For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜசேகர ரெட்டியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது - ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி

By Staff
Google Oneindia Tamil News

கடப்பா: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊரான புலிவெண்டுலாவில் முழு அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட்டது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து ராஜசேகர ரெட்டிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

ஹைதராபாத்தில் ரெட்டியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக லால் பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ராஜசேகர ரெட்டியின் உடல் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ரெட்டியின் சொந்த ஊரான புலிவெண்டுலாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

விமானப்படை ஹெலிகாப்டர் இறங்கிய இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். மக்கள் கடலில் தரையிறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து உடல் ராணுவ டிரக்குக்கு மாற்றப்பட்டது.

அதன் பின்னர் ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் ஷர்மிளா மற்றும் குடும்பத்தினர் அமர்ந்து கொள்ள இறுதி ஊர்வலம் மயானத்தை நோக்கி கிளம்பியது.

ரெட்டிக்குப் பிடித்த இடத்தில் உடல் அடக்கம்...

பல ஆயிரக்கணக்கான மக்கள் ராஜேசகர ரெட்டி அமரர் ஆனார் என்று உணர்ச்சி மேலிட்டு குரல் எழுப்பினர். மக்கள் கடலில் நீந்தியபடி ராணுவ டிரக் இறுதிச் சடங்கு நடைபெறும் இடமான இடுபுலபாயா என்ற இடத்தை அடைந்தது.

பின்னர் முழு அரசு மரியாதைகளுடன் ராஜசேகர ரெட்டியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இடுபுலபாயா என்ற இடம் ராஜசேகர ரெட்டிக்கு மிகவும் பிடித்தமான இடமாகும். வனம் சூழ்ந்த இந்தப் பகுதிக்கு, தனது ஊருக்கு வரும்போதெல்லாம் தவறாமல் வந்து ஓய்வெடுத்துச் செல்வார் ரெட்டி.

எனவேதான் தந்தைக்குப் பிடித்தமான இந்த இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என அவரது மகள் ஷர்மிளா குடும்பத்தினரிடம் தெரிவித்தாராம். இதையடுத்தே இடுபுலபாயாவில் உடல் அடக்கத்தை நடத்த குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

மேலும் இந்த இடம் ராஜசேகர ரெட்டியின் குடும்பத்திற்குச் சொந்தமானது. இந்த இடத்தில்தான் ரெட்டியின் பெற்றோரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், சோனியா, அத்வானி அஞ்சலி

முன்னதாக ஹைதராபாத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, கனிமொழி எம்.பி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டெல்லியிலிருந்து விரைந்த பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்திய ஆகியோர் பேகம்பேட்டில் உள்ள முதல்வரின் முகாம் இல்லத்திற்கு விரைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ரெட்டியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் ரெட்டியின் மனைவி விஜயலட்சுமி, மகன் ஜெகன்மோகன் ரெட்டி, மகள் ஷர்மிளா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

ஏராளமான மத்திய அமைச்சர்களும் ரெட்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வீராசாமி - கனிமொழி அஞ்சலி...

அதேபோல தமிழக அரசின் சார்பி்ல் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக ராஜ்யசபா எம்.பியுமான கனிமொழி ஆகியோர் இன்று ஹைதராபாத் சென்று ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அவர்களுடன் மத்திய அமைச்சர்கள் ராசா, நெப்போலியன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் இக்பால் சிங்கும் அஞ்சலி செலுத்தினார்.

ஆந்திர முதல்வர் என்.டி.திவாரி, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி, சுஷில் குமார் ஷிண்டே, பிரபுல் படேல், சல்மான் குர்ஷித், பிருத்விராஜ் சவான், வீரப்ப மொய்லி ஆகியோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நாயுடு - சிரஞ்சீவி அஞ்சலி...

முன்னதாக கர்னூலிலிருந்து கொண்டு வரப்பட்ட ரெட்டியின் உடல் அடங்கிய பெட்டி, அலங்கரிக்கப்பட்ட ராணுவ டிரக்கில் அவரது முகாம் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி , பாஜக தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் முதலில் அஞ்சலி செலுத்தியவர்களில் சிலர்.

சந்திரபாபு நாயுடு வுடன் அவரது மகன் லோகேஷும் உடன் வந்திருந்தார். நடிகை விஜயசாந்தி, சிபிஐ மாநிலச் செயலாளர் நாராயணா, தெலுங்கு திரையுலகினரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

ரெட்டியின் மகனும், கடப்பா காங்கிரஸ் எம்.பியுமான ஜெகன் மோகன் ரெட்டிக்கு அனைவரும் ஆறுதல் கூறினர்.

ஸ்டேடியத்தில் அத்வானி, வெங்கையா அஞ்சலி...

லால் பகதூர் ஸ்டேடியத்திற்குக் கொண்டு வரப்பட்ட ரெட்டியின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தினர்.

பாஜக தலைவர் அத்வானி, மூத்த தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோர் ஸ்டேடியத்திற்கு வருகை தந்து அங்கு வைக்கப்பட்டிருக்கும் ரெட்டி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X