For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாநாடு-அரசியல் உள்நோக்கம் இல்லை: கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தைப் புறக்கணித்து விட்டு கழக அரசு எந்தக் காரியத்தைச் செய்தாலும் ஏகடியம் செய்வதும்; நாளுக்கொரு அறிக்கை வெளியிடுவதும் எதிர்க் கட்சியின் தலைவி அம்மையார் ஜெயலலிதாவின் அன்றாட நடைமுறையாகிவிட்டது.

கோவையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைப் பற்றி அவர் அறிக்கை எழுதியுள்ளார். உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது “சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்" தான் என்று அவர் தனது அறிக்கையிலே குறிப்பிட்டிருக்கிறார்.

அப்படி அவர் குறிப்பிட்டிருப்பது அவர் ஆட்சியில் அவர் தஞ்சையில் நடத்திய 8வது உலகத்தமிழ் மாநாட்டுக்கே எந்த வகையிலும் முன்மாதிரியாக அமைந்திடவில்லை.

அதிமுக ஆட்சியில் 1993-94ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், “எட்டாம் உலகத் தமிழ் மாநாடு 1994ல் தமிழ்நாட்டில் நடைபெறும் என்பதை அறிவதில் இம்மன்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சியடைவார்கள்" என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி 8ம் உலகத் தமிழ் மாநாடு 1994ம் ஆண்டில் நடத்தப்படவில்லை. மீண்டும் 1994-95ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், “8வது உலகத் தமிழ் மாநாடு தஞ்சாவூரில் 1995ம் ஆண்டு ஜனவரித் திங்கள் 1ம் நாள் அன்று நடத்தப்படவிருக்கிறது என்பதை அறிவதில் இம்மாமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்கள் பெருமகிழ்ச்சியடைவர்" என்று அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக செய்யப்பட்ட இந்த அறிவிப்பின்படிதான் தஞ்சையில் 1995ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 8ம் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்பட்டது.

இரண்டு நிதிநிலை அறிக்கைகளில் உலகத் தமிழ் மாநாடு குறித்து அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட அறிவிப்பு தன்னிச்சையான அறிவிப்பே தவிர; உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான் என்று ஜெயலலிதா தற்போது குறிப்பிட்டிருப்பதைப் போல அப்போது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் அறிவிக்கவில்லை.

உபதேசம் அனைத்தும் மற்றவர்களுக்குத்தானே தவிர அவர்களுக்கில்லை!.

நமக்குத் தரப்பட்டுள்ள தகவலின்படி, உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பின்னரே உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் தலைவர் நொபுரு கரஷிமாவை தொடர்பு கொண்டு, அவர் அப்போது இந்தியாவிலே இருப்பது அறிந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து அன்றைய நிதியமைச்சர் நெடுஞ்செழியன் அவருக்கு மாநாடு பற்றி தெரிவித்தார்.

இப்போது கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு உலகத்தமிழ் ஆய்வுக் கழகத்தின் துணைத் தலைவராக விளங்கும் முனைவர் வா.செ. குழந்தைசாமியையும், பொருளாளர் இரா. முத்துக்குமாரசாமியையும், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்புராயலுவையும், உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தில் நெடுங்காலமாக இணைந்து ஆய்வு செய்துவரும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனையும் கலந்து பேசியே மாநாட்டுத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டன.

கட்டுரை தயாரித்திட ஆய்வாளர்களுக்குப் போதிய கால அவகாசம் கூடுதலாகத் தேவைப்படும் என்றும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் விடுமுறைக்காலம் ஜூன் - ஜூலையில் அமைகிறது என்பதாலும், 2010 ஜனவரிக்குப் பதிலாக, 2010 ஜூன்- ஜூலையில் மாநாட்டை நடத்தலாம் என்று தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆய்வாளர்களின் கோரிக்கையை ஏற்றே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகத் தமிழ் ஆய்வுக்கழகத்தின் தலைவராக உள்ள நொபுரு கரஷிமா தமிழகத்தில் மாநாட்டினை 2011 ஜனவரி மாதத்தில் நடத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், 2011 ஏப்ரல்- மே மாதங்களில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதால்; அவரது கருத்தினை ஏற்றுச் செயல்படுவதில் உள்ள பிரச்சினைகள் தமிழறிஞர்களுக்கு விளக்கப்பட்டு; அவர்களும் அதனை முழு மனதோடு ஏற்றுக்கொண்டு தமிழக அரசின் முயற்சிகளுக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்குவதாக உறுதியளித்துள்ளார்கள்.

