For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இனி சுவையுடன் சத்துணவு!

Google Oneindia Tamil News

Master chef to spice up TN noon-meal scheme
சென்னை: இனி தமிழக சத்துணவு மையங்களில் சத்தான உணவு மட்டுமின்றி, நல்ல சுவையுடனும் கூடிய உணவைப் பரிமாறப் போகிறார்கள்.

சத்துணவுத் தி்ட்ட அமலாக்கத்தைக் கையில் வைத்துள்ள தமிழக அரசின் சமூக நலத்துறை, இதற்காக பிரபல சமையல் கலை நிபுணர் கே.தாமோதரனை, சத்துணவு சமையலர்களுக்கு பயிற்சித் தருவதற்காக அமர்த்தியுள்ளது.

சத்துணவை ருசியான உணவாக மாற்றுவது குறித்த பயிற்சியை, சத்துணவு சமையலர்களுக்கு தாமோதரன் வழங்குவார்.

மேலும், சத்துணவுடன் புலாவு உள்ளிட்ட பிற உணவு வகைகளையும் அறிமுகப்படுத்துவது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் யோசித்து வருகின்றனராம்.

தற்போது சாம்பார் சாதம், வேகவைத்த முட்டை, சுண்டக்கடலை, உருளைக் கிழங்குப் பொறியல் போன்றவை சத்துணவில் தரப்படுகின்றன.

இதுகுறித்து சமூக நலத்துறைச் செயலாளர் ராம் மோகன் ராவ் கூறுகையில், இதுவரை ஒரே மாதிரியான சாப்பாடுதான் சத்துணவில் வழங்கப்பட்டு வருகிறது. அதை மாற்ற நினைக்கிறோம். வெறும் சத்தான உணவாக மட்டும் இல்லாமல், குழந்தைகள் அதை ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டும் என கருதுகிறோம். அந்த முயற்சிதான் தற்போதைய இந்த பயிற்சித் திட்டம் என்றார்.

தற்போது சோதனை ரீதியாக சைதாப்பேட்டை (4 பள்ளிகள்), மயிலாப்பூர், திருவல்லிக்கேணி (தலா 1) ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சிப் பள்ளி சமையலர்களுக்கு தாமோதரன் பயிற்சி அளிக்கிறார். இங்கு தற்போது ருசியான சத்துணவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற பள்ளிகளுக்கும் இது விரிவாக்கப்படும்.

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ருசியான சாம்பார் சாதம் செய்வது எப்படி என்பது குறித்து தாமோதரன் (இவர் எம்.ஜி.ஆர். கேட்டரிங் கல்லூரி முதல்வரும் கூட) சமையலர்களுக்குப் பயிற்சி அளித்தார். ஜெயா டிவியில் சமையல் நிகழ்ச்சிளைத் தொகுத்துக் கொடுத்ததன் மூலம் பிரபலமானவர் தாமோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக நலத்துறை ஆணையர் எம்.பி. நிர்மலா இந்தத் திட்டம் குறித்துக் கூறுகையில், இங்கு தயாரிக்கப்பட்ட ருசியான சாம்பார் சாதத்தை பள்ளிக் குழந்தைகளுக்குப் பரிமாறினோம். செமத்தியான வரவேற்பு கிடைத்தது. ஒரு குழந்தை கூட ஒரு பருக்கையை கூட வீணடிக்கவில்லை. அவ்வளவு ருசியாக இருந்தது சாப்பாடு.

இதையடுத்து இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்குவது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனைக் கூட்டம் ஒன்றைக் கூட்டியுள்ளோம். ருசியான சாப்பாடு என்பதற்காக உணவில் சத்தின் அளவு குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார் அவர்.

தற்போது சத்துணவுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் ரூ. 830 கோடியை செலவிட்டு வருகிறது. இதில் முட்டைக்கான செலவு மட்டும் ரூ. 177 கோடியாகும். ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு ஆகும் செலவுக் கணக்கு ரூ. 5.78 ஆகும்.

தற்போது வழங்கப்பட்டு வரும் சத்துணவு சுவையாகவும் இல்லை, தரமானதாகவும் இல்லை என்று பல இடங்களில் புகார்கள் கிளம்பின. மேலும், பெருமளவிலான சாப்பாடு தினசரி வீணாவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதையடுத்தே சாப்பாட்டை ருசியாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சத்துணவின் கதை...

மறைந்த பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மதிய உணவுத் திட்டம் முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பின்னர் இதை மாற்றி 1982ம் ஆண்டு சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் புது உருவம் கொடுத்தார் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.

சத்துணவுத் திட்டத்திற்கு மாணவ, மாணவிகளிடையேயும், பெற்றோர்களிடையேயும் பெரும் வரவேற்பு கிடைத்தது. அன்று முதல் சத்துணவுத் திட்டம் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. எந்தக் கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் கைவிடப்படாத ஒரு சில திட்டங்களில் சத்துணவுத் திட்டமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகம் முழுவதும் 42 ஆயிரத்து 78 பள்ளிகளில் இந்த சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது. இதன் மூலம் 56.42 லட்சம் மாணவ, மாணவியர் பலன் பெறுகின்றனர்.

1989ம் ஆண்டு முதல்வராக கருணாநிதி இருந்தபோது சத்துணவில் முட்டையை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் கடந்த 2006ம் ஆண்டு மீண்டும் கருணாநிதி முதல்வராக பதவியேற்றபோது, வாரம் இரு முட்டையாக அதை விஸ்தரித்து சமீபத்தில் வாரம் 3 முட்டைகளாக அதிகரித்து உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X