For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடிகர், நடிகையரை நாங்கள் இழுக்கவில்லை - தங்கபாலு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: இப்போதைக்கு அரசியல் கிடையாது என்று ரஜினிகாந்த்தும், விஜய்யும் திட்டவட்டமாக கூறி விட்டதால் காங்கிரஸ் ஏமாற்றமடைந்துள்ள நிலையில், நாங்கள் எந்த நடிகர், நடிகையரையும் காங்கிரஸுக்கு இழுக்கவில்லை என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு.

தமிழக இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை தொடர்பான கூட்டம் நேற்று மதுரையில் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில்,

காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தியின் மூன்று நாள் சுற்றுப்பயணத்தை அடுத்து இளைஞர் காங்கிரஸில் புதிய உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி சாராத பலரும் காங்கிரஸில் சேர்ந்து வருகின்றனர். இது காங்கிரஸில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா நடிகர், நடிகைகள் யாரையும் நாங்கள் இழுக்கவில்லை. சோனியா, ராகுல் காந்தி தலைமையை ஏற்று வரக்கூடியவர்களை வரவேற்போம்.

நதிநீர் பிரச்சினை குறித்து ராகுல்காந்தி சொன்னது அவரது சொந்த கருத்தாகும். இருப்பினும் அது சரியானது தான். தமிழ்நாடு, தமிழகத்துக்கு கேரளா, கர்நாடக மாநிலங்கள் இடையே நதிநீர் பிரச்சினை உள்ளது. இது தொடர்பாக வழக்குகள் நீதிமன்றத்தில் இருப்பதால் இப்பிரச்சினை வேண்டாம் என ராகுல்காந்தி கருதுகிறார்.

நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தவும், புதிய திட்டங்களை செய்திடவும் மத்திய அரசு கடும் முயற்சி செய்து வருகிறது.

முல்லைப்பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் நில அளவு ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. பூர்வாங்க ஆய்வு நடத்த ஒவ்வொரு மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது.

நெடுமாறன் உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்...

நெடுமாறன் இலங்கை தமிழர், முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றி பேசிவருவது உண்மைக்கு புறம்பானது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை குறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் நலனையும், தமிழக விவசாயிகளின் நலனையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையிலும் மத்திய அரசும், காங்கிரஸூம் இறங்காது. இந்த கொள்கையில் தமிழக அரசும், தமிழக காங்கிரஸூம் ஒரே நிலையில் உள்ளது. கேரளா அணை கட்டும் திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு அளிக்கவில்லை.

இந்த பிரச்சினை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிடம் பேசி இருக்கிறேன்.

ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் வனத்துறை பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக சில கண்டிப்பான பாதுகாப்பு அம்சங்களுடன் வரையறுக்கப்பட்ட சர்வே மட்டும் நடத்த கேரளாவுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

தமிழர்களுக்காக உயிரை அர்ப்பணித்த காங்கிரஸ்...

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இலங்கை தமிழ் மக்களுக்காக உயிரை அர்ப்பணித்த இயக்கம் காங்கிரஸ். இந்திராகாந்தி முதல் இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறோம்.

இலங்கை தமிழர்களுக்கு சமூக பாதுகாப்புடன் கூடிய உரிமையை பெற்றுத்தரவே முயன்று வருகிறோம். இது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை அரசுடன் 4 முறை பேசி உள்ளார்.

அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு கிடைக்கும். இது குறித்து நாளை தமிழக காங்கிரஸ் எம்பிக்கள், திமுக எம்பிக்கள் மற்றும் தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் ஆகியோர் டெல்லியில் பிரதமர் மன்மோகன், சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து பேசவிருக்கிறோம்.

இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணி நடந்து வருகிறது. அங்குள்ள தமிழர்களுக்கு குடியிருப்பு, சாலைவசதி, கல்விப் பணி அமைத்துத் தர வேண்டும் என்று மத்திய அரசு, இலங்கை அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

சில அரசியல் கட்சிகள், வியாபாரிகள் காங்கிரஸ்க்கு எதிராக திட்டமிட்டு சதி செய்கிறார்கள். இது ஒரு போதும் எடுபடாது என்றார் தங்கபாலு.

போராட்டம் நடத்தப்படும்-சுதர்சனம்...

தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவர் சுதர்சனம் பேசுகையில்,

பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீரை தேக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை கேரள அரசு மதிக்கவில்லை. 132 அடிக்குமேல் தேக்கினால் கேரள மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என கேரள அரசு கூறுகிறது.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மதித்து கேரள அரசு செயல்படாவிட்டால் தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X