For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரியாறு அணை: ஜெ. மீது கருணாநிதி கடும் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா பொய்களை மூட்டையாக்கி விற்க முனைந்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டுகிறேன். ஜெயலலிதா போன்றவர்களுக்காக நான் எழுதும் கடைசிக் கடிதம் இதுதான்- எத்தனை சொன்னாலும் எழுதினாலும் வளைந்த வாலை நிமிர்த்த முடியாது; ஆகவே, இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

அறியாமை - அவசரத்தனம்..

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

நான் பலமுறை ஜெயலலிதாவின் அறியாமை குறித்தும், அவசரத்தனம் குறித்தும் எழுதிவிட்டேன். இருந்தாலும் அவர் தன்னைத் திருத்திக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைத்தான் அவருடைய அறிக்கைகள் தொடர்ந்து தெரிவிக்கின்றன.

நேற்றைய அவருடைய அறிக்கையில், 29.11.2006 அன்று அதாவது கருணாநிதி தலைமையில் தி.மு.க. அரசு நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட பல மாதங்களுக்குப்பிறகு, டெல்லியில் மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர், முல்லைப் பெரியாறு பிரச்சினை தொடர்பாக ஒரு கூட்டத்தை கூட்டினார் என்றும், அந்தக் கூட்டத்தில் கேரள முதல்வர் கலந்து கொண்டார் என்றும், நான் கலந்து கொள்ளவில்லை என்றும் என்மீது ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டைத் தொடுத்துள்ளார்.

ஒரு முதல்வர் மீது, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தும்போது, அது உண்மைதானா என்பதைத் தெரிந்து கொண்டு குற்றச்சாட்டைச் சொல்ல வேண்டாமா? அவருடைய அறிக்கைகளுக்குப் பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை தான். ஆனாலும் திரும்ப, திரும்ப பொய்களையே சொல்லி, அதை பத்திரிகைகளும் வெளியிடுகின்ற காரணத்தால், பதில் சொல்லாமல் இருந்து விட்டால் அவர் சொன்னது உண்மையாகி விடாதா?

கிண்டல் வேறு...

அறிக்கை விடுவதிலே கிண்டல் வேறு! மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் மத்திய அமைச்சரவையில் வளம் கொழிக்கும் இலாகாக்களை கேட்க கருணாநிதிக்கு நேரம் இருக்கும், மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கூட்டிய கூட்டத்திற்கு ஏன் போகவில்லை என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு இதோ எனது பதில்:- மத்திய நீர்வள ஆதார அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் 29.11.2006 அன்று டெல்லியில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் முதல்வர் என்ற முறையில் நானும், அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியும், தலைமைச் செயலாளரும் மற்றும் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டோம் என்பது உண்மை.

அந்தக் கூட்டத்தில் நான் உரையாற்றி, பத்திரிகைகளிலே அப்போதே வெளிவந்துள்ளது. கூட்டத்தில் நான் கலந்து கொண்ட புகைப்படமும் வெளிவந்தது. கூட்டத்திற்குபிறகு டெல்லியிலும், சென்னையிலும் இந்தப் பிரச்சினை குறித்து விரிவாக செய்தியாளர்களிடம் பேசி அதுவும் பத்திரிகைகளிலே வெளிவந்துள்ளது.

அவசரக் குடுக்கைத்தனமாக அந்தத் தேதிய பத்திரிகைகளை கூட புரட்டிப் பார்க்காமல், ஜெயலலிதா என்னைக் குற்றஞ்சாட்டி அறிக்கை கொடுத்துள்ளார். நான் அந்தக் கூட்டத்தில் எனது தொடக்க உரையில், அணை வலுவாக உள்ளது என்றும், அணை பாதுகாப்பு குறித்து பீதியோ அல்லது குழப்பமோ அடைய எத்தகைய முகாந்திரமும் இல்லை என்றும், உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று அளித்த ஆணையை செயல்படுத்த கேரள அரசு முழு மனதுடன் ஒத்துழைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தேன். எனவே, நான் கலந்து கொள்ளவில்லை என்று ஜெயலலிதா கூறுவது கடைந்தெடுத்த பொய்.

அந்தக் கூட்டத்தில் கேரள அரசின் சார்பில் பேசிய முதல்வர் முதன் முதலாக புதிய அணை கட்டுவதுதான் இப் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்றார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் பதில் அளிக்கையில், 1979-ம் ஆண்டே புதிய அணை கட்டுவது குறித்து பரிசீலிக்கப்பட்டு, பின்னர் சாத்தியமில்லை என்று கருதி கைவிடப்பட்டது என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தக் கூட்டத்திற்கான நடவடிக்கை குறிப்பினை மத்திய அரசே தனது 8.12.2006-ந் தேதி கடிதத்தில் இணைத்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

"புதிய அணை கட்டும் விவகாரத்தை பொருத்தவரை, 1979-ம் ஆண்டிலேயே பரிசீலிக்கப்பட்டு, கைவிடப்பட்டது''.

அதன்பிறகு கேரள அரசின் நீர்பாசனத்துறை அமைச்சர் புதிய அணை கட்டுவதுதான் இப்பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்பதை மீண்டும் வலியுறுத்தியபோது, தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் பதில் அளித்தார்.

"புதிய அணை கட்டுவது பற்றி ஏற்கனவே விவாதிக்கப்பட்டுஅது நடைமுறைப்படுத்தும் காரியம் அல்ல என்று முடிவு செய்யப்பட்டதாக'' தலைமை செயலாளர் கூறினார்.

