For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: நடந்தது என்ன?..சிபிஐ கையில் எடுத்தது ஏன்?

Google Oneindia Tamil News

CBI Building
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் நடந்த ஊழலில் தொலைத் தொடர்புத்துறையின் வயர்லெஸ் பிளானிங் செல் மற்றும் அக்ஸெஸ் சர்வீசஸ் பிரிவின் அதிகாரிகளுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிபிஐ கருதுகிறது.

இதனால் தான் வயர்லெஸ் பிளானிங் செல் மற்றும் அக்ஸெஸ் சர்வீசஸ் (Access Services) பிரிவின் துணை இயக்குனர் ஜெனரல் அலுவலகங்களில் நேற்று சிபிஐ ரெய்ட் நடத்தியுள்ளது.

டெல்லி சஞ்சார் பவனில் உள்ள இந்த இரு அலுவலகங்களும் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்கள் ஆகும்.

நேற்று காலை 10 மணிக்கு ஆரம்பித்த இந்த ரெய்ட் இரவு 8 மணி வரை நீடித்தது. ஆனால், மாலை 6 மணியளவில் தான் இந்த ரெய்ட் தகவல் வெளியில் தெரிந்தது.

அதே நேரத்தில் அக்ஸெஸ் சர்வீசஸ் துணை இயக்குனர் ஜெனரல்களான ஸ்ரீவஸ்தவ், பி.கே.மிட்டல், வயர்லெஸ் பிரிவின் ஆலோசகர் அசோக் சந்திரா உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகளையும் சிபிஐ தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளது.

முன்னதாக நேற்று முன் தினம் இரவு இது தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷன் உத்தரவுப்படி தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள், சில தனி நபர்கள் ஆகியோர் மீது சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்தது. இந்த எப்ஐஆரில் அமைச்சர் ராஜாவி்ன் பெயர் இல்லை.

அதே நேரத்தில் யார் இந்த தனி நபர்கள் யார் என்ற தகவலை சிபிஐ வெளியிடவில்லை.

இந்த தனி நபர்களும், அதிகாரிகளும், சில தனியார் செல்போன் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கொண்டு ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் விலையைக் குறைத்துள்ளனர் என்று சிபிஐ கருதுகிறது.

இதனால் அரசுக்கு ரூ. 22,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.

ஸ்பெக்ட்ரம் விலையை தொலைத் தொடர்புத்துறை மிகவும் குறைத்து விற்றதன்மூலம் செல்போன் நிறுவனங்களுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளது. இதற்காக பெரும் அளவில் லஞ்சத்தை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனங்கள் வழங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த விலை குறைப்பு, லஞ்சம் கைமாற்றுதல் ஆகிய வேலைகளில் சில தனி நபர்கள் இடைத் தரகர்களாக செயல்பட்டு இருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது.

குறிப்பாக ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் சர்வீஸஸ் ஆகிய இரு செல்போன் சேவை நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதில் தான் ஏகப்பட்ட சந்தேகங்கள் முளைத்துள்ளன.

இந்தியாவில் கிளைகளைக் கூட ஆரம்பிக்காத இந்த இரு நிறுவனங்களுக்கும் அடிமாட்டு விலைக்கு, அதாவது ரூ. 1,651 கோடிக்கு அலைவரிசைகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், இதை வாங்கிய வேகததில் இந்த இரு நிறுவனங்களின் பங்குகளையும் இரு பெரிய நிறுவனங்கள் பெரிய விலை கொடுத்து வாங்கின.

அதாவது யூனிடெக் நிறுவனத்தின் பங்குகளை நார்வேயைச் சேர்ந்த டெலிநோர் என்ற நிறுவனம் ரூ. 9,000 கோடிக்கும், ஸ்வான் நிறுவனத்தி்ன் பங்குகளை ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த எடிசலாட் நிறுவனம் ரூ. 10,000 கோடிக்கும் வாங்கின.

இந்த நிறுவனங்களில் டெலிநோர் மற்றும் எடிசலாட் ஆகியவை இவ்வளவு முதலீடு செய்ததற்குக் காரணம் அவற்றிடம் இருந்த ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தான் என்கிறார்கள்.

அதாவது, லைசென்ஸை வெறும் ரூ. 1,651 கோடிக்கு வாங்கிய இந்த நிறுவனங்கள் அதை டெலிநோர் மற்றும் எடிசலாட் நிறுவனங்களுக்கு 6 முதல் 8 மடங்கு விலைக்கு விற்றுவிட்டன என்பதே இதற்கு அர்த்தம் என்கிறார்கள்.

