For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிருந்தா தடுக்கப்பட்ட விவகாரம்-விசாரணைக்கு உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: உத்தபுரம் செல்ல முயன்ற பிருந்தா காரத் போலீசாரால் தடுக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த விஷயத்தில் நானே தலையிட்டு காரத் உத்தபுரம் செல்ல அனுமதி அளித்த பிறகும் அதை அந்தக் கட்சி அரசியலாக்கியது கண்டனத்துக்குரியது என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை:

கேள்வி:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பிருந்தா காரத் உத்தபுரம் சென்றபோது மதுரையில் கைது செய்யப்பட்டதாகவும், பிறகு விடுவிக்கப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: 12ம் தேதி காலை 8 மணிக்கு மதுரை மார்க்சிஸ்ட் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் எனக்கு டெலிபோன் செய்து, பிருந்தா காரத் மதுரைக்கு அருகில் உள்ள உத்தபுரம் செல்வதற்காக முனைந்தபோது வழியில் போலீசாரால் தடுக்கப்பட்டிருப்பதாகவும், உடனே அந்த தடையை நீக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதுபோல பலமுறை பல்வேறு பிரச்சனைகளுக்காக மோகன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதுண்டு. நானும் உடனடியாக அந்த பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு கண்டதும் உண்டு. அதற்காக அவர் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.

அதுபோல பிருந்தா காரத் பயணத்தில் போலீசாரால் ஏற்பட்ட தடங்கல் குறித்து என்னிடத்தில் அவர் சொன்னவுடன் நான் அவரிடம் உத்தபுரத்தில் இரு வகுப்பினரிடையே கசப்புகள் இருக்கிற காரணத்தால் போலீசார் முன்கூட்டி அந்த அம்மையாரை எச்சரித்திருக்கக் கூடும் என்றும், நான் அதனைக் கவனிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டு, அடுத்த ஐந்தாவது நிமிடமே மதுரை மாவட்ட கலெக்டருக்கு அதனைத் தெரிவித்து, அந்த அம்மையார் உத்தபுரம் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும், மேலும் அந்த அம்மையாருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும் சொன்னேன்.

சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல், மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து, மதுரை மாவட்ட கலெக்டரைத் தொடர்பு கொண்டு என்ன செய்தீர்கள் என்று விசாரித்த போது, நான் கூறியவாறே அம்மையாருடைய பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்துவிட்டதாகவும், போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

இவ்வளவு நடந்திருக்கும்போது, அதை அரசியலாக்கி மோகன் எனக்கு தொலைபேசி மூலமாக செய்தி சொன்னதையோ, நான் தலையிட்டு அதை சரிப்படுத்தியதையோ வேண்டுமென்றே மறைத்துவிட்டு, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பத்திரிகைகளில் அறிக்கை வெளியிட்டிருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி.

அதற்கு உரிய மறுப்பு விளக்கத்தை மதுரை மாவட்ட கலெக்டர் தனது அறிக்கை மூலம் கொடுத்திருக்கின்ற காரணத்தால் நான் அதுபற்றி மேலும் விளக்கிட விரும்பவில்லை. பொதுவாக மோகனைப் போன்றவர்கள், எம்பி, எம்எல்ஏ போன்ற பதவிகளில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னை நேரடியாக தொடர்பு கொண்டு இதுபோன்ற பிரச்சனைகளை சொல்லும்போது, அதனை விசாரித்து உடனடியாக சில நிமிட நேரத்திற்குள்ளாக நான் நடவடிக்கை எடுத்திருக்கிறேன். எடுத்த நடவடிக்கை பற்றி அவர்களுக்கு விளக்கியும் இருக்கிறேன்.

ஆனால் இந்த செய்தியை சிலர் அரசியலாக்கி விட்டார்கள். எனினும் அவர்கள் கட்சி தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் என்ன நடந்தது என்ற உண்மை தெரியவேண்டும் என்பதற்காக இதைத் தெரிவிக்கிறேன்.

