For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திர முதல்வர் பதவி நெருக்கடி - சோனியா ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

Sonia Gandhi
டெல்லி: ஆந்திர முதல்வர் பதவியை ஜெகன் மோகன் ரெட்டிக்கு தர வேண்டும் என்று கோரி அவரது ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்டிருப்பதையடுத்து சோனியா காந்தி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் இப்போதைக்கு இதில் சோனியா முடிவெடுக்க மாட்டார், ரோசய்யாவே சில காலத்துக்கு முதல்வர் பதவியில் நீடிப்பார் எனத் தெரிகிறது.

ராஜசேகர ரெட்டி மறைந்து சில நாட்கள் கூட ஆகியிராத நிலையில், அங்கு முதல்வர் பதவிக்கு அடிதடி ஆரம்பித்து விட்டது. பெரிய அளவில் போட்டிகள் இல்லை என்றாலும் கூட ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்று பெரும் ஆதரவுக் குரல் எழுந்துள்ளது.

ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இடைக்கால முதல்வர் ரோசய்யாவே நீடிக்க வேண்டும் என கருதுகின்றனர்.

இரங்கல் கூட்டத்தில் இடையூறு...

இதுதொடர்பாக பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஹைதராபாத்தில் ராஜசேகர ரெட்டிக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டம் முதல்வர் ரோசய்யா தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் பெரும் அமளியில் ஈடுபட்டனர்.

கூட்டம் தொடங்கி இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மெளனம் அனுஷ்டிக்கப்பட்டது. அது முடிந்ததும், கூட்டத்தில் பங்கேற்ற ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஜெகன் மோகனை முதல்வராக்கு என்ற வாசகங்கள் அடங்கிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டு கோஷமிட ஆரம்பித்தனர்.

அவர்களை ரோசய்யா உள்ளிட்ட தலைவர்கள் அமைதிப்படுத்த முயன்றனர். ஆனால் முடியவில்ல. மேலும், மாநில காங்கிரஸ் தலைவரும் ராஜசேகர ரெட்டியின் எதிர் முகாமைச் சேர்ந்தவருமான ஸ்ரீனிவாஸ் பேச எழுந்தபோது அவரை பேச விடாமல் உட்காருமாறு கோஷமிட்டனர் ஜெகன் மோகன் ஆதரவாளர்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த முதல்வர் ரோசய்யா, ஸ்ரீனிவாஸ் மற்றும் பிற மூத்த தலைவர்கள் மேடையிலிருந்து இறங்கி வெளியேறி விட்டனர்.

இந்தத் தகவல் ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், அவரது முக்கிய ஆலோசகருமான கே.வி.பி. ராமச்சந்திரராவுக்குச் சென்றது. இதையடுத்து கூட்டம் நடந்த காங்கிரஸ் தலைமையகத்திற்கு அவர் விரைந்து வந்தார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்களை அமைதிப்படுத்திய அவர், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். கட்சித் தலைமை உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இப்படிச் செய்தால் அது ராஜசேகர ரெட்டியை அவமானப்படுத்துவது போலாகி விடும். கட்சித் தலைமை உங்களது உணர்வுகளை மதிக்கும், மக்களின் மனதையும் அது அறியும். எனவே பொறுமையாக இருக்க வேண்டும். இதுபோல் செயல்பட்டு கட்சித் தலைமைக்கும், மறைந்த ராஜசேகர ரெட்டிக்கும் அவதூறு ஏற்படுத்தி விடக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டார்.

இதையடுத்து கூட்டத்தினர் சற்று அமைதியடைந்தனர். பின்னர் கூட்டம் கலைந்து சென்றது.

சோனியாவிடம் மொய்லி விளக்கம்...

இதற்கிடையே, ஆந்திர நிலவரம் குறித்து கட்சித் தலைவர் சோனியா காந்தியை, ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லி சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினார்.

தற்போதைய நிலையில், அடுத்த ஆந்திர முதல்வர் யார் என்பதை முடிவு செய்ய அவசரம் காட்டப் போவதில்லை என்று சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

இன்னும் சில காலத்திற்கு ரோசய்யாவையே முதல்வர் பதவியில் வைத்திருக்க சோனியா முடிவு செய்துள்ளாராம்.

இன்னும் சில நாட்களில் ராஜசேகர ரெட்டியின் நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான ராஜ்யசபா எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவை டெல்லிக்கு வரவழைத்து அவருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளார்.

மேலும் விரைவில் வீரப்ப மொய்லி ஹைதராபாத் சென்று அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவாளர்கள் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

சோனியா உத்தரவால் பணிந்த அமைச்சர்கள்...

முன்னதாக நேற்று நடந்த மறு பதவியேற்பின்போது பல ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவு அமைச்சர்கள் வர முடியாது என்று பிடிவாதமாக இருந்துள்ளனர். ஆனால் ஒரு அமைச்சர் பாக்கி இல்லாமல் அனைவரும் பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று சோனியாவிடமிருந்து ஆந்திர காங்கிரஸ் கட்சிக்கு கண்டிப்பான உத்தரவு வந்தது. இதையடுத்தே அனைத்து அமைச்சர்களும் மறு பதவிப்பிரமாணத்தில் கலந்து கொண்டார்களாம்.

மேலும் அடுத்த முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி நிதானத்துடனும், கண்டிப்புடனும் நடந்து கொள்ள முடிவெடுத்திருப்பதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியும், தனது ஆதரவாளர்களை அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

நேற்றுதான் தனது தந்தையின் இறுதிச் சடங்குக் காரியங்களை முடித்து விட்டு ஜெகன் மோகன் ரெட்டி ஹைதராபாத் வந்தார்.

அதன் பின்னர் அவர் நான்கு பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

லட்சோப லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் மனதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புரிந்து கொள்வார். எனவே முதல்வர் பதவி குறித்த முடிவை அவர்தான் எடுப்பார். அதுவரை அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

ஒரு கட்சித் தொண்டராக, நாம் அனைவரும் கட்சிக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் நடந்து கொள்ளாமல் கட்சித் தலைமைக்கு தொடர்ந்து விசுவாசமானவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜசேகர ரெட்டியின் திறமையை முதலில் இந்திரா காந்தியும், பின்னர் ராஜீவ் காந்தியும் மதித்து அங்கீகரித்தனர். அதேபோல கட்சித் தலைவர் சோனியா காந்தியும் ராஜசகேர ரெட்டி மீது மிகுந்த அபிமானம் வைத்திருந்தார்.

எனவே ராஜசேகர ரெட்டி மீது மதிப்பு வைத்திருக்கும் அனைவரும், கட்சித் தலைமைக்கு விரோதமாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மீடியாக்களில் எந்த செய்தியையும் அளிக்கக் கூடாது என்று கோரியுள்ளார்.

மத்திய அமைச்சர் பதவி...

இதற்கிடையே, ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஒரு வேளை முதல்வர் பதவியை தருவதில்லை என்ற முடிவை காங்கிரஸ் எடுத்தால், அதற்குப் பதில் அவரை மத்திய கேபினட் அமைச்சராக்கும் முடிவை எடுக்கக் கூடும் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X