உலகத் தமிழ் ஆய்வுக் கழகத்தின் பொறுப்புகளில் உள்ள 9 பேரில் 6 பேர் இசைவளித்துள்ள நிலையிலும், உலக அளவிலும், இந்தியாவிலும் வாழக்கூடிய தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களுமாக 50க்கும் மேற்பட்டோர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டினை நடத்திட முன்வந்ததற்குப் பாராட்டினையும், 2010 ஜூன் மாதத்தில் மாநாட்டை நடத்த முடிவெடுத்ததற்கு நன்றியினையும் தெரிவித்து கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் முக்கியக் கூறாக இருப்பது ஆய்வரங்கம். உலக அளவில் ஆய்வாளர்களைக் கொண்டு நடத்தப் பெறத் திட்டமிடப்பட்டுள்ள தரம் மிக்க கட்டுரைகளைக் கொண்ட தாகத் திகழவிருக்கின்ற ஆய்வரங்க அமைப்புக் குழு உலகளாவிய நிலையில் ஒருமித்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் இலங்கைப் பேராசிரியர் முனைவர் கா. சிவத்தம்பி அவர்களைத் தலைவராகக் கொண்டும்; முனைவர் அவ்வை நடராஜன், முனைவர் பொற்கோ ஆகி யோரை இணைத் தலைவர்களாகக் கொண்டும் அமைக்கப்பட்டிருக்கிறது.

1995க்குப் பிறகு கடந்த 14 ஆண்டுகளாக உலகின் எந்தப் பகுதியிலும் தமிழுக்கென்று ஒரு மாநாடு நடைபெறவில்லையே எனும் பெரும் குறையைத் துடைத்திடவும்; அண்மைக்கால தொல்லியல், வரலாற்றியல், மொழியியல் ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு தமிழ் மொழி இலக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கும்; உலகளாவிய நிலையில் தமிழ் மொழி இலக்கியப் பண்பாடு தொடர்பான ஆய்வாளர்களை ஒருங்கிணைப்பதற்கும்; அவர்கள் அனைவரும் ஓரிடத்திலே கூடிச் சிந்திப்பதற்கும் வசதியாகத்தான் இந்த மாநாட்டை தமிழக அரசு நடத்த முன்வந்திருக்கிறது.

தமிழர்களின் நூறாண்டு கனவாக இருந்து வந்ததும், தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் முதலாக தொடர்ந்து காலந்தோறும் தமிழுக்குச் செம்மொழித் தகுதி வேண்டிப் போராடி வந்த நிலையிலும், 2004ம் ஆண்டு தமிழுக்குச் செம்மொழித் தகுதியை திராவிட முன்னேற்றக் கழகம் பங்கு பெற்றிருக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழங்கிப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையிலும், கடந்த மாநாடுகளை விட வும் இந்த மாநாட்டிற்கு ஒரு தனிப்பெரும் சிறப்பு சேர்ந்திருக்கிறது.

எனவே, கடந்த மாநாடுகள் தமிழ் மாநாடுகளாக நடை பெற்றிருக்க, தமிழ்ச் செம்மொழித் தமிழாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாநாட்டை - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு- என்று நடத்துவதே பொருத்தம் என்று தமிழ் அறிஞர்களும், ஆய்வாளர்களும் கருதியதன் அடிப்படையிலும்தான் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதில் வேறு அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை என்பதைத் தொடக்கம் முதலே இம்முயற்சியில் இணைந்து பணியாற்றிவரும் தமிழறிஞர்கள் அனைவரும் நன்றாகவே அறிவார்கள்.

தமிழ், தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆய்வு, தமிழ் அறிஞர்கள் தொடர்பானவற்றில் ஜெயலலிதா போன்றவர்கள், முதன்மையான எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X