For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்டாலின் விழா-பத்திரிக்கையாளர்கள் புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

Stalin
குற்றாலம்: நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவின்போது பத்திரிக்கையாளர்களை அப்புறப்படுத்துமாறு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதைத் தொடர்ந்து அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் ஸ்டாலின் நிகழ்ச்சியைப் புறக்கணித்து வெளியேறினர்.

இன்று காலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றாலம் வந்தார். அங்குள்ள கலைவாணர் அரங்கில் நடந்த அண்ணா நூற்றாண்டு விழாவில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராபர்கள் பெருமளவில் வந்திருந்தனர். ஆனால் அவர்கள் அமருவதற்கு இருக்கைகள் போடப்படவில்லை.

இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அவர்கள் புகார் கூறிக் கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சிக்கு வந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பத்திரிக்கையாளர்கள் கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து அனைவரையும் வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பத்திரிக்கையாளர்கள், நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக கூறி ஒட்டுமொத்தமாக வெளியேறினர். இதனால் லேசான சலசலப்பு ஏற்பட்டது.

பின்னர் குற்றாலம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஸ்டாலின் தென்காசி கிளம்பிச் சென்றார்.

ஸ்டாலின் முன் கட்டிப் புரண்ட திமுகவினர்...

இதற்கிடையே, நேற்று ராதாபுரம், நெல்லை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த விழாக்களில் கலந்து கொண்டு விட்டு இரவு 10 மணி அளவில் குற்றாலம் விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்க ஸ்டாலின் வந்தார்.

அவரை நெல்லை முதல் தென்காசி ஆசாத் நகர் ஆற்றுபாலம் வரை வழி நெடுகிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் திமுகவினர் பெருமளவு திரண்டிருந்தனர்.

ஆலங்குளத்தில் திமுகவினர் கொடுத்த வரவேற்பை பெற்றுக் கொண்ட துணை முதல்வர் பாவூர்சத்திரம் வந்தார். அங்கு அவரை வரவேற்க சபாநாயகர் ஆவூடையப்பன் ஆதரவாளர்கள், யூனியன் கவுன்சிலர் ஏபி தலைமையிலும், கருப்பசாமி பாண்டியன் ஆதரவாளர்கள் கீழப்புலியூர் ஓன்றிய திமுக செயலாளருமான சிவபத்மநாபன் தலைமையிலும் திரண்டு வரவேற்பு அளித்த போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஸ்டாலின் முன்பே இரு கோஷ்டியினரும் கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த மு.க.ஸ்டாலின் அங்கிருந்து வேகமாக காரில் புறப்பட்டு சென்றார்.

ஸ்டாலின் போன பின்னர் சண்டை மேலும் உக்கிரமடைந்தது. திமுகவினர் மோதல் முடிவு பெறாத நிலையில் போலீஸார் உள்ளே புகுந்து சமரசப்படுத்த முயன்றனர். ஆனால் திமுகவினர் போலீஸாரையும் தாக்கத் தொடங்கினர். ராத்திரியில் நடந்த இந்த கோஷ்டிக் கலவரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திமுகவினரின் இந்த கோஷ்டி மோதலில் திமுக நகரச் செயலாளர் நடராஜன் என்பவரும், சப் இன்ஸ்பெக்டர் கோமதி சுந்தரியும் காயமடைந்தனர்.

போக்குவரத்து நிறுத்தம்-மக்கள் பாதிப்பு:

முன்னதாக ஸ்டாலின் குற்றாலம் வருகையைத் தொடர்ந்து காலை 7.30 மணி முதல் காலை 9.15 மணி வரை போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்வோர், அலுவலகம் செல்வோர் பஸ் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

சிலை திறப்பை தவிர்த்தது ஏன்?:

முன்னதாக ராதாபுரத்தில் 7வது பெரியார் நினைவு சமத்துவபுரம், பஸ் நிலையம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்துப் பேசிய ஸ்டாலின்,

இங்கு திறக்கப்பட்டுள்ள புதிய பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை (முதல்வர் கருணாநிதியின் பெற்றோர் முத்துவேலர்- அஞ்சுகத்தம்மாள் சிலை) திறந்து வைக்க வேண்டும் என இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டனர்.

சிலர் இந்தப் பிரச்சனையை அரசியலாக்கி ஆதாயம் தேடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முதல்வர் கருணாநிதி எனக்கு ஆணையாகவும், மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவாகவும் சிலை திறப்பைத் தவிர்க்குமாறு கூறியுள்ளார். அதனால் சிலை திறப்பு தவிர்க்கப்பட்டு இந்த விழா நடைபெறுகிறது என்றார் ஸ்டாலின்.

நதி நீர் இணைப்பு தி்ட்ட பணிகள்:

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், தாமிரபரணி- கருமேரியாறு- நம்பியாறு- பச்சையாறு நதிகளை இணைக்கும் நதி நீர் இணைப்பு திடடம் ரூ.369 கோடியில் நடந்து வருகிறது. 72 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 4 நிலைகளில் 7 உட்பிரிவுகளில் பணி நடந்து வருகிறது.

இந்த பணிகள் 2012ம் ஆண்டுக்குள் முடிவடையும். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் திசையன்விளை, சாத்தான்குளம், உள்பட பல பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X