For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளம், நலம் செழிக்க வழி வகுத்தது அதிமுக-ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த மூன்று ஆண்டுகளாக விசைத்தறியாளர்களின் நிலைமை மோசமாக இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலின் போது விசைத்தறியாளர்களுக்கு தமிழக அரசு கொடுத்த உத்தரவாதத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இது அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2003ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பல்வேறு வகையான நுகர்வோர்களுக்கு மின் கட்டணங்களை நிர்ணயிக்கும்போது, விசைத்தறிக்கான மின் கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதை நான் உறுதி செய்தேன்.

அதிமுக அரசு அறிவித்த ரூ. 30.70 கோடி மின் கட்டணச் சலுகை அறிவிப்பால், விசைத்தறித் தொழில் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும், போட்டிகளை திறம்பட சமாளித்து விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் வளமும், நலமும் செழிக்க வழி வகுத்தது.

இது மட்டுமல்லாமல், உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய நாடா இல்லாத விசைத்தறிகளை நிறுவி, விசைத்தறித் தொழில் முனைவோருக்கு பயன் அளிக்கும் வகையில், சுமார் ரூ. 13.22 கோடி மதிப்பில் ஆண்டிபட்டி, பல்லடம் மற்றும் குமாரபாளையம் ஆகிய மூன்று இடங்களில் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்காக்கள் அமைக்கப்பட்டன.

மேலும், இந்த உயர் தொழில் நுட்ப நெசவுப் பூங்காக்கள் அமையும் நிலத்தினை பதிவு செய்ய 50 சதவீத முத்திரைத் தாள் சலுகை கட்டணமும் வழங்கப்பட்டது. இது தவிர இந்தத் தொழிலை ஊக்குவிப்பதற்காக விசைத்தறி தொழில் நடைபெறும் பகுதிகளில் ரூ. 80 கோடி மதிப்பில் 11 இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன.

ஐவுளி தொழில் நலிந்துவிட்டது...

ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு ஏற்பட்ட கடுமையான மின்வெட்டு காரணமாகவும், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களில் இரண்டு மாதங்களில் 2 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 50 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற திமுக அரசின் அறிவிப்பு காரணமாகவும், ஜவுளித் தொழில் தற்போது மோசமான நிலையை சந்தித்து வருகிறது.

இது தவிர, இலவச வேட்டி, சேலை திட்டத்தின்கீழ் தயாரிக்கப்படும் துணிகளுக்கு தரமற்ற நூலை திமுக அரசு விநியோகித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன், ஊதிய உயர்வு தொடர்பாக ஜவுளி ஆலை அதிபர்களுக்கும், விசைத்தறியாளர்களுக்கும் இடையில் திமுக அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பேச்சுவார்த்தையின்போது, தற்போதுள்ள 4 விழுக்காடு விற்பனை வரியை 2 விழுக்காடாக அல்லது வரியே இல்லாமல் செய்திட நடவடிக்கை எடுப்பதாக திமுக அமைச்சர்கள் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு உத்தரவாதம் கொடுத்ததாகவும், 2 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அபராதக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விசைத்தறியாளர்களுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், விசைத்தறியாளர்களுக்கு கூலியை உயர்த்தி கொடுக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக் கொண்டனர்.

கூலி குறைந்துவிட்டது...

நாடாளுமன்ற தேர்தல் முடிந்தவுடன், விற்பனை வரியை குறைக்கவும், அபராதக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கவும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காததன் காரணமாக, கடந்த இரண்டு மாத காலமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் விசைத்தறியாளர்களுக்கான கூலியை 10 விழுக்காடு அளவுக்கு குறைத்துவிட்டனர்.

இதனைக் கண்டித்து, கடந்த 5.8.2009 முதல் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல், 13.8.2009 அன்று பல்லடத்திலும், 22.8.2009 அன்று சோமனூரிலும் உண்ணாவிரதம் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

ரூ. 630 கோடி இழப்பு...

ஐந்து லட்சம் விசைத்தறியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, இதுவரை ரூ. 630 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல், விசைத்தறியாளர்களும் ஊதிய இழப்புக்குஆளாக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நலனை முன்னிட்டு, ஏற்கெனவே உறுதிமொழி அளித்தவாறு, விசைத்தறியாளர்களுக்கு அபராத மின் கட்டணத்திலிருந்து விலக்களிக்கவும், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு விற்பனை வரிச் சலுகை அளிக்கவும், இருவருக்குமிடையே சுமுகமான சூழ்நிலை உருவாகவும், தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கவும், திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X