For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக கூட்டணி..பாமக விலகியது ஏன்- இப்போதைய காரணம்

Google Oneindia Tamil News

Ramadoss with Jayalalitha
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து 3வது முறையாக வெளியேறியுள்ளது பாமக. இதற்கான காரணங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின்றன.

அதற்கு முன்பு பாமகவின் கடந்த கால வரலாறு குறித்த ஒரு சுருக்கமான பார்வை...

1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் சங்கத்தை டாக்டர் ராமதாஸ், 1989ம் ஆண்டு பாமக என்ற அரசியல் கட்சியாக மாற்றினார்- காரணம்- ஜாதிப் பெயரில் அரசியல் கட்சிகள் செயல்பட முடியாது, தேர்தலில் போட்டியிட முடியாது என்று சட்டத் திருத்தம் வந்ததால்.

1989ல் நடந்த மக்களவை தேர்தலி்ல 26 தொகுதிகளில் போட்டியிட்டது பாமக. முதல் தேர்தலிலேயே அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியுற்றது. அதே ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலி்ல பாமக போட்டியிடவில்லை.

1991ல் நடந்த மக்களவை மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டுத் தோல்வி கண்டது.

1996ல் நடந்த நாடாளுமன்ற, சட்டசபைத் தேர்தலிலும் போட்டியிட்டுத் தோல்வி கண்டது.

முகவரி கொடுத்த ஜெயலலிதா...

1998ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜக, மதிமுக ஆகியவை இணைந்து அமைத்த கூட்டணியில் பாமக இடம் பெற்றது. இந்தத் தேர்தலில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக அதில் நான்கில் வெற்றி பெற்று முதல் முறையாக அரசியல் வெற்றியைக் கண்டது - நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தது.

1999ல் நடந்த மக்களவை தேர்தலில் திமுகவுக்குத் தாவி போட்டியிட்டு ஐந்து தொகுதிகளில் வென்றது.

2001ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுக பக்கம் வந்தது. 20 தொகுதிகளை வென்றது.

2004ல் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் திமுகவுக்கு திரும்பியது. அத்தேர்தலில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலில்தான் முதல் முறையாக தொடர்ந்து திமுகவுடனேயே தங்கியிருந்தது.

2009, மே மாதம் நடந்த மக்களவை தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டது. போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.

இப்படியாக 3வது முறையாக அதிமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ளது பாமக.

விலகல் ஏன்..?

காடு வெட்டி குரு- இவர்தான் டாக்டர் ராமதாஸ் முதல் முறையாக தப்புக் கணக்கு போட முக்கியக் காரணம். காரணம், இவரது வலியுறுத்தல் மற்றும் பிடிவாதம், முறுக்கல் காரணமாகவே தனது மகன் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் எடுத்துக் கூறியும் கூட அதைக் கேட்காமல், பிடிவாதமாக அதிமுக பக்கம் போகும் முடிவை எடுத்தார் டாக்டர் ராமதாஸ் என்கிறார்கள்.

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் போட்ட திமுகவிடம் மீண்டும் கூட்டணி சேர்ந்தால் நான் விலகிக் கொள்கிறேன் என்று கிட்டத்தட்ட காடுவெட்டி மிரட்டாத குறையாக ராமதாஸை நெருக்கியதால்தான், திமுக பக்கம் போகாமல் அதிமுக பக்கம் சாய கடந்த மக்களவை தேர்தலின்போது முடிவெடுத்தார் ராமதாஸ்.

இலங்கைத் தமிழர்கள் அவல நிலை குறித்து மக்களிடையே நிலவி வந்த அனுதாபத்தால் அதிமுக பக்கம் காற்று வீசுவதாக கணித்தார் ராமதாஸ். மேலும் விலைவாசி உயர்வு, மின்சாரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் இருப்பதாகவும் கணித்தார்.

இதையடுத்து அதிமுக பக்கம் போக தீர்மானித்தார், பொதுக் குழுவில் வாக்கெடுப்பு நடத்தினார், இணைந்தார். ஆனால் அவர் போட்ட கணக்கு பெரும் தப்பாகி விட்டது.

புதுச்சேரி உள்பட 7 தொகுதிகளில் பாமக போட்டியிட்டது. ஆனால் ஒன்றிலும் பாமக ஜெயிக்கவில்லை. குறிப்பாக, வன்னியர்களின் கோட்டை என்றழைக்கப்பட்ட தொகுதிகளில் கூட மண்ணைக் கவ்வியது பாமக. இதை அந்தக் கட்சியினர் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

ஆரணியில் வைத்த ஆப்பு-அதிமுக கடுப்பு...

மறுபக்கம், அதிமுக தரப்பு டாக்டர் ராமதாஸ் மீது கடும் கோபமடைந்து காணப்பட்டது. அதற்குக் காரணம், ஆரணியில் கிடைத்த தோல்வி.

இந்தத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர் ராமதாஸின் சம்பந்தியும், முன்னாள் காங்கிரஸ் தலைவருமான கிருஷ்ணசாமி. இதனால் ஆரணியில் போட்டியிட விரும்பாமல் வேறு தொகுதியை வாங்கினார் டாக்டர் ராமதாஸ்.

