For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அத்வானி-ராஜ்நாத் விலக ஆர்எஸ்எஸ் உத்தரவு: ஜேட்லி தலைவராகிறார்

By Staff
Google Oneindia Tamil News

Advani
டெல்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து அத்வானியும் பாஜக தலைவர் பதவியிலிருந்து ராஜ்நாத் சிங்கும் விலகுவார்கள் என்று தெரிகிறது.

இதையடுத்து கட்சியின் தலைவராக அருண் ஜேட்லியும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜும் பதவியேற்பர் என்று தெரிகிறது.

இது தொடர்பாக உத்தரவுகளை ஆர்எஸ்எஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜகவில் பெரும் உள்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. தலைவர்கள் பல கோஷ்டிகளாகப் பிரிந்து மோதி வருகின்றனர். குறிப்பாக அத்வானி மற்றும் ராஜ்நாத் சிங்குக்கு கட்சியில் எதிர்ப்பு வலுத்துள்ளது. இவர்களது எதிர்ப்பாளர்களுக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் ஆசியும் உள்ளதால் கட்சி தட்டுத்தடுமாறி வருகிறது.

அத்வானி- ராஜ்நாத்தின் செயல்பாடுகளை மூத்த தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த இருவர் மீதும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தும் அதிருப்தியில் உள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து சிக்கலை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக நேற்றிரவு அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோரை ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைத்துப் பேசினார். அவர்களுடன் அனந்த்குமாரும் ஒட்டிக் கொண்டார்.

தீவிர ஆர்எஸ்எஸ்காரரான இவர் அத்வானியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இப்போது அத்வானிக்கு கட்சியில் எதிர்ப்பு வலுத்துள்ளதால் அவரிடமிருந்து விலக ஆரம்பித்துள்ளார் இந்த கர்நாடக எம்பி.

இந்த நால்வரும் நேற்றிரவு மோகன் பகவத்தை சந்தித்தபோது அத்வானியும் ராஜ்நாத்தும் பதவி விலக வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகத் தெரிகிறது.

பகவத்தை பாஜக தலைவர்கள் சந்தித்தபோது பாஜக பொதுச் செயலாளரும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரதிநிதியுமான ராம்லாலும் அங்கிருந்தார்.

மேலும் ஆர்எஸ்எஸ்சின் மூத்த தலைவர்களான பைய்யாஜி ஜோஷி, சுரேஷ் சோனி, தத்ராத்ரேயா ஹோஸ்பலே, மதன்தாஸ் தேவி ஆகியோரும் உடனிருந்தனர்.

சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இக் கூட்டத்தில் அருண் ஜேட்லி கட்சியின் தலைவராகலாம் என்றும், மக்களவை எதிர்க் கட்சித் தலைவராக சுஷ்மா சுவராஜ் பதவியேற்கலாம் என்றும் ஆர்எஸ்எஸ் கூறியதாகத் தெரிகிறது.

வெங்கையாவுக்கும் பதவி:

இதையடுத்து அருண் ஜேட்லி வசம் உள்ள ராஜ்யசபா எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வெங்கையா நாயுடுவிடம் தருமாறும் ஆர்எஸ்எஸ் கூறியுள்ளது.

இந்த மாற்றங்கள் மகாராஷ்டிரா, ஹரியாணாவில் நடக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று இந்தத் தலைவர்கள் மோகன் பகவத்திடம் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து அம் மாநில தேர்தல்களுக்குப் பின் அத்வானி பதவி விலகலாம் என்று பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் டிசம்பர் மாதத்தில் முடிவதால் அதன் பின் ஜேட்லி தலைவராகலாம் என்று தெரிகிறது.

அத்வானி, ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு எதிரான ஜஸ்வந்த் சிங், யஷ்வந்த் சின்ஹா, அருண் ஷோரி ஆகியோரின் அடுத்தடுத்த பேட்டிகளால் பாஜக நிலை குலைந்து போயுள்ளது.

