For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு குண்டு சோதனை: விவாதம் தேவையற்றது-பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

ராம்சார் (ராஜஸ்தான்): பாஜகவுக்குள் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் நல்லதல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அதேபோல காந்தஹால் விமானக் கடத்தல் விவகாரம், போக்ரான் -2 அணு சோதனை ஆகியவை குறித்து இப்போது விவாதிப்பதும் தேவையற்றவை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக ராஜஸ்தான் மாநிலம் ராம்சாருக்கு இன்று வந்தார் பிரதமர் மன்மோகன் சிங். ராம்சாருக்கு அருகில் உள்ள பார்மர் நகருக்கு அவர் செல்கிறார்.

முன்னதாக ராம்சாரில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக விவகாரம், பொக்ரான் சோதனை சர்ச்சை, காந்தஹார் விமானக் கடத்தல் சர்ச்சை, வறட்சி உள்ளிட்டவை குறித்து விளக்கினார்.

பிரதமர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனநாயகத்தில், அரசியல் கட்சிகள் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம். அந்த வகையில் பாஜகவுக்குள் தற்போது நடந்து வரும் நிகழ்வுகள் நல்லதல்ல. அரசியல் கட்சிகளில் குழப்பமும், ஸ்திரமின்மையும் நிலவினால் அது நாட்டின் மீதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பாஜக என்றில்லை, அனைத்துக் கட்சிகளிலும் ஸ்திரத்தன்மை மிகவும் அவசியம்.

போக்ரான் விவாதம் தேவையற்றது...

போக்ரானில் 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட அணு சோதனை வெற்றியா, தோல்வியா என்று இப்போது விவாதம் நடத்துவது தேவையற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இந்த சோதனை வெற்றிகரமானது என்று தெளிவாக கூறி விட்டார். இதன் பின்னரும் விவாதிப்பது அவசியமற்றது.

இந்த சோதனை குறித்த தவறான கருத்தை சில விஞ்ஞானிகள் தெரிவித்து வருவது தேவையற்றது. கலாம், இந்த சோதனை வெற்றிகரமாக இருந்ததாக கூறி விட்டார். அதுவே இறுதியானது.

உணவுப் பொருட்களுக்குப் பஞ்சமில்லை...

நாட்டில் தேவையான உணவு தானியங்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான அளவு அவை உள்ளன. எனவே எந்த ஒரு குடிமகனும் உணவுப் பொருள் கிடைக்காத நிலைக்குத் தள்ளப்பட மாட்டார். யாரும் பட்டினியில் பரிதவிக்கும் நிலையும் ஏற்படாது.

தவறிப் போய் விட்ட பருவ மழையே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். வறட்சியை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி நம்மிடம் இல்லை. தற்போது நிலவுவது மிகக் கடுமையான வறட்சி. நாட்டின் பல பகுதிகளில் இது தாண்டவமாடி வருகிறது. இதன் காரணமாக விலை உயர்வு ஏற்படுவது இயற்கையானதே.

இருப்பினும் பொது விநியோகத் திட்டத்திற்குத் தேவையான உணவு தானியங்கள் போதுமான அளவில் உள்ளன. எனவே யாரும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பாக்.குடன் நல்லுறவையே விரும்புகிறோம்...

பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுவதை நமது நாட்டில் உள்ள சிலர் விரும்பவில்லை. ஆனால் பாகிஸ்தானுடன் நல்லுறவு நீடிப்பதையும், வலுப்படுவதையுமே அரசு விரும்புகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்பட்டால் அதனால் பல நல்லது நடக்கும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பட்டால் எல்லைப் பகுதியில் உள்ள பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு நாடுகளிலும் உள்ள சிலர் இந்த நல்லுறவை விரும்பாத நிலையில் உள்ளனர். இதனால்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் அடுத்த கட்டத்திற்குப் போக முடியாமல் உள்ளன என்றார் பிரதமர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X