புழல் சிறையில் ரெய்டு-லஞ்ச பணம், டிவி, ஆபாச சிடி சிக்கியது!
சென்னை: புழல் சிறையில் மிகப் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து வருவதை லஞ்ச ஒழிப்பு துறை கண்டுபிடித்துள்ளது. அங்கு நடத்திய அதிரடி ரெய்டில், ஆயிரக்கணக்கில் லஞ்ச பணத்தை கைப்பற்றிய அவர்கள் டிவி, ஆபாச சிடி, பீடி, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களையும் பெருமளவில் பறிமுதல் செய்துள்ளனர்.
புழல் சிறைச்சாலையை கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த லஞ்ச ஒழிப்பு துறை நேற்று முன்தினம் 7 டிஎஸ்பிக்கள் தலைமையில் சுமார் 60 பேருடன் சென்று அங்கு திடீர் சோதனை நடத்தியது.
மதியம் சுமார் 1.15 மணிக்கு துவங்கிய இந்த சோதனை இரவு 8.30 மணி வரை நீடித்தது. இது குறித்து லஞ்ச ஒழிப்புதுறை இயக்குனரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
புழல் சிறைக்குள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் லஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. அங்கு உணவு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டுள்ளது. அவர்களது கணக்கிற்கும், இருப்புக்கும் கொஞ்சம் கூட ஒத்துபோகவில்லை.
சில உணவு பொருட்கள் டன் கணக்கில் திருடப்பட்டுள்ளது. சில கைதிகளுக்கு வழங்கப்படாமல் அதிகமுள்ளன. இதனால் இங்கிருந்து பொருட்கள் வெளியே விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
புழலில் இருக்கும் தனி சிறைகளில் எந்தவொரு கைதியும் 15 நாட்களுக்கு மேல் தங்கவைக்க கூடாது. ஆனால், தற்போது அங்கு இருக்கும் 224 கைதிகள் எத்தனை நாட்களாக அங்கு இருக்கின்றனர் என்பது உள்ளிட்ட எந்த தகவலும் குறித்து வைக்கப்படவில்லை.
சில செல்வாக்குள்ள கைதிகள் மற்ற கிரிமினல் கைதிகளுடன் தங்க விரும்பாமல் லஞ்சம் கொடுத்து இங்கு கூடுதலாக பல நாட்கள் தங்குகின்றனர். அதில் ஒரு கைதி இங்கு 5 வருடங்களாக இந்த தனி சிறை பகுதியில் தங்கியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும், சிறையின் துணை ஜெயிலர் ராஜேந்திரனிடம் இருந்து அவர்கள் கணக்கில் வராத ரூ. 1,700பறிமுதல் செய்துள்ளனர். அவர் சிறைக்கு வரும் பார்வையாளர்களிடம் இந்த பணத்தை வசூல் செய்துள்ளார். யுவராஜ் என்ற மற்றொரு துணை ஜெயிலரின் அறையில் இருந்து 21 ஆபாச சிடி கேசட்கள் பறிக்கப்பட்டன.
அதேபோல் நோயாளிகளுக்கு உடல் நலக்குறைவு என பரிந்துரைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்ப சிறை மருத்துவ அதிகாரி டாக்டர் சோமசுந்தரம் லஞ்சம் வாங்கியதும் உறுதி செய்யப்பட்டது. அவரிடம் லஞ்ச பணம் ரூ.1,500 கைப்பற்றப்பட்டது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக மூன்று கைதிகளின் அறையில் டிவிக்கள் இருந்தன. அவர்கள் டிவி கேட்டு எதுவும் விண்ணப்பிக்கவும் இல்லை. அவர்கள் சிறை அறையில் வைக்கப்பட்டிருக்கும் டிவியை மட்டுமே பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கட்டு கட்டாக பீடி, புகையிலை மற்றும் கத்திரிகோல், கத்தி ஆகியவையும் சிக்கியது.
சிறைச்சாலை வாசலில் இருந்து உள்ளே நுழைய எங்களுக்கு உடனடியாக அனுமதி கிடைக்கவில்லை. சுமார் 25 நிமிடங்கள் பின்னரே கொடுக்கப்பட்டது. இதனால் பல ஆயிரம் லஞ்சப் பணம், மொபைல்கள் ஆகியவை மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறோம் என்றார்.
தற்போது லஞ்ச ஒழிப்பு இயக்குனரகம் இவை அனைத்தையும் ஒரு அறிக்கையாக தயாரித்து மாநில செயலருக்கும், சிறைத்துறை டிஐஜிக்கும் அனுப்ப இருக்கிறது.