For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய பல்கலை. நியமனங்களில் முறைகேடு?!

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழக நியமனங்களில் பெருமளவில் ஊழல் நடைபெறுவதாகவும், முறைகேடுகள் நடந்து வருவதாகவும், லஞ்சம் தலைவிரித்தாடுவதாகவும் புகார்கள் கிளம்பியுள்ளன.

தமிழகத்தின் கோரிக்கைப்படி முதல்வர் கருணாநிதியின் பிறந்த ஊர் அமைந்துள்ள திருவாரூரில் மத்திய அரசு மத்திய பல்கலைக்கழகத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.

திருவாரூர் அருகே வண்டாம்பாளையம் என்ற இடத்தில் கிட்டத்தட்ட 516 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமான கட்டடங்களுடன் மத்திய பல்கலைக்கழகம் அமையவுள்ளது. இதற்காக ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் கட்டுமானப் பணிக்கு மட்டும் ரூ. 400 கோடி ஒதுக்கப்படுகிறது.

இன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் ஊழல் தலை தூக்கியிருப்பதாக புகார்கள் கிளம்பி விட்டன.

பல்கலைக்கழகத்திற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மூலம் துணை வேந்தர் பதவிக்கு தேர்வுகள் நடைபெற்றன.

தமிழகம், ஆந்திரம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலிருந்து 3 பேர் தேர்வுப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் தமிழகத்தைச் சேர்ந்தவரிடம் அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் மகனின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் துணை வேந்தர் பதவிக்காக ரூ.2 கோடி தர வேண்டும் என கேட்டதாகkd கூறப்படுகிறது.

இந்த பதவியில் அமர்ந்தால் கட்டிடம் கட்டுகின்ற பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.400 கோடியில் ரூ.4 கோடியும், பேராசிரியர், விரிவுரையாளர் உள்ளிட்டோரை நியமிப்பதில் பணமும் கிடைக்கும் என்று அவரிடம் கூறியதாக தெரிகிறது.

ஆனால் தன்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என தமிழகத்தை சேர்ந்தவர் கூறி விட்டதால், தேர்வுப் பட்டியலில் இருந்த பி.பி.சஞ்சய் என்பவர் பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் மத்திய அமைச்சரின் மகன் சார்பில் கேட்கப்பட்ட ரூ.2 கோடியை கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியை பெற்றதாகவும் இவருக்கு ஆந்திராவை சேர்ந்த பெண் இணையமைச்சர் சிபாரிசும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய பல்கலைக் கழகத்திற்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்து விளம்பரங்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து பல கல்லூரிகளில் வேலை பார்க்கும் கல்லூரி ஆசிரியர்கள் பலர் விண்ணப்பித்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர்களை பணியில் சேர்க்க லஞ்சம் கேட்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ரூ.2 கோடி கொடுத்து இந்த பதவியை பிடித்துள்ள மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர் தற்போது பேராசிரியர், விரிவுரையாளர் பதவிகளுக்கு ரூ.20 லட்சமும், பணியாளர் பதவிகளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலும் கேட்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

நானே ரூ. 2 கோடி கொடுத்துதான் வந்து உட்கார்ந்திருக்கிறேன். எனவே நீங்களும் பணம் கொடுத்தால்தான் நியமனம் என்று பச்சையாகவே கூறுகிறாராம் துணைவேந்தர் என்கிறார்கள்.

இப்படி ஆரம்பத்திலேயே ஊழல் புற்று பெருக்கெடுத்திருப்பதால் இதுகுறித்து உரியவர்கள் கடும் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினால் பல்கலைக்கழகத்தின் பெயர், மதிப்பு கெடாமல் காக்கப்படலாம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X