For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்தை பார்த்து பரிதாபம்-கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: செம்மொழியாம் தமிழ் பற்றி விஜய்காந்த் வெளியிட்டுள்ள அறிக்கையை படிக்கும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் அவரைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் செய்வார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் விவரம்:

கேள்வி: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கேலி செய்து ஒரு நடிகர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?

பதில்: செம்மொழியாம் தமிழ் மொழியைப் பற்றி அவர் அறிந்தவற்றின் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையினைப் படிக்கும் தமிழ் ஆர்வலர்களும், தமிழ் அறிஞர்களும் அவரைப் பார்த்துப் பரிதாபப்படத்தான் செய்வார்கள்.

க்ரீமிலேயர் கூடாது..

கேள்வி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினருள் வருமான அடிப்படையில் முன்னேறியவர்கள் என்று வகைப்படுத்தி அவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு அந்த மாநிலத்தில் பெரும் எதிர்ப்பு தோன்றியுள்ளதே?

பதில்: சமூக ரீதியாகவும், கல்வி நிலையிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கல்வி நிலையங்களிலும், அரசு வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கம். இந்த அடிப்படை லட்சியத்திற்கு மாறான எந்த முயற்சியையும் கழகம் எதிர்த்தே வந்திருக்கிறது.

உதாரணமாக எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது 1979ம் ஆண்டில் 9000 ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்று ஆணை பிறப்பித்தபோது, வன்மையாகக் கண்டனம் தெரிவித்து எதிர்த்தோம்.

இப்போதும்கூட, மத்திய அரசு உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருள் முன்னேறிய பிரிவினர் (க்ரீமிலேயர்) என்று பகுத்து இடஒதுக்கீடு வழங்குவதற்கு நாம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் பொருளாதார அடிப்படையை புகுத்திடக் கூடாது என்பதுதான் நமது கொள்கை.

கேள்வி: மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைப் பற்றித் தங்கள் கருத்து என்ன?

பதில்: பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து; அந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்; அந்தப் பிரச்சனையை ஆராய மத்திய அரசு குழு அமைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தப் பிரச்சனையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கருத்தறிந்து, அதன் அடிப்படையில் முடிவெடுப்பதே உகந்ததாகும்.

கேள்வி: இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சி எந்த நிலையில் உள்ளது?

பதில்: இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களை அவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைப்பது 15.10.2009 அன்று தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் தமிழர்கள் அவரவர்தம் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். 21.10.2009 வரை 12,420 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக இன்று (22.10.2009) மட்டும் நான்காயிரத்து முன்னூறு பேர் முகாம்களிலிருந்து அவரவர் சொந்த வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

மேலும் சமீபத்தில் திருச்சிக்கு வருகைதந்த இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக முதல்வர் கலைஞரின் ஆலோசனைகளின்படி இலங்கைக்கு வந்த தமிழக எம்.பி.க்கள் குழுவை, முகாம்களிலிருந்த தமிழர்கள் உற்சாகமாக வரவேற்றார்கள். தமிழர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை அதிபர் ராஜபக்சே துரிதப்படுத்தியுள்ளார். தமிழகத்தில் இப் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். தமிழர்கள் குடியமர்த்தப்படுவதில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் நேரில் வந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

ஆனால், இதுபோன்ற விடுவிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்று இலங்கையிலிருந்து வரும் சுயேச்சையான அறிவிப்புகள் தெரிவிக்கின்றன என்று ஐயப்பாடுள்ள அறிக்கை வெளியிட்டவர்களும், தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில பத்திரிகையாளர்களும் இலங்கையில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் படிப்படியாக அவரவர்தம் வாழ்விடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X