள்வி கேட்பவரை விமர்சித்தும் பத்திரிக்கைகளிலும் டிவி்க்களிலும் சிலர் செய்திகளை பரப்புகின்றனர். இது தான் கட்சி நடத்தும் முறையா?.

கட்சியின் தலைவர் (ராஜ்நாத் சிங்) 'humpty dumpty' (சுவரில் ஏறிய முட்டை மாதிரி.. அது எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து நொறுங்கும்) ஆகிவிட்டார். கட்சியை நூலறுந்த பட்டம் போல் தவிக்கிறது. கட்சியில் நிலவும் பிரச்சினைகளுக்கு இப்போதுள்ள தலைமையால் தீர்வு காண முடியாது.

கட்சியை யாராவது காப்பாற்ற முடியும் என்றால் அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பாகத்தான் இருக்க முடியும். இதனால் கட்சியின் தலைவர்களை ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு ஆர்எஸ்எஸ் அதை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அவர்கள் கழுகு போல இருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பாஜவிடம் அநியாயத்துக்கு ஜனநாயகத்தைக் காட்டக் கூடாது. மா சே துங் சொன்னது போல ''தலைமையை குண்டு போட்டு தகர்த்து எறிய வேண்டும்''.. ஆர்எஸ்எஸ் தனது முழு பலத்தைக் கட்டி ஒரே போடாக போட வேண்டும். அப்போது தான் கட்சி உருப்படும்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று வசுந்தரா ராஜே, பி.சி.கந்தூரி போன்ற தலைவர்கள் பதவி விலகச் சொல்கிறார்கள். அப்படியானால் நீங்கள் (அத்வானி, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், அனந்த் குமார்) ஏன் விலகவில்லை என்று கேட்டால் நாங்கள் தான் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொண்டோமே என்கிறார்கள்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்பார்களாம்.. ஆனால், பதவி விலக மாட்டார்களாம்.. இது பாஜகவில் மட்டும் தான் நடக்கும்.

அதே நேரத்தில் கட்சியின் ஓரிரு தலைவர்கள் பதவி விலகுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது. கட்சி நிர்வாகத்தை ஒட்டு மொத்தமாக மாற்றி அமைக்க வேண்டும்.

பாஜக தலைவர்கள் ஒருவருக்கு எதிராக இன்னொருவர் மீடியாக்களில் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு 6 நிருபர்களையும் வளைத்துப் போட்டுள்ளனர். இதெல்லாம் ஒழுங்கீனம் இல்லையா?.

நான் இப்படி வெளிப்படையாக பேசியதற்காக என் மீது என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், என் மீது நடவடிக்கை எடுத்தால் அது தூதுவனின் மீது நடவடிக்கை எடுப்பது போலத் தான். என்னை கட்சியை விட்டு நீக்குவதால் நான் எழுப்பிய பிரச்சனைகள் ஒழிந்துவிடாது.

ராஜ்நாத் சிங் "Alice in Blunderland" என்ற நிலையில் தான் இருக்கிறார். இவருக்கு எல்லாமே பிரச்சனை தான், குழப்பம் தான் என்றார் அருண் ஷோரி.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து போபர்ஸ் விஷயத்தை வெளியில் கொண்டு வந்து ராஜிவ் காந்தியை வறுத்து எடுத்தவர் ஷோரி என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் பாஜகவில் இணைந்து வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றார். இப்போது கட்சியிலிருந்து அவரும் தூக்கப்படும் நிலை வந்துவிட்டது.

முதலில் ஜஸ்வந்த் சிங் நீக்கம், அடுத்தது அத்வானியின் அரசியல் ஆலோசகராக இருந்த குல்கர்னி விலகல் என்று பாஜகவில் தொட்ந்து அதிர்வுகள் நடந்து வரும் நிலையில் அருண் ஷோரி இந்த குண்டை வீசியுள்ளார்.

தலையிட ஆர்.எஸ்.எஸ். மறுப்பு:

இதற்கிடையே, பாஜக குழப்பத்தில் தலையிட ஆர்.எஸ்.எஸ். மறுத்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் கூறுகையில், பாஜகவின் பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. அது எங்களது வேலையும் அல்ல.

பாஜகவுக்கு உதவியும், ஆலோசனையும் சொல்ல எங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசியல் பணிகளை அவர்கள்தான் திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

என்னப் பிரச்சினையாக இருந்தாலும் அதை அவர்கள்தான் சரி செய்து கொள்ள வேண்டும்.

முடிவுகளை எடுப்பதும், எடுத்த முடிவுகளை ஆராய்வதும் அவர்களது உரிமை. எங்களுடையது அல்ல என்றார் அவர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X