ஆரணியில் அதிமுக நின்றது. சம்பந்தி நிற்பதால் தொகுதியை மாற்றிக் கொண்டாலும், பாமகவினர் தனது வேட்பாளரை வெற்றி பெற வைப்பார்கள் என்று நம்பியது அதிமுக.

ஆனால், தொகுதியில் பாமகவினர் சரியாகவே வேலை செய்யவில்லை என்று அதிமுக மேலிடத்துக்குத் தகவல் போனது. இதனால் தோல்வி உறுதி என்று நம்பியது அதிமுக. அதேபோலவே அதிமுக தோல்வி கண்டது.

வன்னியர்கள் நிறைந்த பகுதியில் அதிமுக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டது ஜெயலலிதாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்து கொண்டே எதிரணியுடனும் ராமதாஸ் ரகசிய உறவு வைத்திருப்பதாக ஜெயலலிதா கருதினார்.

எனவே ராமதாஸை ஒதுக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா.

பிற கூட்டணித் தலைவர்களை அழைத்துப் பேசியவர், ராமதாஸுடன் மட்டுமே பேசாமலேயே தவிர்த்து வந்தார். வேண்டாத விருந்தாளியாக (அதாவது கடைசி வரை எஸ்.வி.சேகரை எப்படி வைத்திருந்தார்களோ, அப்படி) ட்ரீட் செய்ய ஆரம்பித்தார் ஜெயலலிதா.

பழைய ராமதாஸாக இருந்திருந்தால், உடனேயே இடத்தைக் காலி செய்திருப்பார். ஆனால் இப்போதுதான் இளைத்துப் போய் விட்டாரே, இதனால் எதுவும் செய்ய முடியாத நிலை.

இந் நிலையில்தான் ஏற்கனவே அதிமுகவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டபடி 2010ம் ஆண்டு காலியாகும் தமிழக ராஜ்யசபா தொகுதியை தனது மகனுக்கு ஜெயலலிதா ஒதுக்க மாட்டார் என்ற உண்மை டாக்டர் ராமதாஸுக்குப் புரிய ஆரம்பித்தது.

இப்படி அடுத்தடுத்து அதிமுக தரப்பு கடுப்படித்து வந்ததால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த நேரம் பார்த்து அதிமுக தரப்பிலிருந்து 3வது அம்பு பாய்ந்தது. இது சற்று பெர்சனல் அம்பு.

திண்டிவனத்தில் நடந்த கொலை வழக்கில் இருந்து நீக்கப்பட்ட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சகோதரர் சீனிவாசன், அவரது மகன் ஆகியோரது பெயர்களை மீண்டும் சேர்க்கக் கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார் முன்னாள் அதிமுக அமைச்சரும், பாமகவின் பரம விரோதியுமான சி.வி.சண்முகம்.

இதை ராமதாஸ் தரப்பு எதிர்பார்க்கவில்லை. உடனடியாக கொடநாடு விரைந்த ஜி.கே.மணி, தன்ராஜ் ஆகியோர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்கள். அவர்களிடம் பார்த்துக் கொள்ளலாம், இது சாதாரண விஷயம்தான் என்று கூறினாராம் ஜெயலலிதா.

சாதாரண விஷயம் என்று அவர் கூறியதால் டென்ஷனாகி விட்டார் ராமதாஸ். இது சரிப்படாது என்று முடிவெடுத்த அவர் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி, கூட்டணியை உடைத்து விட்டார்.

அன்புமணி வரவில்லை...

நேற்றைய கூட்டத்தில் முக்கியமான விஷயம், டாக்டர் அன்புமணி வராததுதான். வழக்கமாக, முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டங்களுக்கு தவறாமல் வருபவர் அன்புமணி. ஆனால் நேற்று அவர் வரவில்லை.

மக்களவை தேர்தலுக்கு முன்பே அவர் அதிமுக கூட்டணியை விரும்பவில்லை. திமுக, காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான் பாமகவுக்கு நல்லது என்று எடுத்துக் கூறினார். ஆனால் குரு குழப்பத்தால் ராமதாஸ் அதை ஏற்கவில்லை.

தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அப்செட்டாக இருந்து வந்தார் அன்புமணி. தன்னைச் சந்தித்த தலைவர்களிடம் கூட நான்தான் அப்பவே சொன்னேனே என்றும் புலம்பினாராம்.

இப்போது அதிமுகவிலிருந்து விலகும் முடிவை எடுக்கும் கூட்டத்திற்கு அன்புமணி வராததற்குக் காரணம் இந்த அதிருப்திதான் காரணம் என்கிறார்கள்.

இப்போது பாமக தனித்து விடப்பட்டுள்ளது. யாரும் அவர்களை சீந்தும் நிலையும் இல்லை. இவர்களாக யாரையாவது அணுகி சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கோரும் நிலை வந்து விட்டது. அதாவது புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் வந்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.

இருப்பினும் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் நாள் இருப்பதால் அதுவரை கூட்டணி குறித்து எதுவும் சிந்திக்காமல் கட்சியை பலப்படுத்தும் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவோம் என்று கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளாராம் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X