For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சந்திராயன்-1 திட்டம் நிறுத்தப்படுகிறது - மாதவன் நாயர்

By Staff
Google Oneindia Tamil News

பனாஜி: சந்திரயான்-1 விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போனதால்தான் அதிலிருந்து தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கு எந்தவித சிக்னலும் வரவில்லை. கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில், சந்திரயான்-1 திட்டத்தை தொடருவது சாத்தியமல்ல. எனவே அது முடித்துக் கொள்ளப்படுகிறது என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

ரூ. 400 கோடி மதிப்பீட்டிலான இந்தியாவின் முதலாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 திட்டம் பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

நிலவை நோக்கிய சந்திரயான்-1 விண்கலத்தின் பயணம் இந்திய மக்களின் மனதில் பெருமிதத்தையும், உற்சாகத்தையும் கொடுத்தது.

ஆனால் எதிர்பாராதவிதமாக சனிக்கிழமை அதிகாலையில், சந்திரயான்-1 விண்கலத்துக்கும், தரைக் கட்டுப்பாட்டுத் தளத்துக்கும் இடையிலான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதனால் இந்தியர்கள் அனைவரும் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும் சந்திரயான்-1 திட்டத்தின் பலனில் 95 சதவீதத்தை ஏற்கனவே எட்டி விட்டதாக விஞ்ஞானிகளும், இஸ்ரோவும் அறிவித்துள்ளனர். மேலும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சந்திரயான்-1 திட்டம் மிகப் பெரும் வெற்றிதான் என்று வர்ணித்துள்ளார்.

இந்த நிலையில் சந்திரயான் -1 திட்டத்தை முடித்துக் கொள்வதாக இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பனாஜியில் செய்தியாளர்களிடம் மாதவன் நாயர் பேசுகையில், விண்கலத்துடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் போய் விட்டது. எனவே திட்டத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்துள்ளோம்.

மீண்டும் தகவல் தொடர்பை முடுக்கி விட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் விண்கலத்தில் உள்ள கம்ப்யூட்டர்கள் முற்றிலும் செயலிழந்து போய் விட்டன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

கம்ப்யூட்டர்கள் செயல்படாத நிலையில் விண்கலத்துடன் தொடர்பு கொள்வது இயலாத காரியம். எனவேதான் திட்டத்தை முடித்துக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சந்திரயான்-1 மூலம் நமக்குத் தேவையான பெரும்பாலான தகவல்களை நாம் ஏற்கனவே பெற்று விட்டோம்.

சந்திரயான்-1 விண்கலத்திலிருந்து கடைசியாக சனிக்கிழமை நள்ளிரவு 12.25 மணிக்கு தகவல் வந்தது. அதன் பின்னர் 1.30 மணிக்கு விண்கலத்துடனான ரேடியோ தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது.

சந்திரயான்-1 விண்கலத்தின் செயலிழப்பு தொடர்பாக ஆராய உயர் மட்டக் கமிட்டியை இஸ்ரோ அமைத்துள்ளது. இது தோல்விக்கான அனைத்துக் காரணங்களையும் விரிவாக ஆராயும்.

சந்திரயான்-1 விண்கலம் செயலிழந்து விட்டாலும் கூட இத்தனை நாட்களாக அது கிட்டத்தட்ட சந்திரனின் 70,000 படங்களை அனுப்பி வைத்துள்ளது. பெருமளவிலான டேட்டாக்களும் நமக்குக் கிடைத்துள்ளன.

தற்போது சந்திரயான்-1 விண்கலம் எந்த இடத்தி்ல் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து சொல்லுமாறு அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை இஸ்ரோ கேட்டுக் கொண்டுள்ளதாம். அந்த நாடுகள் ரேடார்கள் மூலம் சந்திரயான்-1 விண்கலத்தின் இருப்பிடத்தை அறிந்து நமக்குச் சொல்லவுள்ளனர்.

சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் கிடைத்த அனுபவம், பாடத்தை அடிப்படையாகக் கொண்டு சந்திரயான்-2 திட்டத்தை உருவாக்கப் போவதாகவும், முதல் திட்டத்தின் தோல்வியால் 2வது திட்டம் தாமதமாகாது.

2013-2015க்குள் செவ்வாய்க்கு ராக்கெட்...

சந்திராயன்-2 திட்டத்துக்கு பின் செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டம் தொடர்பாக பல விஞ்ஞான அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் கொடுக்கும் திட்டங்களை அடிப்படையாக வைத்து செவ்வாய் கிரக ராக்கெட்டை எப்படி உருவாக்குவது என்பதை முடிவு செய்ய முடியும்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும். இது 2013 முதல் 2015ம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என்றும் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

விரைவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து சந்திரயான்-1 திட்டம் குறித்து மாதவன் நாயர் விவாதிக்கவுள்ளாராம்.

செயலிழந்து போய் விட்ட 514 கிலோ எடை கொண்ட சந்திரயான்-1 விண்கலம் இன்னும் ஓராண்டுக்கு நிலவின் வட்டப் பாதையில் இருக்கும். அதன் பின்னர் அது படிப்படியாக நிலவின் தளத்தில் மோதி விழுந்து விடும்.

இதற்கிடையே, எந்தவிதமான நிலவுப் பயணங்களும் ஒரு ஆண்டு வரை நீடித்ததில்லையாம். அதிகபட்சம் 6 அல்லது 7 மாதங்கள் வரைதான் நீடித்துள்ளன. ஆனால் சந்திரயான்-1 விண்கலம் கிட்டத்தட்ட 10 மாதங்கள் நிலவைச் சுற்றி வந்தது பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

நிலவின் சுற்றுச்சூழல், சூரிய கதிர்வீச்சு, விண்வெளியில் காணப்படும் பல்வேறு சூழல்கள் ஆகியவற்றைத் தாக்குப்பிடித்து சந்திரயான்-1 இத்தனை காலம் இருந்ததே மிகப் பெரிய சாதனை என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

எனவேதான், எதிர்பாராத வகையில் சந்திரயான்-1 திட்டம் முடிவுக்கு வந்து விட்டாலும் கூட இது மிகப் பெரிய சாதனை, வெற்றி என்றும் விஞ்ஞானிகள் உற்சாகத்துடன் கூறுகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X