மேலும் இதுபற்றி விவரங்களைக் கூறுகிறேன். உச்சநீதிமன்றத்தின் 25.9.2006 தேதியின் ஆணைப்படி மத்திய நீர்வள ஆதார அமைச்சர், தமிழக-கேரள அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கலந்துகொள்வது குறித்து- 23.10.2006 அன்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்றை நான் கூட்டியிருந்தேன்.

அக்கூட்டத்தில், அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவுக்கு சந்தேகம் இருக்குமேயானால் அவர்களை அழைத்துக் கேட்டுத் தெரிந்துகொண்டு இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கலாமே!

அந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒரு தீர்மானமும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானம் வருமாறு:-

"முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்து தமிழக அரசின் சார்பாக எடுத்து வைத்த நியாயங்களை ஏற்றுக்கொண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கு முன்வராத கேரள அரசின் போக்கைக் சுட்டிக்காட்டி, உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நல்லெண்ண சமிக்ஞையாக மத்திய அரசு முன்னிலையில் தமிழக அரசு, கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இக்கூட்டம் இணக்கம் தெரிவிக்கிறது; என்றாலும் அதிலும் உரிய பலன் கிடைக்காத பட்சத்தில் மீண்டும் உடனடியாக உச்சநீதிமன்றத்தையே அணுகி, உச்சநீதிமன்றம் 27.2.2006-ல் பிறப்பித்த உத்தரவான, அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடிக்கு உயர்த்திக் கொள்ளலாம் என்பதையும்;

அணையை பலப்படுத்தும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும் போது கேரள அரசு முழு ஒத்துழைப்பு அளிப்பதுடன், தமிழக அரசுக்கு, கேரள அரசு அதிகாரிகள் எந்தவித இடையூறையும் ஏற்படுத்தக் கூடாது என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று உத்தரவளிக்குமாறு முறையீடு செய்து கொள்வதென்றும்;

அத்தகைய உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அனைத்துக் கட்சித தலைவர்களின் இந்தக் கூட்டம் கேட்டுக்கொள்கிறது'' என்று தீர்மானமும் நிறைவேற்றியிருக்கிறோம்.

அடுத்து, ஜெயலலிதா அவருடைய அறிக்கையிலே 16.9.09 அன்று மீண்டும் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற தேசிய உயிரினங்கள் வாரியத்தின் நிலைக்குழு கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைக் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டதாகவும், அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பிலே யாருமே கலந்து கொள்ளாதது வியப்பளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இதுவும் உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளாமல் குற்றஞ்சாட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் எழுதியிருக்கிறார்.

தேசிய வனவிலங்கு வாரியத்தின் நிலைக்குழு என்பது 1972-ம் ஆண்டைய வனவிலங்கு சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிலைக்குழுவின் தலைவராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சரும், சுழற்சி முறையில் ஒரிசா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் பிரதிநிதிகள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நிலைக்குழு கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் எவர் ஒருவரும் உறுப்பினராக இல்லை. ஏதாவது ஒரு மாநிலத்திலிருந்து வன நிலங்களை வனம் சாராத பிற பணிகளுக்கு பயன்படுத்த மாநில அரசின் பரிந்துரையுடன் கருத்துரு பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட மாநில தலைமை வன உயிரினக் காப்பாளரை மட்டுமே குழுவின் கூட்டத்திற்கு அழைத்து கலந்து முடிவெடுக்கப்படும்.

பொய்களை மூட்டையாக்கி ...

16.9.09 அன்று நடத்தப்பட்ட கூட்டமானது கேரள மாநிலம் அனுப்பிய கருத்துரு குறித்தும், வேறு சில மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் பற்றியும் விவாதிப்பதற்காக என்பதால், அந்தக் கூட்டத்திற்கு தமிழக அரசின் தலைமை வன உயிரினக் காப்பாளருக்கு அழைப்பிதழ் எதுவும் அனுப்பப்படவில்லை. ஆகவே, தமிழகத்தின் சார்பில் யாரும் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், அந்த கூட்டத்தில் கேரள அரசுக்கு ஆய்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக பத்திரிகைகளில் ஒரு செய்தி வந்தவுடன் 22.9.09 அன்று நான் மத்திய இணை அமைச்சர் ஜெயராம் ரமேசுக்கு கடிதம் எழுதினேன். தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் ஆய்வு நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டேன். அதையும் மீறி 6.10.09 அன்று ஆய்வு நடத்த கேரள அரசுக்கு, மத்திய இணை அமைச்சர் ஒப்புதல் வழங்கிவிட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் இந்திய பிரதமருக்கு விரிவாக 8.10.09 அன்று கடிதம் எழுதினேன். அதற்கு முன்பாகவே 7.10.09 அன்றே உச்சநீதிமன்றத்திலும் தடையாணை வழங்க தமிழக அரசின் சார்பில் மனுதாக்கல் செய்தோம். அந்த விசாரணை வரும் 20-ந் தேதி உச்சநீதிமன்றத்திலே வரவுள்ளது.

உண்மை இவ்வாறிருக்க, ஜெயலலிதா பொய்களை மூட்டையாக்கி விற்க முனைந்துள்ளார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

இதுதான் கடைசிக் கடிதம்...

ஜெயலலிதா போன்றவர்களுக்காக நான் எழுதும் கடைசிக் கடிதம் இதுதான்- எத்தனை சொன்னாலும் எழுதினாலும் வளைந்த வாலை நிமிர்த்த முடியாது; ஆகவே, இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X