For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிணற்றுத் தவளை போல பேசுகிறார் ஜெ. - வீராசாமி

By Staff
Google Oneindia Tamil News

Arcot Veerasamy
சென்னை: கிணற்றுக்குள் இருக்கும் தவளை வெளி உலகத்திற்கு வரமுடியாத நிலையில், உலகமே இருண்டுவிட்டது என்று கூறிக்கொள்வதைப் போல, அம்மையாரின் கூற்று உள்ளது. உலகத் தமிழர்கள் வேதனையிலே இருக்கிறார்கள் என்றால், கோடநாட்டில் மாதக்கணக்கிலே ஓய்வெடுத்துக் கொண்டு உல்லாசமாக காலத்தை கழித்தால், உலகத்தமிழர்களின் வேதனை போய்விடுமா? என்று ஜெயலலிதாவைக் கண்டித்துள்ளார் மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

உலகத்தமிழ் மாநாடு நடத்துவதால், தமிழ் மொழிக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை என்று கூறியுள்ள ஜெயலலிதாவுக்குப் பதிலடி கொடுத்து அறிக்கை விட்டுள்ளார் ஆற்காடு வீராசாமி.

அவரது அறிக்கை:

தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்று சொல்லி கொண்டிருப்பவர், மாத கணக்கில் கோடை வாசஸ்தலத்தில் சென்று ஓய்வெடுத்துக்கொண்டு, அன்றாடம் விடுகின்ற அறிக்கைகள் மூலமாகவே தன்னை உலகத்திற்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.

தமிழகத்தில் எந்த பிரச்சினை என்றாலும், அதிலே மூக்கை நுழைக்காமல் இவர் இருப்பதில்லை. அந்த பிரச்சினை தனக்கு புரிகிறதோ இல்லையோ, ஆளுங்கட்சியையும், தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், அவருடைய குடும்பத்தினரை பற்றியும் வாய்ச்சவடால் காட்டி இவர் அறிக்கை விட தவறுவதில்லை.

கடந்த 14 ஆண்டு காலமாக உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படவில்லை. அதனை நடத்தப்போவதாக முதல்வர் என்ற முறையில் கருணாநிதி அறிவித்துள்ளார்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள், மன்னிக்க வேண்டும், தமிழ் ரத்தம் ஓடுபவர்கள் அதனை வரவேற்று, பாராட்டி தொலைபேசி மூலமாகவும், கடிதங்கள் வாயிலாகவும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவிக்கின்றார்கள்.

அம்மையாரால் தாங்கிக் கொள்ள முடியுமா?. அய்யோ, அய்யோ என்று அலறிக் கொண்டு அறிக்கை விடுகிறார். இந்த உலகத்தமிழ் மாநாடு நடத்துவதால், தமிழ் மொழிக்கு எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை என்று தீர்க்கதரிசியைப் போல அறிக்கை விடுகிறார்.

1995-ம் ஆண்டு அம்மையார் நடத்திய உலகத்தமிழ் மாநாடு போலவே தான் இதுவும் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்கிறார். அவர் நடத்திய மாநாட்டில் எப்படிப்பட்ட ஊழல்கள் நடைபெற்றன, யார் யார் கொள்ளை அடித்தார்கள் என்பது எல்லாம் உலகத்தமிழ் அறிஞர்கள் கண்டு அதுபற்றி என்னென்ன விமர்சனம் செய்தார்கள்?

வெளிநாட்டு அறிஞர்கள் விமான நிலையத்தில் இருந்தே வெளியே வர முடியாமல் திரும்ப அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ் மக்களுக்கு மறந்தா போய்விட்டது? உலகத்தமிழ் மாநாட்டு கணக்கு விவரங்கள் எல்லாம் பேரவையிலே விவாதிக்கப்பட்டது. அதையெல்லாம் அப்படியே மறந்து விட்டு, கருணாநிதி உலத்தமிழ் மாநாடு நடத்தப்போவதாக அறிவித்ததும், அறிக்கை விட்டு குளிர் காய நினைக்கிறார்.

