For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து-சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வழக்கை சிபிஐக்கு மாற்றி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ரெட்டி ஹெலிகாப்டர் விபத்து குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு ஏற்கனவே விசாரணை மேற்கொண்டுள்ளது. ஆந்திர மாநில சிஐடி போலீஸாரும் தனியான ஒரு விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், ரெட்டி விபத்தை சிபிஐ விசாரணைக்கு அனுப்ப ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வர் ராஜசேகர ரெட்டி உள்ளிட்ட ஐவர் பலியான வழக்கை சிபிஐ விசாரிக்கும்.

மேலும், இதுதொடர்பாக அனைத்து கோணங்களிலும் ஆராய்வதற்காக 2 பேர் கொண்ட நிபுணர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

முதல்வர் கே.ரோசய்யா உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்பு கொண்டு இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதை உள்துறை அமைச்சரும் உடனடியாக ஏற்றுக் கொண்டார். மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் முதல்வரைத் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதேசமயம், மாநில சிஐடி போலீஸார் நடத்தி வரும் விசாரணையும் தொடர்ந்து நடைபெறும். ஹெலிகாப்டர் விபத்து குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், இதை விரிவான முறையில் விசாரித்தால்தான் உண்மை தெளிவாகும் என்றார் சபீதா இந்திரா ரெட்டி.

ஆந்திர மாநில கூடுதல் டிஜிபி சிவநாராயணா தலைமையிலான சிஐடி போலீஸ் குழு தனியாக ஒரு விசாரணையை மேற்கொண்டுள்ளது. ஹெலிகாப்டர் விபத்துக்கு சதி வேலை காரணமா என்பதை அறிவதே இந்த விசாரணையின் நோக்கம்.

ஹெலிகாப்டர் விபத்து குறித்து ஆத்மகூர் காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பெயரில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய ருத்ரகொடூர் மலைப் பகுதி இந்த காவல் நிலையத்திற்கு உட்பட்டது.

விசாரணைக்காக தற்போது கூடுதல் டிஜிபி சிவநாராயணா கர்னூல் விரைந்துள்ளார். அங்கு மாவட்ட மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், கூடுதல் எஸ்.பி. பாலாஜி ராவ் தலைமையில் ஒரு தனிப்படையையும் அமைத்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தப் போலீஸ் படை, டிஜிசிஏ விசாரணைக் குழுவுடன் சேர்ந்து விபத்து நடந்த பகுதியை ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது.

விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவது பெரும் சவாலனதாக இருக்கும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் சிக்கி ஹெலிகாப்டர் முழுமையாக எரிந்து போய் விட்டது. விபத்துக்குள்ளான அனைவரும் உயிரிழந்து போய் விட்டனர்.

சதி வேலையா...

இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்து சதி வேலையா என்ற புதிய கோணத்தில் சிஐடி போலீஸார் தற்போது விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

சிஐடி போலீஸாருக்கு இந்த சந்தேகம் வந்துள்ளதற்கு முக்கிய காரணம் - புதிய ஹெலிகாப்டர் தயார் நிலையில் இருந்தும், அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகளை சந்தித்து வந்த ஹெலிகாப்டரை முதல்வரின் பயணத்திற்கு உபயோகப்படுத்தியது ஏன் என்பதே.

ஏடிசி தவறு செய்ததா...

மேலும், ஹைதராபாத் மற்றும் சென்னை விமான கட்டுப்பாட்டு மையங்களின் (ஏடிசி) செயல்பாடுகளில் தவறு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும், ஹெலிகாப்டர் பறக்கத் தகுதியுடன் உள்ளதா என்பதற்கான அனைத்து சோதனைகளும் முறையாக செய்யப்பட்டனவா என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

மேலும், நல்லமலைக் காட்டுப் பகுதியில், கடும் மழை மற்றும் மோசமான வானிலை நிலவி வந்த நிலையில், ஹைதராபாத்திலிருந்து சித்தூர் செல்ல ஹெலிகாப்டருக்கு அனுமதி அளிக்கப்பட்டது ஏன் என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, வழக்கமான பாதையிலிருந்து கிட்டத்தட்ட 18 கிலோமீட்டர் தொலைவுக்கு ஹெலிகாப்டர் திசை மாறி பறந்ததை ஹைதராபாத் மற்றும் சென்னை விமானக் கட்டுப்பாட்டு மைய ஊழியர்கள் கவனிக்காதது ஏன் என்பது குறித்தும் விசாரிக்கப்படவுள்ளது.

