For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகள் இணைப்பை ஆதரித்தவர் இந்திரா: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தேசிய அளவில் நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்தை ஆதரித்தவர் இந்திரா காந்தி என்றும், அதை அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் ஏற்றுக் கொண்டுள்ளன என்றும் ராகுல் காந்திக்கு முதல்வர் கருணாநிதி பதில் தந்துள்ளார்.

நதிகள் இணைப்பால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி கூறியுள்ளார். இந் நிலையில் முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கை விவரம்:

கேள்வி: நதிகள் இணைப்பு பற்றி தமிழகத்திற்கு வருகை தந்த ராகுல் காந்தி எதிர்ப்பான கருத்து தெரிவித்திருப்பதாகக் கூறி, அதனை ஏடுகளில் பெரிதுபடுத்தி செய்தியாக வெளியிட்டு வருகிறார்களே?

பதில்: தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்ற கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க 1980ம் ஆண்டிலேயே மத்திய அரசு ஒரு தேசிய தொலைநோக்கு திட்டத்தை உருவாக்கியது.

1. இமாலய நதிகளின் இணைப்பு மேம்பாடு திட்டம்.
2. தீபகற்ப நதிகளின் இணைப்பு மேம்பாடு திட்டம்.

இந்த இரண்டு தொலைநோக்கு திட்டங்கள் குறித்து பல்வேறு நீரியல் நிபுணர்கள், நில ஆராய்ச்சி வல்லுநர்கள், மின்துறை அறிஞர்கள் ஆகியோர் இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக விவாதம் நடத்தி, இத்திட்டம் சாத்தியக் கூறானது என்று அறிவித்த கருத்தின் அடிப்படையில் இதனை செயலாக்க வேண்டும் என்பதற்காக மறைந்த பிரதமர் இந்திரா காந்தி 1982ம் ஆண்டு தேசிய நீர் மேம்பாட்டு முகமை' என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார். இந்த முகமைக்கு முதல்கட்டமாக தீபகற்ப நதிகளின் இணைப்பு குறித்து ஆய்வு செய்யும் பணி அளிக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் உள்ள தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தரத்தீர்வு காணும் வகையில் தேசிய அளவில் நதிகள் இணைக்கப்பட வேண்டும் எனும் கருத்து இப்போது நாடு முழுவதும் எழுந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில், நதிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விரிவான ஒரு மதிப்பீடு திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொள்ளும். தென்னக நதிகளில் இருந்து இது தொடங்கும். இந்த மதிப்பீடு முழுக்க முழுக்க ஆலோசனை முறையில் மேற்கொள்ளப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

29.5.2007 அன்று நடைபெற்ற 53வது தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் என்ற முறையில் நான் பேசும்போது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.

இதை மத்திய அரசு அன்றையதினம் ஏற்றுக் கொண்டதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளின் இணைப்புத் திட்டத்திற்கு விரைவுபடுத்தப்பட்ட பாசனப் பயன்கள் திட்டத்தின் கீழ் நிதி உதவி அளிக்கப்படும்'' என்று அந்த கூட்டத்திலேயே மத்திய அரசு தீர்மானமும் நிறைவேற்றியது.

அதற்குப் பிறகு 19.12.2007 அன்று டெல்லியில் நடைபெற்ற, 54வது தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் நான் பேசும்போது, மாநிலத்திற்குள் பாயும் ஆறுகள் இணைக்கப்படுவதை பொறுத்தவரை தேசிய வளர்ச்சிக் குழுவின் 53வது கூட்டத்தில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்றும் கோரினேன்.

இந்திய அளவில் நதிகளை மாநிலங்களுக்கு மாநிலம் கடந்து செல்கிற அளவிற்கு நதிகளை இணைப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும் என்பதால் இப்போது மாநில அளவிலே உள்ள நதிகளை முதல்கட்டமாக இணைக்கின்ற முயற்சியிலே ஈடுபட்டுள்ளோம்.

அதன் முதல்கட்டமாகத்தான் வெள்ள காலங்களில் காவிரி ஆற்றில் பெருகும் உபரி நீரை, வறண்ட மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதற்கான காவிரி- அக்னியாறு- கோரையாறு - பாம்பாறு- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தின் முதல்கட்டமாக, காவிரி ஆற்றின் குறுக்கே கட்டளைப் பகுதியில் கதவணை அமைக்கும் திட்டம் ரூ. 189 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதுபோலவே, தாமிரபரணி ஆற்றின் உபரிநீரை கன்னடியன் கால்வாயிலிருந்து வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு திருப்புதல் மற்றும் தாமிரபரணி ஆற்றுடன் கருமேனியாறு மற்றும் நம்பியாறு ஆகியவைகளை இணைக்கும் திட்டம் ஒன்றும் ரூ. 369 கோடியில் அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X