For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் உள்ள அகதிகளை நிரந்தரமாக குடியமர்த்த திமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சீபுரம்: தமிழகத்தில் அகதிகளாக தங்கியுள்ள இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக இங்கேயே குடியமர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுப்பதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரத்தில் நடந்த கோலாகல திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,

இந்த மாநாடு நடைபெறும் இடத்தை சின்ன காஞ்சீபுரம் என்று தான் தொடக்க காலத்தில் அழைப்பார்கள். அண்ணா வீடு எங்கே? திராவிட நாடு அலுவலகம் எங்கே என்று கேட்டால், சின்ன காஞ்சீபுரத்தில் இருக்கிறது என்பார்கள். இன்று இந்த விழா நடைபெறுவதை பார்க்கும்போது ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கூடியிருப்பதை காணும்போது இது பெரிய காஞ்சீபுரமாக மாறி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இங்கு வந்த மக்கள், இருந்த மக்கள், இருக்கின்ற மக்கள் எல்லோரும் சந்தித்து பெருந்திரளாக இந்த விழாவை சிறப்பிக்கும் காட்சிகளை காணும்போது பல உவமைகள் இதற்கு முன் எடுபடாமல் போய்விடும்.

எள் விழுந்தால் இடம் இல்லை என்று சொன்ன முதுமொழிகள், நெருக்கடி மிகுந்த நிலையை வர்ணிக்கும்போது ஏ அப்பா மக்கள் கூட்டமா அல்லது கார்மேகத் திரளா என்ற கேள்விக்கு விடை காண முடியாமல் தவிக்கும் சூழ்நிலையில் இருந்து இந்த நிகழ்ச்சியை காணும்போது நாம் பெறுகிறோம்.

காஞ்சீபுரத்திற்கு நான் எத்தனை முறையோ வந்து சென்றிருக்கிறேன். எத்தனையோ கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளேன். எத்தனையோ மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறேன். அண்ணா உயிருடன் இருந்தபோது இங்கு கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். ஆனால், அவற்றுக்கு எல்லாம் சிகரம் வைத்ததுபோல் இந்த நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விழா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி எடுத்துக் காட்டியதுபோல், பல முக்கியமான தீர்மானங்கள், 8 தீர்மானங்களை திசையெங்கும் பரவ வேண்டிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. காலை முதல் இந்த தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டு மாலை நிகழ்ச்சியில் கழக முன்னோடிகளால் படித்து வைக்கப்பட்டு, உங்கள் அன்பான ஏகோபித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவற்றில் மிக முக்கியமான தீர்மானம் கனிமொழி முன் மொழிந்தது என்று இங்கு பேசிய குழந்தைசாமி குறிப்பிட்டார். தமிழ் மொழி இந்திய ஆட்சி மொழியாக ஆக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ப இந்த தீர்மானத்தை எப்படியோ நிறைவேற்ற முயல வேண்டும் என்றார். நான் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் தம்பி ஸ்டாலின் முன்மொழிந்து வழி மொழியப்பட்டு 8-வது தீர்மனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தேயே முக்கிய தீர்மானமாக கருதுகிறேன்.

அது இலங்கை தமிழ் மக்களை பற்றிய தீர்மானம். இலங்கை தமிழர் இங்கு நாம் நாட்டில் அகதியாக உள்ளனர். இலங்கையிலும் அங்கு வசிக்கும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு கூடாரத்தில் துன்பங்களை ஏற்றுக் கொண்டு அவதிப்படுகிறார்கள். ஆனால் அவர்களை சொல்லவில்லை. அவர்கள் வேறு நாட்டில் வசிக்கிறார்கள். அவர்கள் கூடாரத்தில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும். சொந்த இடத்திற்கே அவர்கள் போக வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம். இந்திய அரசுடன் சேர்ந்து கொண்டும் குரல் கொடுக்கிறோம். அதை வலியுறுத்தி கொண்டும் வருகிறோம்.

அதே நேரத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய மக்களின் கதி என்ன? என்பது தான் எட்டாவது தீர்மானம் ஆகும். அதில் நாம் அமைத்த வாக்கியங்களை தீர்மானம் நிறைவேற்றும் போது யாரும் கவனிக்காமல் இருந்தால் கவனம் ஊட்டுகிறேன். 1984 முதல் தமிழகத்திற்கு இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களை தமிழக அரசு 17 இடங்களில் உள்ள முகாம்களில் தங்க வைத்துள்ளது. தற்போது 115 முகாம்களில் 73 ஆயிரத்து 572 இலங்கை தமிழர் அகதிகள் தங்கியுள்ளனர். இது மட்டுமின்றி 38 ஆயிரம் இலங்கை தமிழர்கள் முகாம்களில் தாங்காமல் பல்வேறு இடங்களில் சொந்த பொறுப்பில் தங்கியுள்ளனர். மொத்தத்தில் தமிழகத்தில் 1 லட்சம் இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர். 1984 முதல் உள்ள புள்ளி விவரம் இது.

