For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் உதவி-நெகிழ்ச்சியில் அழுத அக்ரம்

Google Oneindia Tamil News

Akram
சென்னை: உயிருக்குப் போராடி வந்த தனது மனைவிக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னையில் ஆம்புலன்ஸ் வி்மானம் தரையிறங்க அனுமதி அளித்த இந்தியாவின் பெரும் உதவியால் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் நெகிழ்ச்சி அடைந்துள்ளார். தன்னை வந்து சந்தித்த கபில் தேவ் ஆறுதல் கூறியபோது உணர்ச்சி வசப்பட்டு அழுது விட்டார்.

வாசிம் அக்ரமின் மனைவி ஹூமா. இவருக்கு மூளையில் கட்டி உள்ளது. இதற்காக சிகிச்சை அளிப்பதற்காக அக்ரம், ஹூமா, ஹூமாவின் சகோதரர், டாக்டர்கள் அடங்கிய குழு பாகிஸ்தானிலிருந்து ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் கிளம்பினர்.

வழியில் சிங்கப்பூரில், எரிபொருள் நிரப்பும் திட்டம் இருந்தது. இந்த நிலையில் நடு வானில் ஹூமாவின் உடல் நிலை மோசமடைந்தது. இதையடுத்து சென்னையில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

உடனடியாக விமானத்திலிருந்து இறக்கப்பட்ட ஹூமா, அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாசிம் அக்ரம் பார்க் ஷெராட்டன் ஹோட்டலில் தங்கியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் குழுத் தலைவர் ஸ்ரீகாந்த்தின் மகன் திருமணத்திற்காக சென்னை வந்திருந்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், நேற்று ஹோட்டலுக்குச் சென்று அக்மரை சந்தித்தார்.

அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினார். அப்போது வாசிம் அக்ரம் உணர்ச்சிவசப்பட்டு அழுது விட்டார். அவரை ஆறுதல்படுததிய கபில் தேவ், உங்களுக்காகவும், ஹூமாவுக்காகவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்றார் கபில்.

அப்போது வாசிம் அக்ரம் கபிலிடம் கூறுகையில், இந்தியாவுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இங்கே இறங்க எங்களை அனுமதித்ததன் மூலம் எங்களது நெஞ்சங்களை அவர்கள் நிறைத்து விட்டார்கள். இந்தியாவுக்குத் தலை வணங்குகிறேன். என்னால் இதற்கு மேல் சொல்ல முடியவில்லை என்று கூறி கலங்கினாராம் அக்ரம்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள மருத்துவ வசதிகளின் அலங்கோலத்தையும் விவரித்து கலங்கியுள்ளார் அக்ரம். ஹூமாவை, பாகிஸ்தான் மருத்துவமனையில் சேர்த்திருந்தபோது, கிட்டத்தட்ட 2 வாரங்களுக்கு வீங்கிய வயிறுடன், படுக்கையிலேயே கிடத்தி வைத்திருந்தனராம்.

சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் 2 நாட்களுக்கு ஹூமாவை மயக்க நிலையி்ல் வைத்திருந்தனர். தற்போது அவரது நிலை ஸ்திரமாக இருந்தாலும், இன்னும் மயக்க நிலையிலிருந்து அவர் மீளவில்லை. இன்று மாலைவாக்கில் அவருக்கு நினைவு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்ரமை சந்தித்தது குறித்து கபில் கூறுகையில், மிகவும் வேதனையாக உள்ளது. அக்ரமுக்காவும், அவரது மனைவிக்காகவும் நாங்கள் எல்லோரும் பிரார்த்திக்கிறோம்.

ஆனால் இங்கு நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அக்ரம் வந்த ஆம்புலன்ஸ் விமானம் இந்தியாவில் இறங்க நாம் எவ்வளவு வேகமாக அனுமதி அளித்தோம். மின்னல் வேகத்தில் அனைத்தும் நடந்தது. இன்று ஹூமாவுக்கு நல்ல சிகிச்சை தரப்பட்டு வருகிறது.

ஆனால் நமது வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் விமானம் மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தானில் தரையிறங்கியபோது, அவரை விமானத்தை விட்டு வெளியேற அந்த நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.

மனிதாபிமான முகத்தை இன்று நாம் பாகிஸ்தானுக்குக் காட்டியுள்ளோம். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மிகச் சிறந்த மருத்துவக் கரங்களில் தற்போது ஹூமா உள்ளார். சிங்கப்பூரை விட சிறந்த மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைக்கு அவர் வந்திருப்பதாகவே நான் கருதுகிறேன். இது எனக்கு மகிழ்ச்சி தருகிறது என்றார் கபில்.

கபில், அக்ரம் இருவரிடமும் ஒரு முக்கிய ஒற்றுமை உள்ளது. இருவருமே பஞ்சாபிகள். ஆனால் இடையில் போடப்பட்ட எல்லைக் கோடு இருவரையும் இரு நாட்டுக்காரர்களாக்கி விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X