இதன்மூலம் யூனிடெக் மற்றும் ஸ்வான் அடைந்துள்ள லாபம் ரூ. 20,000 கோடி முதல் ரூ. 22,000 கோடி வரை. எனவே இந்த அலைவரிசைகளின் உண்மையான விலை ரூ. 20,000 கோடி முதல் ரூ. 22,000 கோடி வரை.

இதே விலைக்கு அலைவரிசைகளை தொலைத் தொடர்புத்துறை விற்றிருக்கலாமே.. அதை ஏன் வெறும் ரூ. 1,650 கோடிக்கு விற்றனர் என்பது தான் மத்திய விஜிலென்ஸ் கமிஷன் எழுப்பியுள்ள கேள்வி.

இந்த இரு நிறுவனங்கள் தவிர மேலும் 120 நிறுவனங்களுக்கு தொலைத் தொடர்புத்துறை 2 ஜி அலைவரிசையை ரூ. 9,000 கோடிக்கு விற்றது. ஆனால், அதன் உண்மையான விலை ரூ. 60,000 கோடி என்கிறார்கள். எனவே மொத்தத்தில் ரூ. 60,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பை தொலைத் தொடர்புத்துறை ஏற்படுத்தியுள்ளது என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

இந்த 120 நிறுவனங்களுக்கான லைசென்ஸ் வழங்கும் உத்தரவில் கையெழுத்து போட மறுத்தாராம் முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் மாத்தூர். இதையடுத்து அவரைத் தூக்கிவிட்டு வேறு ஒரு செயலாளரை நியமித்து கையெழுத்து போட வைத்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

575 நிறுவனங்கள் லைசென்ஸ் கேட்டு வரிசையில் நிற்க இந்த 120 நிறுவனங்களை எப்படி தேர்வு செய்தீர்கள் என்ற கேள்விக்கு தொலைத் தொடர்புத்துறை ஒரு கேலிக்கூத்தான விளக்கத்தைத் தந்துள்ளது.

முறையாக ஏலம் விட்டு அதை விற்காமல், யார் முதலில் கேட்கிறார்களோ அவர்களுக்கே முதலில் லைசென்ஸ் என்ற வழிமுறையைப் பின்பற்றியது. அதாவது இந்த 575 பேரில் முதலில் வந்த 120 விண்ணப்பதாரர்களுக்கு லைசென்ஸ் தரப்பட்டதாம்.

(மேலும் விண்ணப்பிக்க கடைசி தேதியாக 2007ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி வரை முதலில் நாள் அறிவிக்கப்பட்டது. திடீரென செப்டம்பர் 25ம் தேதி தான் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் யாருக்கோ தொலைத் தொடர்புத்துறை உதவியிருக்கிறது என்ற குற்றமும் முன் வைக்கப்படுகிறது.)

இந்த வழியில் ஸ்பெக்ட்ரத்தை விற்காமல், அதை ஏலம் மூலம் விட்டிருந்தால் 575 நிறுவனங்களும் மோதியிருக்கும். இதன்மூலம் பல மடங்கு பணத்தை ஈட்டியிருக்க முடியும். அதைவிட்டுவிட்டு, யூனிடெக், ஸ்வான் முதலில் வந்தார்கள். எனவே அவர்களுக்கு முதலில் லைசென்ஸை விற்றோம் என்று விளக்கம் தருகிறது தொலைத் தொடர்புத்துறை. இது மத்திய தொலைத் தொடர்பு ஆணையம் (TRAI) காட்டிய வழிமுறை தான் என்கிறார் அமைச்சர் ராஜா.

ஆனால், அப்படியெல்லாம் முதலில் வருபவர்களுக்கு முதலில் லைசென்ஸ் தர வேண்டும் என்று எந்த வழிகாட்டுதலையும் நாங்கள் கூறவில்லை என்கிறது TRAI.

நாங்கள் கூறிய வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றாமல், அதில் உள்ள ஒரு பிரிவை மட்டும் பின்பற்றிவிட்டு எங்கள் மீது பழியைப் போடுகிறார்கள் என்கிறது TRAI.

இப்போது சிபிஐ விசாரிக்கும் முக்கியமான விஷயம், ஸ்வான், யூனிடெக் ஆகிய நிறுவனங்களில் நம்மவர்கள் யாருக்காவது முதலீடு இருக்கிறதா.. ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதை பெரும் லாபத்துக்கு விற்றதன் மூலம் இவர்கள் பயனடைந்தார்களா என்பதைத் தான் என்கிறார்கள் சிபிஐ வட்டாரத்தில்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X