ஆனாலும் ஷோரி, சின்ஹா ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடு்ககக் கூடாது என்றும், அவர்களுடன் ஒத்துப் போகுமாறும் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜ்நாத் சிங்கின் பதவிக் காலம் டிசம்பர் மாதத்தில் முடிவதால் அதன் பின் ஜேட்லி தலைவராகலாம் என்று தெரிகிறது.

ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் மோகன் பகவத்தை சந்தித்த ஜேட்லி, சுஷ்மா, வெங்கையா, அனந்த் குமார் ஆகியோர் அங்கிருந்து நேராக அத்வானியின் வீட்டுக்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் தங்களுக்கு பிறப்பி்தத உத்தரவு குறித்து அவரிடம் விளக்கினர். இந்தச் சந்திப்பு நள்ளிரவு வரை நீடித்தது.

பகவத்தைச் சந்திக்கும் முன் அருண் ஜேட்லி தனியாக அத்வானியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப் பேரவை பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்த மாற்றங்கள் மெதுவாக, படிப்படியாக நடைபெறும் என்று தெரிகிறது.

காந்தஹார் விமானக் கடத்தல் விஷயத்தில் பொய் சொல்லி மாட்டியது, நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கு நோட்டு நாடகத்தை நடத்தி மாட்டிக் கொண்டது என்று அத்வானி மீதான நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டதால் அவர் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதே கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று ஆர்எஸ்எஸ் எடுத்துக் கூறியுள்ளது.

ஜேட்லி-சுஷ்மா இடையே போட்டி:

கட்சியின் தலைவர் பதவிக்கு சுஷ்மா சுவராஜ் குறி வைத்துள்ள நிலையில் அவரையும் அருண் ஜேட்லியையும் ஒன்றாக அழைத்து ஆர்எஸ்எஸ் தலைவர் பேசியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஜேட்லியுடன் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டாம் என்று சுஷ்மாவிடம் ஆர்எஸ்எஸ் தெளிவுபடக் கூறிவிட்டது.

கட்சித் தலைவர் பதவிக்கு சுஷ்மாவை விட ஜேட்லியே சிறந்தவர் என்று ஆர்எஸ்எஸ் கருதுகிறது.

ராஜேவுடன் சமரசம்:

இந் நிலையில் ராஜஸ்தான் விவகாரத்தில் வசுந்தரா ராஜேவுடன் சமாதானமாகப் போய்விட ராஜ்நாத் சிங் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.

அவர் மீது கையை வைத்து அவரும் ஜஸ்வந்த், யஷ்வந்த், அருண் ஷோரி போல மேலும் சில உண்மைகளை வெளியில் சொன்னால் கட்சியி்ன் மரியாதை மேலும் குலைந்துவிடும் என்பதால் இந்த முடிவுக்கு ராஜ்நாத் வந்துள்ளார்.

இதையடுத்து கட்சியில் சுமுக நிலைமை ஏற்பட கட்சித் தலைமைக்கு வசுந்தரா 3 நிபந்தனைகளை விதித்துள்ளதாகத் தெரிகிறது.

1. ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வசுந்தராவால் அடையாளம் காட்டப்படும் ஒருவர்தான் நியமிக்கப்பட வேண்டும்.

2. வசுந்தராவை ஆதரித்துப் பேசினார்கள் என்பதற்காகக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களையும் மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்.

3. வசுந்தரா ராஜேவுக்கு டெல்லியில் முக்கிய பதவி தர வேண்டும்.

இதை ராஜ்நாத் ஏற்க ஏற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இந் நிலையில் மோகன் பகவத் வரும் நாளை தனது சொந்த ஊரான நாக்பூர் திரும்புவார் என்று தெரிகிறது. அதற்கு முன் அவரை அத்வானியும் சந்திதிப் பேசுவார் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X