For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜசேகர ரெட்டி மாயம்: தேடுதலில் ராணுவம், விமானப்படை!

By Staff
Google Oneindia Tamil News

Y. S. Rajasekhara Reddy
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அவரைத் தேடும் பணியில் ராணுவம், விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் முதல்வரைத் தேடும் பணியில் ஈடுபடுமாறு ஆந்திர மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

காலை 8.35 மணிக்குக் கிளம்பினார்...

ராஜசேகர ரெட்டி இன்று காலை சுமார் 8.35 மணிக்கு ஹைதராபாத்திலிருந்து பெல் 430 ரக ஹெலிகாப்டரில் சித்தூருக்குக் கிளம்பினார். ஹைதராபாத்திலிருந்து சித்தூர் 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ரெட்டியுடன், அவருடைய முதன்மைச் செயலாளர் சுப்ரமணியம் மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர். இரண்டு பைலட்டுகளுடம் ஹெலிகாப்டரில் இருந்தனர்.

9.25க்கு தகவல் தொடர்பு துண்டிப்பு...

காலை 10.45 மணிக்கு ரெட்டி சித்தூர் வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், 9.25 மணி முதல் ஹெலிகாப்டருடனான ரேடியோ தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.

நக்சலைட்டுகள் நிறைந்த நல்லமல்லா காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது ராடாரிலிருந்தும் மாயமானது.

அப்போது, கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த ஹெலிகாப்டரைக் கண்டு பிடிப்பது கடினமாகிவிட்டது. இதனால் பரபரப்படைந்த காவல் துறையினர் ராணுவத்தின் உதவியோடு ஹெலிகாப்டரைத் தேடினர்.

கடைசியில் அந்த காட்டையொட்டிய மிகச் சிறிய கிராமத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அதேநேரம் முதல்வர் என்ன ஆனார்... என்பதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

தேடுதலில் ராணுவம், விமானப்படை...

ஆந்திர முதல்வரைத் தேடும் பணியில் ராணுவமும், விமானப்படையும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நான்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளன. அதில் மூன்று பெங்களூரிலிருந்து வந்துள்ளது. இன்னொன்று ஹைதராபாத்திலிருந்து வந்துள்ளது.

அதேபோல, விமானப்படையின் நான்கு ஹெலிகாப்டர்களும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

இவற்றில் 2 சேட்டக் ரக ஹெலிகாப்டர்கள், ஒன்று எம்ஐ8, இன்னொன்று துருவ் அட்வான்ஸ் இலகு ரக ஹெலிகாப்டர் ஆகும்.

இஸ்ரோவின் உதவி...

இந்த நிலையில் இஸ்ரோவின் உதவியும் தேடுதல் வேட்டையி்ல கோரப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் உதவியுடன் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் இருக்கும் இடத்தை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இஸ்ரோவின் சிறப்பு விமானம் தேடுதல் வேட்டையில் இணைந்துள்ளது.

வீரர்கள் விரைகின்றனர்...

இதற்கிடையே, ஆந்திர மாநில அரசின் நக்சலைட் எதிர்ப்புப் படையினர், சிஆர்பிஎப் வீரர்கள் குறிப்பிட்ட வனப் பகுதிக்கு விரைந்துள்ளனர்.

அவர்கள் தரை மார்க்கமாக தேடுதல் வேட்டையில் ஈடுபடவுள்ளனர்.

மழையால் தேடுதல் பாதிப்பு...

தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இருப்பினும் இருள் சூழத் தொடங்கி விட்டதாலும், வனப்பகுதியில் கன மழை பெய்து வருவதாலும், தேடுதல் பணியில் பெரும் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

முதல்வரைக் கண்டுபிடிப்பதற்காக பாதுகாப்புத்துறை அனுப்பி வைத்த ஆள் இல்லாத விமானமும் மழை காரணமாக தேடும் பணியில் முழுமையாக ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து தட்பவெப்ப நிலையையும் தாங்கக் கூடிய, இரவிலும் தேடக் கூடிய வகையிலான ஹெலிகாப்டர்களை அனுப்பி வைக்குமாறு ஆந்திர அரசு மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

பிரகாசம், கர்னூல், சித்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

முன்னதாக முதல்வர் பயணம் செய்த ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அவர் ஹைதராபாத் திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது, முதல்வர் ரெட்டியைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை என கூறியுள்ளார் தலைமைச் செயலாளர்.

இதுவரை என்ன நடந்தது, அவர் எப்படி காணாமல் போனார், யாராவது கடத்தினார்களா என்பது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறைத் தலைவர் இருவருமே எதுவும் கூற மறுத்துவிட்டனர்.

இருள் வரும் நேரம் நெருங்கி வருவதால், முதல்வரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களும் தேடுகிறார்கள்...

காட்டுப்பகுதியில் ராணுவத்துடன் இணைந்து பொதுமக்களும் முதல்வரைத் தேடும் பணியில் ஈடுபட வேண்டும் என மாநில நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதல்வர் மாயமானது குறித்து தலைமைச் செயலாளர் கூறுகையில், மாலை நெருங்கும் இந்த வேளை வரை முதல்வருடன் எந்தத் தொடர்பும் எங்களுக்கு இல்லை. அவர் எங்கிருக்கிறார், ஹெலிகாப்டர், அதிலிருந்த பைலட்டுகள் போன்ற எந்த விவரமும் எங்களுக்கு தெரியவில்லை. ராஜசேகர ரெட்டி இருப்பதாக முதல்வர் அலுவலகம் சொன்ன தகவல் உறுதிப்படுத்தப்படாதது.

இன்னும் தேடும் முயற்சி தொடர்கிறது. முதல்வர் பற்றிய தகவல் கிடைத்தால் உடனே தொடர்பு கொண்டு உதவ வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

ஆந்திர மாநில நிதி அமைச்சர் ரோசய்யாவும் முதல்வர் பற்றிய எந்தத் தகவலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

பிரதமர் - சோனியா கவலை!

முதல்வர் ரெட்டி மாயமாகி இத்தனை மணி நேரமாகியும் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாவை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தச் செய்தி பெரும் கலக்கத்தைத் தருவதாக சோனியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இதுவரை இப்படியொரு பகீர் சம்பவம் இந்தியாவில் நடந்ததில்லை. நாடு முழுவதும் இதனால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டம் பமுலபாடு என்ற இடத்தில் பிற்பகல் வாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் வி்மான நிலையம் ஹெலிகாப்டருடனான தொடர்பு 10.13 மணிக்கே இழந்து விட்டது. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியது உறுதி செய்யப்படவில்லை. இதுகுறித்து கர்னூல் எஸ்.பி. கூறுகையில், முதல்வர் குறித்து இதுவரை தகவல் இல்லை. பமுலபாடு, பனகரசெர்லா, கரிவனா உள்ளிட்ட பகுதிகளில் தேடி விட்டோம். ஆனால் முதல்வர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதம்கூர் தாலுகா முழுவதும் தீவிரமாக தேடி வருகிறோம். ஹெலிகாப்டர் இறங்கியதாக கூறப்படும் இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

கடத்தப்பட்டாரா...?

முதல்வரின் ஹெலிகாப்டர் மாயமான பகுதி நக்சலைட் ஆதிக்கம் இல்லாத பகுதி என்றாலும் கூட முதல்வருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

முதல்வரை நக்சலைட்டுகள் கடத்தியிருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

முதல்வரின் ஹெலிகாப்டர் மாயமான பகுதி நக்சலைட் ஆதிக்கம் இல்லாத பகுதி என்றாலும் கூட முதல்வருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

முதல்வரை நக்சலைட்டுகள் கடத்தியிருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X