கேள்வி: பிருந்தா காரத் எம்.பிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு கொடுத்த மைக்' அனுமதியை திடீரென ரத்து செய்திருப்பது தமிழக முதல்வருக்கு தெரியாமல் நடந்திருக்க முடியாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: இந்த விவகாரத்தில் பிருந்தா காரத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரியாது; ஒலிபெருக்கி அனுமதி கொடுத்ததும் தெரியாது; அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டிருந்தால், அதைப்பற்றியும் தெரியாது. ஒரு கட்சித்தலைவர் ஒரு நிகழ்ச்சியிலே கலந்து கொள்ள ஒலிபெருக்கி அனுமதி கொடுப்பதும், அதனை ரத்து செய்வதும் முதல்வக் கேட்டுக் கொண்டுதான் நடக்கின்றது என்று எண்ண தேவையில்லை. மாவட்ட அளவில் அங்குள்ள சட்டம், ஒழுங்கு நிலைமைகளைக் கருத்திலே கொண்டு ஆங்காங்குள்ள அதிகாரிகள் எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கெல்லாம், முதல்வருக்கு தெரியாமல் நடந்திருக்காது என்று வரதராஜனை போன்ற மூத்த அரசியல்வாதிகள் இதுபோன்று உண்மைக்கு மாறான தகவலை தெரிவிப்பது அவர்களுடைய மனசாட்சியை உறுத்தக் கூடியவையாகும்.

கேள்வி: உத்தபுரம் நிகழ்ச்சியில் பிருந்தா காரத் கைது செய்யப்பட்டதாகவும், இன்னும் பல சம்பவங்கள் குறித்தும் தமிழக அரசு விசாரணை செய்து, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்துகிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறாரே?

பதில்: மார்க்சிஸ்ட் கட்சியின் அறிக்கையை அலட்சியப்படுத்தாமல், அந்த விசாரணைக்கான ஏற்பாடுகளும் தொடங்கும்.

வேளாண்மை மன்ற சட்டம்

கேள்வி: கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது குறித்து- இப்போது இரண்டு மாதங்கள் கழித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டு, பாரம்பரிய விவசாய முறை தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும், அந்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது, அதிமுக சார்பில் அந்த தீர்மானத்திற்கு திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆனால் தங்கள் அறிக்கையில் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்திருப்பது தவறு என்றும் சொல்லியிருக்கிறாரே?

பதில்: தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம் இந்த ஆண்டு ஜூலைத் திங்களில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டத்திற்கு திருத்தங்கள் கொடுக்கப்பட்டன என்பது உண்மை. அப்படி திருத்தங்கள் தரப்பட்டதை நான் மறுக்கவும் இல்லை. அண்மையில் சில நாட்களுக்கு முன்புதான் அந்தச் சட்டத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நண்பர் சோலை போன்ற சில மூத்த பத்திரிகையாளர்களும், ஒரு சில எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து எழுதியிருந்தார்கள்.

கெளரவம் பார்க்காமல்...

அந்தச் செய்தி ஏடுகளில் வெளிவந்ததும், உடனடியாக அந்தத் துறையின் அமைச்சரையும், அரசின் மூத்த அதிகாரிகளையும் கலந்து பேசி, பாரம்பரிய விவசாயம் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுள்ள கழக அரசு விவசாயப் பெருங்குடி மக்களின் எண்ணங்களுக்கும், பத்திரிகையாளர்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்திடும் வகையில் தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம்'' அறிவிக்கை செய்யப்படாமல் மேல் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என்று அறிவித்தேன்.

எதிர்க்கட்சிகள் சார்பிலும், பத்திரிகைகள் சார்பிலும் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டதும், அரசு அதனையேற்று நடவடிக்கை எடுத்துள்ளது. கெளரவப் பிரச்சனை பார்த்து, அரசின் சார்பில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டால், பட்டதுதான், எதிர்ப்பைப் பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்காமல் அதனை விலக்கிக் கொள்ள முதல் நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X