ஹெலிகாப்டர் மாயமானவுடன் அதைக் கண்காணிக்கும் பொறுப்பை சென்னை ஏடிசி-யிடம் ஒப்படைத்து விட்டதாக ஹைதராபாத் ஏடிசி தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை ஏடிசி, ஹெலிகாப்டரின் பாதை குறித்து கண்காணித்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

கடைசி நேரத்தில் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரின் விமானி, சென்னை ஏடிசியை தொடர்பு கொள்ள முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேப்டன் இர்ஷாத் அகமது தலைமையிலான டிஜிசி குழுவினர், கர்னூல் மாவட்ட அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். விசாரணையை சிறந்த முறையில் மேற்கொள்ளத் தேவையான ஒத்துழைப்பு குறித்து அவர்கள் விவாதித்தனர்.

ஐந்து பேரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை அவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐவரில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது...

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, இறந்த ஐவரில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் மாரடைப்பு யாருக்கு ஏற்பட்டது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

தற்போது டிஜிசிஏ குழுவினர் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் எந்தப் பாதையில் சென்றதோ அதே பாதையில் ஹெலிகாப்டரில் சென்று பார்க்க திட்டமிட்டுள்ளனர். அப்போதுதான் ரெட்டி பயணித்த ஹெலிகாப்டர் எப்படி விபத்தை சந்தித்திருக்கலாம் என்பதை ஊகிக்க முடியும் என்பதற்காக இந்த சோதனை நடத்தப்படவுள்ளதாம்.

மேலும், ஹெலிகாப்டரில் விபத்து ஏற்பட்டால் உடனடியாக சிக்னல்களைக் கொடுக்கக் கூடிய எமர்ஜென்சி லொகேட்டார் டிரான்மிஸ்ட்டர் ஏன் செயலிழந்தது என்பதையும் விசாரிக்கவுள்ளனர்.

ரெட்டி பயணித்த ஹெலிகாப்டரி்ல் இருந்த இந்த டிரான்ஸ்மிட்டர் கடைசி வரை சிக்னலைத் தரவில்லை. இதனால் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்காது என்று டிஜிசிஏ நம்பிக்கையுடன் இருந்தது என்பது நினைவிருக்கலாம்.

எல்லாவற்றுக்கும் முக்கியமாக, ஹெலிகாப்டர் காணாமல் போன விஷயத்தை மாநில அரசு உடனடியாக உரியவர்களுக்குத் தெரிவிக்காமல் கால தாமதம் செய்து விட்டதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விபத்து நடந்த அன்று காலை 9.35 மணிக்கு ஹெலிகாப்டர் காணாமல் போயுள்ளது. ஆனால் கிட்டத்தட்ட பிற்பகல் வாக்கில்தான் அதுகுறித்து ஆந்திர அரசு தகவலை வெளியிட்டது. அதுவரை முதல்வர் பத்திரமாக வேறு இடத்தில் இறங்கி விட்டார் என்றுதான் ஆந்திர மாநில அரசும், முதல்வர் அலுவலகமும் தெரிவித்து வந்தன என்பது நினைவிருக்கலாம்.

ரெட்டி மனைவியின் குமுறல்...

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம், ரெட்டியின் மனைவி விஜயலட்சுமிசயும் குறைபட்டுக் கூறியுள்ளார். துக்கம் விசாரிக்க இரு தலைவர்களும் வந்தபோது எனது கணவரின் உடலைக் கண்டுபிடிக்க 24 மணி நேரமாகியுள்ளது. இது என்ன அரசு நிர்வாகம் என்று குமுறியுள்ளார் விஜயலட்சுமி.

உண்மையில் விபத்து நடந்த அன்று பிற்பகல் 1 மணிக்கு மேல்தான் ஆந்திர அரசு சற்று சுதாரித்து நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. அதுவும் கூட, ரெட்டியின் நெருங்கிய நண்பரான டாக்டர் கேவிபி ராமச்சந்திர ராவ் தலைமைச் செயலகத்திற்கு விரைந்து வந்து அனைத்து நடவடிக்கைகளையும் அவரே நேரடியாக முடுக்கி விட்டார். மத்திய அரசுக்கும் அவர்தான் தகவல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X