For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் திமுக பக்கம் சாயும் சரத்குமார்?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தனது சமத்துவ மக்கள் கட்சியைக் கலைத்துவிட்டு நடிகர் சரத்குமார் மீண்டும் திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.

முதலில் திமுக பின்னர் அதிமுக, மீண்டும் திமுக, இதையடுத்து மீண்டும் அதிமுக என்று கட்சி தாவிக் கொண்டிருந்த சரத்குமார் இரு ஆண்டுகளுக்கு முன் சமத்துவ மக்கள் கட்சியைத் துவக்கி திருமங்கலம் இடைத் தேர்தலில் முதன்முதலில் தனியாக களம் கண்டார்.

அந்தத் தொகுதியில் இவரது கட்சியின் வேட்பாளருக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார். ஆனால், ஒரு வேட்பாளர் கூட டெபாசிட்டை காப்பாற்றிக் கொள்ளவில்லை.

இதையடுத்து தோல்வி குறித்து ஆராயப் போவதாகவும் அதற்காக கட்சியின் செயற்குழுவை கும்பகோணத்தில் கூட்டப் போவதாகவும் சரத்குமார் கூறி வந்தார். ஆனால், அப்படி ஒரு கூட்டமே நடக்கவில்லை,

இந் நிலையில் ரஜினிக்காக உருவாக்கப்பட்ட கதையான ஜக்குபாய் படத்தை தனது மனைவியான நடிகை ராதிகாவின் ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து தானே நடித்தார் சரத்குமார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, நேற்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்தது.

ரஹ்மான் உள்ளிட்ட விஐபிக்கள் பங்கேற்ற இந்த விழாவில் பங்கேற்க சரத்குமார் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சென்னையில் திரண்டனர். சரத்குமாரின் உத்தரவையடுத்தே அவர்கள் இந்த விழாவில் பங்கேற்க வந்ததாகத் தெரிகிறது.

நேற்றைய விழாவில் திமுகவில் இணைவது குறித்து சரத்குமார் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேசமயம், விரைவில் அவர் இதுகுறித்து பேசக் கூடும் எனத் தெரிகிறது.

கருணாநிதி வழியில் நான்..

இந்த விழாவில் சரத்குமார் பேசுகையில், முதல்வர் கலைஞர் இந்த பாடல் சிடியை வெளியிட்டது மகிழ்ச்சி தருகிறது. அவரிடத்திலிருந்து சிறிது காலம் நான் ஒதுங்கியிருந்தாலும் அவரிடம் நான் கற்றுக் கொண்ட அரசியல் பாடத்தின்படி மக்களுக்காக, அவரது வழியிலேயே சேவை செய்து வருகிறேன். அந்த சேவை தொடரும்.

அவரிடம் நான் அரசியல் பாடம் கற்றது என்பது துரோணரை பார்த்து வில் வித்தையை ஏகலைவன் கற்றது போல் ஆகும் என்றார்.

உங்கள் தோட்டத்து மலர்கள்.. ராதிகா:

நிகழ்ச்சியில் ராதிகா பேசுகையில், இந்த விழாவிற்கு முதல்வரை நாங்கள் அழைத்தவுடன் வருகிறேன் என்று சம்மதம் தெரிவித்தார். நாங்கள் என்றைக்குமே உங்கள் தோட்டத்து மலர்கள்தான் என்றார்.

ஏதுவும் நடக்கலாம்... கருணாநிதி:

பின்னர் முதல்வர் கருணாநிதி பேசுகையில், சரத்குமார் கதாநாயகனாக நடித்த 'ஜக்குபாய்" படத்தின் குறுந்தகட்டை நான் வெளியிடுகிறேன் என்றவுடன் திரித்துப் பேசும் சிலர் கேள்விக்குறியுடன் பார்த்தனர்.

இடைப்பட்ட சில காலம் சற்று ஒதுங்கியிருந்தாலும், நான் இடைப்பட்ட காலம் என்று ஏன் சொல்கிறேன் என்றால், எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

இங்கு பேசிய சரத்குமார் துரோணரிடம் வில் வித்தையை தூரத்தில் இருந்து கற்ற ஏகலைவன் போல என்னிடத்தில் அரசியல் கற்றதாக பேசினார். ஆனால் அவர் மீதி கதையை ஏன் சொல்லவில்லை என்று தெரியவில்லை.

ஏகலைவன் வில் வித்தையில் சிறந்து விளங்கியதை கண்ட துரோணர் கட்டை விரலை குருதட்சணையாக கேட்டார். நான் சரத்குமாரிடம் குருதட்சணை எதுவும் கேட்க மாட்டேன்.

எத்தனையோ தோட்டங்கள் இருக்கலாம்:

தோட்டங்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் இங்கிருக்கும் அறிவாலயம் என்ற தோட்டம் நல்ல தோட்டம். இதில் நல்ல மரங்களும், நல்ல காய்கனிகளும், நல்ல பூக்களும்தான் பூத்துக் குலுங்கும்.

நீங்களெல்லாம் இங்கு பூத்த மலர்கள். இதை தவிர நான் எதுவும் சொல்வதற்கில்லை. காரணம், இந்த மேடையும் அரசியல் மேடை இல்லை என்றார்.

விரைவில் திமுகவுடன் கூட்டணி அல்லது கட்சியைக் கலைத்துவிட்டு மீண்டும் திமுகவில் இணைவது என ஏதாவது ஒரு முக்கிய அறிவிப்பை சரத்குமார் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருணாநிதியை சந்தித்த பாமக எம்எல்ஏ:

இதற்கிடையே அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்க காஞ்சிபுரம் சென்ற முதல்வர் கருணாநிதியை சந்தித்து பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அக் கட்சியின் மூத்த பெண் எம்எல்ஏவான சக்தி கமலாம்பாள்.

காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏவான அவர் முதல்வரை பயணியர் மாளிகையில் சந்தித்தார்.

தொகுதியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக சில கோரிக்கைகளை முன் வைத்த சக்தி கமலாம்பாள், அங்கிருந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் காஞ்சியில் நெசவாளர் பூங்கா அமைக்குமாறும் கோரிக்கை வைத்தார்.

முதல்வரை சக்தி கமலாம்பாள் சந்தித்தது பாமகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X