உலகத்திலே உள்ள அனைத்து தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையிலே இருக்கும்போது மாநாடு நடத்தலாமா என்று அங்கலாய்த்துள்ளார். கிணற்றுக்குள் இருக்கும் தவளை வெளி உலகத்திற்கு வரமுடியாத நிலையில், உலகமே இருண்டுவிட்டது என்று கூறிக்கொள்வதைப் போல, அம்மையாரின் கூற்று உள்ளது.

உலகத்தமிழர்கள் வேதனையிலே இருக்கிறார்கள் என்றால், கோடநாட்டில் மாதக்கணக்கிலே ஓய்வெடுத்துக் கொண்டு உல்லாசமாக காலத்தை கழித்தால், உலகத்தமிழர்களின் வேதனை போய்விடுமா? தமிழகத்திலே நடைபெறும் ஆட்சியின் சாதனை கண்டு மக்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அரசு அலுவலர்களும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியோடு விளங்குகிறார்கள்.

ஜெயலலிதா ஆட்சியிலே நிறுத்தப்பட்ட போனஸ் இப்போது கொடுக்கப்படுகிறது. அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வுகள் முறையாக வழங்கப்படுகின்றன. மக்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் சாபக்கெடு, ஜெயலலிதா என்ற இந்த அம்மையாரின் உருவத்திலே அன்றாடம் இதுபோன்ற அறிக்கைகளை விட்டு அனைவரையும் குழப்பி கொண்டிருக்கிறார்.

14 ஆண்டு காலமாக உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படவில்லை. அந்த மாநாட்டினை நடத்த முன்வந்து கலைஞர் அறிக்கை விடுத்தால்- தன்னால் முடிந்தால் வரவேற்கட்டும்- இல்லாவிட்டால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். அதை விட்டு, அறிக்கை என்ற பெயரால் வாய் நீளம் காட்டினால் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கை தமிழர்கள்பால் இவர் ஏதோ மிகுந்த அக்கறை உள்ளவரைப்போல தனது அறிக்கையிலே காட்டி கொண்டிருக்கிறார். ஆனால் அங்கே இலங்கை தமிழர்கள் போராடி கொண்டிருந்தபோது- இதே ஜெயலலிதா 17.1.2009 அன்று அளித்த பேட்டியில்- இலங்கையில் தமிழர்களை கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை.

ஒரு யுத்தம், ஒரு போர் நடக்கும் போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான். இதில் எந்த நாடும் விதி விலக்கல்ல. இலங்கையில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறதென்றால், இலங்கை தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்லவிடாமல், விடுதலைப்புலிகள் அவர்களை பிடித்து வைத்துக்கொண்டு, வலுக்கட்டாயமாக ராணுவத்துக்கு முன்னால் அவர்களை ஒரு கேடயமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாரா இல்லையா?

தமிழ் மக்களுக்கு எதிராக இப்படிப்பட்ட கருத்துக்களை உதிர்த்துவிட்டு, இப்போது நீலிக்கண்ணீர் வடித்தால் அதை நம்ப தமிழ் மக்கள் தயாராக இல்லை.

ஜெயா தனது அறிக்கையை முடிக்கும்போது- கழக தலைவரை, தமிழக முதல்-அமைச்சரை- தமிழ் மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ஜெயலலிதாவை மன்னிக்க தயாராக இல்லாமல் தான் கோடநாட்டில் ஓய்வெடுக்க விட்டுவிட்டு, நம்முடைய தலைவர் ஆட்சிக்கட்டிலிலே அமர வைத்து அழகு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

அதனை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஜெயலலிதா அறிக்கை என்ற பெயரால் வயிற்றெரிச்சலை கொட்டி கொண்டிருக்கிறார். அவர் இன்னமும் வாய் நீளம் காட்டினால் மேலும், மேலும் வாங்கி கட்டிக்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X