For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பண்பாட்டை கடைபிடிக்கும் கட்சி அதிமுக- ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்ள அதிமுகவின் மீது பழிபோடுகிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

4 மாதங்களாகத் தொடர்ந்து இன்னும் கொட நாடு எஸ்டேட்டிலேயே ஓய்வெடுத்து வரும் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

கடந்த 7ம் தேதி நடைபெற்ற திருமண விழாவில் கருணாநிதி அரசியல் பண்பாடு குறித்துப் பேசியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, எம்ஜிஆர் ஆகியோர் கடைபிடித்து வந்த அரசியல் பண்பாட்டை, அரசியல் நாகரீகத்தை, அரசியல் நெறியை சிதைத்தவர் கருணாநிதி என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த அளவுக்கு மாற்றுக் கட்சியினரை அவமதிக்கும் பண்பாட்டினை கொண்டுள்ள கருணாநிதி, அரசியல் கட்சிகள் பொதுவாக பின்பற்ற வேண்டிய நாகரீகத்தை திமுக ஏற்கனவே செயல்படுத்தி வருவதாகவும், அதற்குரிய மரியாதை எதிர்க் கட்சியிடம் கிடைக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

திருமண விழாவில் மேலும் பேசிய கருணாநிதி, '2001ம் ஆண்டில் தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது, பதவி ஏற்பு விழாவுக்கு எங்களுக்கும் அழைப்பு வந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக அன்பழகன், மேயராக ஸ்டாலின் இருந்தனர். இருவரும் அழைப்பை மதித்து சென்றனர். விழா நடந்த இடம் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், 17வது வரிசையில் அன்பழகனுக்கும், அதற்கு அடுத்த வரிசையில் ஸ்டாலினுக்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பதவி ஏற்பு விழாவில், அப்போதைய மேயர் மு.க. ஸ்டாலினுக்கு முதல் வரிசையிலும், அப்போதைய எதிர்க்கட்சித்தலைவர் அன்பழகனுக்கு நான்காவது வரிசையிலும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டதையும், எதிர்க்கட்சித் தலைவர் நான்காவது வரிசையில் இருந்ததால் ஸ்டாலினும் நான்காவது வரிசையில் உட்கார நேரிட்டதையும் கருணாநிதியே அப்போது பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

ஆனால், 7.9.2009 அன்று நடைபெற்ற திருமண விழாவிலே பேசும்போது 17வது வரிசையில் அன்பழகனுக்கும், அதற்கு அடுத்த 18-வது வரிசையில் ஸ்டாலினுக்கும் இடம் ஒதுக்கப்பட்டதாகக் கருணாநிதி கூறி இருக்கிறார். இது உண்மைக்குப் புறம்பானது.

மேலும், பதவி ஏற்பு விழாவுக்கு வந்தவர்களை வரவேற்கக்கூட ஆள் இல்லை என்று கூறியிருக்கிறார். இதுவும் முற்றிலும் உண்மைக்கு மாறானது.

பதவியேற்பு விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் உரிய மரியாதையுடன் வரவேற்கப்பட்டு, அழைத்து வரப்பட்டு, அமர வைக்கப்பட்டனர்.

மேலும் கருணாநிதி பேசுகையில், 'பல பிரச்சனைகளுக்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கு அழைத்தபோது, அழைப்பை புறக்கணித்தவர்கள் யார்? புறக்கணித்ததுடன், கூட்டத்தை கபட நாடகம் என்றும் கூறினர்" என்றும் கூறியிருக்கிறார். இதுவும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

19.2.2007 மற்றும் 15.4.2007 அன்று நடைபெற்ற காவேரி நதி நீர் பிரச்சனை தொடர்பான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டங்களிலும்; 22.5.2007 அன்று நடைபெற்ற விமான நிலைய விரிவாக்கம் குறித்த சட்டமன்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்திலும்; அருந்ததியருக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து 23.1.2008 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அதிமுக பங்கேற்று, தனது கருத்துகளை விரிவாக எடுத்துரைத்ததை வசதியாக மறைத்துவிட்டுப் பேசியுள்ளார் கருணாநிதி.

தன்னை நல்லவர் போல் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அதிமுகவின் மீது பழிபோட நினைப்பதும், குற்றம சுமத்த நினைப்பதும் கண்டனத்திற்குரியது.

மாற்றுக் கட்சியினரை மதிக்கும் பண்பையும், தோழமையையும், அரசியல் நாகரீகத்தையும், பண்பாட்டையும் அதிமுக கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து கடைபிடிக்கும் என்பதை கருணாநிதிக்கு இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X