32 பேரை பலி கொண்ட பள்ளிப்பட்டு பட்டாசு விபத்து: 3 பேர் கைது-7 பேர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பஜார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (40). இவர் பள்ளிப்பட்டு சோளிங்கர் ரோட்டில் உள்ள அரிசி ஆலைக்கு சொந்தமான இடத்தை வாடகைக்கு எடுத்து அதில், தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு வாங்கி வைத்து இருந்தார். அந்த குடோனிலேயே பட்டாசு வியாபாரம் செய்து வந்தார்.
வியாழக்கிழமை இரவு அங்கு பட்டாசு வியாபாரம் களை கட்டியிருந்தது. அப்போது இரவு 7 மணியளவில், திடீரென்று பறந்த தீப்பொறியால் குடோனில் தீப்பிடித்தது. இதனால் பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.
இதனால் பட்டாசு வாங்க வந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அப்போது ஏற்பட்ட நெரிசலில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். எங்கும் ஒரே சத்தமாக இருந்தது.
தீப்பிடித்துக் கொண்டதும் கடையில் இருந்த பலர் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து உயிர் தப்பினார்கள். என்றாலும் பலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியே வர முடியவில்லை.
தகவல் அறிந்ததும் பள்ளிப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி 10 மணி அளவில் தீயை அணைத்து முடித்தனர்.
குடோனில் அறை போன்று இருந்த பகுதியில் குவியலாக பிணங்கள் கிடந்தன. ஏராளமான உடல்கள் கருகிய நிலையில் அடையாளம் தெரியாத அளவுக்கு எலும்புக்கூடாக கிடந்தன. சிலருடைய மண்டை ஓடுகள் தனியாக கிடந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேரும், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். மொத்தமாக பட்டாசு வாங்க இங்கு வந்திருந்தனர்.
3 பேர் கைது
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சித் தலைவர் பழனிக்குமார், 32 பேர் இறந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றார். பெரும்பாலான உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிப் போய் விட்டன. இறந்தவர்களில் 27 பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். ஐந்து பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று வரை 31 உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை உறவினர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
விபத்து நடந்த குடோனின் உரிமையாளர் அனந்தகுமார், அரிசி ஆலையின் உரிமையாளர் ஜெயசங்கர், குடோன் ஊழியர் மது ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். 2 பேரைத் தேடி வருகின்றனர்.
7 அதிகாரிகள் சஸ்பெண்ட்...
இந்த நிலையில், பள்ளிப்பட்டு தாசில்தார் ஜான் பெல்லர்மின், துணை தாசில்தார் சங்கரி, வருவாய் ஆய்வாளர் அருண்குமார், வெளி அகரம் பகுதி வி.ஏ.ஓ. சையத் பாபு, ஆர்.கே. பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், சிறப்பு எஸ்.ஐ. கோபால், ஏட்டு பாலு ஆகியோர் முறையான கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளாததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திராவில் பட்டாசு விலை அதிகம். எனவே, குறைந்த விலையில் விற்கப்படுகிறது என்பதற்காக அங்கிருந்து பெருமளவிலானோர் பள்ளிப்பட்டுக்கு வந்துள்ளனர். இதனால்தான் உயிர்ப்பலியும் அதிகரித்து விட்டது.
சிறுவனால் வந்த வினை...
விபத்து நடந்த குடோன் பகுதியில் பட்டாசு வாங்க வந்த ஒரு சிறுவனிடம் அவனது வீட்டார் கலர் தீப்பெட்டி வாங்கிக் கொடுத்துள்ளனர். அதை வைத்து அவன் எரித்து விளையாடியுள்ளான். அப்போது தவறுதலாக பட்டாசுப் பெட்டிகளின் மீது தீக்குச்சி விழுந்ததால் தீப்பிடித்துக் கொண்டது. இதுவே விபத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.
விபத்து ஏற்படக் காரணமாக இருந்த அந்த சிறுவனும் பரிதாபமாக உயிரிழந்து போனான் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து நடந்தபோது, தீ பட்டு அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டது. இதனால் கிட்டத்தட்ட 40 கிராமங்களுக்கு மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு அந்தப் பிராந்தியமே இருளில் மூழ்கியது.
ரூ. 1 லட்சம் இழப்பீடு...
தீ விபத்தில் இறந்த 32 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதற்கு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் பழனிகுமார் வெளியிட்ட அறிக்கையில், பள்ளிப்பட்டில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிர் இழந்துள்ளனர். அதில் 27 பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதமுள்ள 5 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்திருந்தார்.
அமைதி ஊர்வலம் ...
உயிரிழந்த 32 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று பள்ளிப்பட்டில் அமைதி ஊர்வலம் நடந்தது. ஏராளமான மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
3 லட்சம் தர ஜெ கோரிக்கை:
இந் நிலையில் இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.