For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை தாராவியில் உள்ள 7000 குடிசைகள் ரூ. 700 கோடிக்கு விற்பனை

By Staff
Google Oneindia Tamil News

Dharavi slums
மும்பை: ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவி, ரூ. 15,000 கோடியில் புதுப்பிக்கப்படவுள்ளது. இதையடுத்து இங்குள்ள குடிசைகளை பலரும் போட்டி போட்டுக் கொண்டு பெரும் பணம் கொடுத்து வாங்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை 7000 குடிசைகள் ரூ. 700 கோடி அளவுக்கு விற்பனையாகியுள்ளனவாம்.

சமீபத்தில் மும்பையின் கபே பரேடில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ரூ. 25 கோடிக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், தாராவிப் பகுதி குடிசைகள் திடீரென பெரும் விலைக்கு விற்க ஆரம்பித்துள்ளன.

இதற்குக் காரணம் - ரூ. 15,000 கோடியில் தாராவிப் பகுதி நவீனமாகவுள்ளதே.

590 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள தாராவிப் பகுதியை மேம்படுத்தி அதி நவீனமாக மாற்ற புனேவைச் சேர்ந்த மாஷால் என்ற என்.ஜி.ஓ. நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து இங்குள்ள குடிசைகளை வாங்க பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுவரை 7000 குடிசைகள் விற்றுள்ளனவாம். ரூ. 700 கோடி என்ற பெரும் தொகைக்கு இவை விற்பனையாகியுள்ளன.

ஒவ்வொரு குடிசையும் 120 முதல் 200 சதுர அடி அளவே உள்ளது. இந்த அளவுக்கு உள்ள குடிசைகள் ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை விலை போகின்றனவாம்.

அதுவே 150 சதுர அடி உள்ள கடைகளாக இருந்தால் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை விலை போகின்றனவாம்.

குடிசைகளை வாங்குவோரில் பெரும்பாலானோர் தனி நபர்களாகவே உள்ளனர். இருப்பினும் தனி நபர்கள் என்ற போர்வையில் சில ரியல் எஸ்டேட் புள்ளிகளும் கூட குடிசைகளை வாங்கிப் போட்டு வருகின்றனராம்.

ஆனால் இப்படி குடிசைகளை வாங்குவோருக்கு எந்தப் பலனும் இருக்காது என்று கூறப்படுகிறது. காரணம், உண்மையான குடிசைவாசிகளுக்கு ஏற்கனவே புகைப்பட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் உள்ள நபர்களுக்குத்தான் குடிசைப் பகுதி நவீனமயமாக்கலில் இடம் வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே தாராவி குடிசை மேம்பாட்டுத் திட்டம் இன்னொரு என்ரான் திட்டமாக மாறக் கூடிய அபாயம் இருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

தாராவி திட்டத்தை ஏற்கனவே அரசு 2 முறை தள்ளிப் போட்டுள்ளது. இந்த நிலையில், மறுபடியும் எப்போது திட்டம் அமலுக்கு வரும் என்பது தெரியாத நிலை உள்ளது. இந்தச் சூழ்நிலையி்ல பெரும் விலைக்கு பலர் குடிசைகளை வாங்கிப் போட ஆரம்பித்திருப்பதால் பெரும் குழப்ப நிலை காணப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X