தி.மு.க. பொறுப்பு ஏற்றவுடன் 1.2.2006 முதல் மத்திய மாநில அரசுகள் இணைந்து அகதிகளுக்கு வழங்கி வரும் உதவி தொகை உயர்ந்தப்பட்டுள்ளது. அகதி குடும்ப தலைவருக்கு வழங்கப்பட்டு வந்த 200 ரூபாயில் இருந்து 400 ரூபாய் என்றும், வயது வந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகை 144 ரூபாயில் இருந்து 288 ரூபாயாகவும், முதல் குழந்தைக்கு 90 ரூபாயில் இருந்து 180 ரூபாய் ஆகவும் மற்ற குழந்தைகளுக்கு 45-லிருந்து 90 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படுகிறது. அவர்களுக்கு கிலோ அரிசி 57 காசுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அகதிகள் குழந்தைகள் மேல் நிலை வகுப்பு வரை இலவச கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மேல் படிப்பு படிக்கவும் வாய்ப்பு தரப்படுகிறது.

இந்த தீர்மானம் என்ன சொல்லுகிறது? இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த செய்ய வேண்டும்.

மறுகுடி அமர்த்தும் சட்டமாக மத்திய அரசுடன் கலந்து பேசி வழிவகை செய்துகொள்ள வேண்டும். அவர்கள் தமிழகத்திலே வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சராக, தி.மு.க. தலைவராக இந்த முப்பெரும் விழா வாயிலாக நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று என்னையே நான் கேட்டுக் கொள்ளும் தீர்மானம்.

என்னை நான் கேட்டுக்கொண்டதால் இந்த தீர்மானம் நிறைவேறா விட்டால் என்னை விட ஏமாளி யாரும் இல்லை. இந்த தீர்மானம் நிறைவேறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த இருக்கிறோம். இதை சட்ட ரீதியாக, அமைதியாக பெற இருக்கிறோம். மத்தியில் உள்ளவர்கள் இந்த தீர்மானம் நிறைவேற உதவ வேண்டும்.

அண்ணா பிறந்த காஞ்சி நகரத்திற்கு ரூ.5 கோடி நலத்திட்டங்களை துணை முதல்-அமைச்சர் என்ற முறையில் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். நான் முதல்-அமைச்சர் என்ற முறையில் அதற்கு மேலும் ரூ.15 கோடி வழங்கி ரூபாய் 20 கோடி நலத்திட்டங்களை வழங்க ஏற்பாடு செய்தேன். காஞ்சீபுரம் நகரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு பொறியியல் கல்லூரி ரூ.20 கோடியில் விரைவில் தொடங்கப்படும் என்று உறுதி கூறுகிறேன்.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவில் பட்டு நெசவு, சாயம் பூசுதல் மற்றும் விற்பனை மையம் கொண்ட பட்டு தொழில் பூங்கா என்று மத்திய மந்திரி தயாநிதி மாறன் அறிவித்துள்ளார். அது விரைவில் 40 கோடியில் ஏற்படுத்தப்படும். அதில் கைவினை சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மேலும் 10 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

உலக தமிழர் மாநாட்டை நடத்த வேண்டும் என்று முடிவு செய்து ஜனவரி இறுதியில் இந்த மாநாட்டை கோவையில் நடத்தலாம் என்று முடிவு செய்து அந்த மாநாடு சீரோடும் சிறப்போடும் நடைபெறும். ஏனென்றால் இந்த மாநாடு தமிழ் செம்மொழி மாநாடு என்று நடைபெற இருக்கும் மாநாடு. அந்த மாநாட்டிற்கு அச்சாரமாக அந்த மாநாட்டிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்று உங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கிறேன்.

காஞ்சீபுரத்தில் கூடியிருக்கும் கழக தோழர்கள் மாத்திரம் அல்ல. தமிழக மக்கள் ஆகிய நீங்கள் கோவைக்கும் வருவீர்கள். இந்த மாநாட்டை தமிழகத்தின் முதல்-அமைச்சர் என்ற முறையில் கழக தலைவர் என்ற முறையில் இங்கு வீற்றிருக்கும் தலைவர்கள் அன்பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் உறுதியாக சொல்கிறேன். கோவையில் மாநாடு நடைபெறும் அது செம்மொழி மாநாடாக நடைபெறும். அப்படி முடியாத நிலை ஏற்படாது. தமிழ் என்ற அந்த 3 எழுத்து சொல்லுக்கு என்னை உரியவனாக ஆக்கிக்கொண்டு அன்று முதல் இன்று வரை அதற்காகவே என்னை ஒப்படைத்துக்கொண்டு இருக்கிறேன்.

நான் இளமை பருவத்தில் எழுதிய ஒரு கட்டுரையை படித்து விட்டு அண்ணா அவர்கள் நன்றாக படி, கட்டுரை பிறகு எழுதலாம் என்று சொன்னதாக அடிகளாளர் இங்கு குறிப்பிட்டார். அதற்கு பொருள் கட்டுரை உனக்கு எழுத வராது என்பது அல்ல. கட்டுரை எழுதி எழுதி படிப்பை கெடுத்து கொள்ளாதே என்று பொருள் தான் அதற்கு. அண்ணா சொன்ன அத்தகைய கருத்துகளில் பின்பற்றாத கருத்து நான் கேட்காத அறிவுரை அது ஒன்று தான்.

அதன் விளைவுகளை பிறகு உணர்ந்தேன் என்றாலும் கூட பெரியார் கல்லூரியில் படித்தேன். அங்கு படித்த பிறகு வேறு எந்த கல்லூரியில் படித்தால் என்ன? படிக்காமல் இருந்தால் என்ன? எனக்கு அளிக்கப்பட்ட விருதுகளுக்கு உள்ள பெருமைகளை எல்லாம் பேராசிரியர் எழுதி படித்தார். அதை அவரே எழுதி இங்கு படித்த போது ஏற்பட்ட உணர்ச்சி உத்வேகம், மெய் சிலிப்பு வர்ணிக்க முடியாது ஏனென்றால் அண்ணா நூற்றாண்டு விழாவில் எஞ்சியிருக்கும் மூத்த தலைவர் நாங்கள் இரண்டு பேர் தான். மற்றவர்கள் எல்லாம் காலமாகி விட்டனர். எங்களை இன்னும் காலம் அழைக்கவில்லை. உங்களுக்காக பணியாற்ற விட்டு வைத்து இருக்கிறது.

அதனால் தான் பேராசிரியர் எழுதி உணர்வோடு தூய்மையான எண்ணத்தோடு வாசித்த போது நான் கண் கலங்கினேன். மெய் சிலிர்த்து போனேன். எப்படி இங்கு நன்றி கூறி பேசுவது என்ற திண்டாட்டத்திற்கு கூட ஆளானேன். உங்களை எல்லாம் ஏமாற்றக்கூடாது என்று தான் இவ்வளவு நேரம் பேசினேன். இன்னும் பேச வேண்டும். எனக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் இந்த விருது பெற எனக்கு இருக்கும் தகுதி என்ன? நீங்கள் தந்த தகுதி தான். பெரியார் தந்த தகுதி, அண்ணா தந்த தகுதி தான். எப்படி அண்ணாவின் இதயத்தை இரவலாக பெற்றேனோ அதை போல அந்த தகுதியை பெற்று தான் இந்த விருதை பெற்று இருக்கிறேன்.

இங்கு பேசிய பலர் என்னை பாராட்டினார்கள். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு அதை வாழ்த்தி இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொரு முறையும் என்னை வாழ்க வாழ்க என்று சொல்லும் போது நான் அண்ணாவை தான், பெரியாரை தான் நினைத்துக் கொள்கிறேன்.

நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். நான் இப்போது அதிகாரம் பெற்றிருந்தாலும், என்னை சர்வாதிகாரியாக எண்ணிக் கொள்ள மாட்டேன். இந்த பதவி, இந்த வாய்ப்பை வைத்து மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை தான் நான் செய்துகொண்டு இருக்கிறேன். இது இளைமையில் ஏற்பட்ட உணர்வு. 86 வயதிலும் அதே உணர்வு தான் உள்ளது என்றார் கருணாநிதி.

கச்சத்தீவை மீட்க வேண்டும்...

முன்னதாக விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ...

- இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் மத்திய ஆட்சி மொழிகளாக ஆக்குவதில் தாமதம் ஏற்படுமேயானால், முதல்கட்டமாக - திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியும், கலை இலக்கியப் பண்பாடும், வளமும் நிறைந்த செம்மொழியுமான தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்கவேண்டும்.

- மாநிலத்தில் சுயாட்சியும், மத்தியில் கூட்டாட்சியும் ஆக்கப்பூர்வமாக உருவாகி, கூட்டாட்சி அமைப்பு வலுப்பெற, இந்திய அரசமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

- நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் ஆகிய ஆட்சி மன்றங்களில் மகளிர் உரிமைப் பெறுவதை மேலும் காலம் தாழ்த்தாமல், 33 சதவீத இட ஒதுக்கீடு மகளிருக்கு அளிக்கும் சட்டத் திருத்தத்தை உடனடியாக நிறைவேற்றிட வேண்டும்.

- தமிழகத்தில் தொழில், வர்த்தகம் பெருகிடவும் நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய் அதிகரித்திடவும், மீனவர்களின் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கைத் தரம் உயரவும், நாட்டின் கடலோரப் பாதுகாப்பு வலுப்படுத்தப்படவும், தென்மாவட்டங்கள் பெருமளவுக்கு வளர்ச்சி பெறவும் வழிவகுத்திடும் சேது சமுத்திர திட்டத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்றிட வேண்டும்.

- கச்சத்தீவிற்கு தமிழக மீனவர்கள் தடையேதுமின்றி செல்வதற்கும், அதனை ஒட்டிய இடங்களில் இழந்த உரிமையை மீட்டெடுப்பதற்கும், கச்சத் தீவினை இந்தியாவிற்கே திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும்.

- இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது ஏவிவிடும் வன்முறை கொடுமைகளுக்கு நிரந்தரமான ஒரு முடிவினை ஏற்படுத்திடும் வகையில்; மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

- இலங்கையில் இடம் பெயர்ந்த தமிழ் மக்கள் அனைவரும் கூடிய விரைவில் அவரவர்களது வீடுகளுக்குத் திரும்புவதுதான் தற்காலிக முகாம்களில் அவர்கள் அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களைக்களையும் ஒரே தீர்வாகும் என்று இலங்கை அரசு உணர்ந்திடும் வகையில் மத்திய அரசு தேவையான அழுத்தத்தைக் கொடுத்திட வேண்டும்.

- தமிழகத்தில் அகதிகளாக உள்ளவர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் தமிழகத்திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தரவேண்டும் என்றும், அவர்கள் தங்குவதற்கும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கும் மான ஏற்பாடுகளையும் செய்து தரவேண்டும் என்றும் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான கருணாநிதி தலைமையிலான தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

கோலாகல விழா...

முன்னதாக அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, பெரியார் பிறந்தநாள் விழா, தி.மு.க. நிறுவன நாள் விழா ஆகியவை இணைந்த முப்பெரும் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கினார்.

முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருதினை அமைச்சர் அன்பழகன் வழங்கினார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் விருதையும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு கலைஞர் விருதையும், முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமிக்கு பாரதிதாசன் விருதையும் அவர் வழங்கினார்.

விருது பெற்ற கி.வீரமணி பற்றிய குறிப்புகளை மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், குன்றக்குடி அடிகளார் பற்றிய குறிப்புகளை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், வா.செ.குழந்தைசாமி பற்றிய குறிப்புகளை அமைச்சர் துரைமுருகனும் வாசித்து வாழ்த்தி பேசினார்கள்.

அழகிரிக்கு 51 பவுன் தங்கச் சங்கிலி...

விழாவில் மதுரை (மத்தி), மதுரை (மேற்கு), திருமங்கலம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சமீபத்தில் நடந்து முடிந்த 5 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் ஆகியவற்றில் வெற்றியை தேடித் தந்ததற்காக, தி.மு.க. தென்மண்டல அமைப்புச் செயலாளரும், மத்திய அமைச்சருமான மு.க.அழகிரிக்கு 51 சவரன் தங்கச் சங்கிலியை முதல்வர் கருணாநிதி பரிசளித்தார்.

இதேபோல், மாவட்ட செயலாளர்கள் மூக்கையா, ஐ.பெரியசாமி, என்.பெரியசாமி, பூண்டி கலைச்செல்வம் ஆகியோருக்கும் முதல்-அமைச்சர் கருணாநிதி தங்கச் சங்கிலியை வழங்கினார்.

கருணாநிதிக்கு 100 பவுன் தங்க நாணயம்...

அதேபோல முதல்வர் கருணாநிதிக்கு காஞ்சிபுரம் மாவட்ட திமுக சார்பில் 100 பவுன் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது. அந்த நாணயத்தில் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது.

அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ. அன்பரசன் இதை வழங்கினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X