For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள் இடஒதுக்கீடு: மருத்துவம், பிஇ-அதிக இடங்கள் பிடித்த அருந்ததியர்

Google Oneindia Tamil News

சென்னை: தாழ்த்தப்பட்டவர்களில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அந்த சமூகத்தைச் சேர்ந்த மாணவ- மணவிகள் மருத்துவ கல்லூரிகளில் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன. அதே போல பொறியியல் கல்லூரிகளில் அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மனித மலத்தைக் கைகளால் அள்ளி, தலையால் சுமந்தும்; கழிவு நீருக்குள் மூச்சடக்கி மூழ்கியும்; குப்பை கூளங்களை அகற்றி, சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தியும்; தாழ்த்தப்பட்டோருள் மிகவும் தாழ்த்தப்பட்டோராய்- கடைசிப் பிரிவினருள் கடைக்கோடிப் பிரிவினராய் வாழ்ந்துவரும் அருந்ததியர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்குச் சிறப்புச் சலுகைகள் அளிப்பது அவசியம் எனக் கருதி, அதற்காக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனத்தைக் கொண்ட ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம், அருந்ததியருக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அனைத்துப் பரிமாணங்களையும் விரிவான முறையில் ஆய்வு செய்து; அருந்ததியர் எனப்படுவோருள், அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா, தோட்டி ஆகிய பிரிவினரையும் உள்ளடக்கி; அவர்களின் மொத்த மக்கள் தொகை அடிப்படையில்; தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 18 சதவீத இடஒதுக்கீட்டில், 3 சதவீத உள் ஒதுக்கீட்டினை வழங்கலாம் என்று பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அருந்ததியர் என்கின்ற சமுதாயத் தொகுப்பின்கீழ் இடம்பெற்றுள்ள அருந்ததியர், சக்கிலியர், மாதாரி, ஆதிஆந்திரர், பகடை, மடிகா மற்றும் தோட்டி ஆகிய பிரிவினரை உள்ளடக்கி 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது.

இதற்கான சட்டம் 26.2.2009 அன்று சட்டப்பேரவையில் அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தாக்கல் செய்யப்பட்டு, அன்றே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இப்படி நிறைவேற்றப்பட்டது எப்படிப்பட்ட சூழ்நிலையில் தெரியுமா?. நான் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, படுத்த படுக்கையில் இருந்த நிலையில் அருந்ததியருக்கு உள் ஒதுக்கீட்டுக்கான மசோதாவை முன்மொழிந்து பின்வருமாறு முன்னுரை எழுதி அனுப்பி வைத்திருந்தேன்:

''இன்று வந்து உங்களை சந்திப்பதாக இருந்தும்கூட டெல்லி மருத்துவரும் சென்னை மருத்துவ நண்பர்கள் குழுவும் அளித்த அறிவுரையாலும், அச்சுறுத்தலாலும் வர இயலவில்லை. மன்னிக்க வேண்டுகிறேன்.

நிமிர முடியாமலும், திரும்ப முடியாமலும் "நங்கூரம்'' போட்டது போல நரம்பிணைந்து முதுகுத் தண்டில் வலி! வலி!

ஒன்று உடல் வலி - பிறிதொன்று நீங்கள் வழங்கியுள்ள மன வலி! கருத்து மாறுபாடுகளுக்கிடையிலேயும் நீங்கள் காட்டும் கனிவு - அரசியல் மாச்சரியங்களை மீறி நீங்கள் காட்டும் அன்பு - இன்று நம்மை மீண்டும் இணைக்கிறது - தமிழ்த்தாயின் கரம் நம்மை ஒருசேர அணைக்கிறது. அறிவியக்கம் - ஆன்மிகம் - நாத்தீகம் ஆத்திகம் - இந்த வேறுபாடுகள் மாறுபாடுகள் கடந்த நன்றியுணர்வும் நன்மனித நேயமும் வளர்த்திடுவோம்.

ஆரம்பகால பொதுவுடைமைவாதி என்ற முறையிலும், பெரியார், அண்ணா, காமராஜர், ஜீவா போன்றோரின் அருமைத் தொண்டர்களில் ஒருவன் என்ற முறையிலும் - அடிமட்டத்துக்கெல்லாம் அடிமட்டமாகக் கிடந்து அவதியுறும் "மனித ஜீவன்கள்'' "அருந்ததி'' மக்கள், புதிய உலகம் - புரட்சியுகம் - காண்பதற்காக; இன்று அவையில் நான் முன்வைக்கும் சட்டமுன்வடிவை; உங்கள் ஆதரவு வழங்கி; நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்.

இங்ஙனம்,
உங்கள் அன்பு நதியில் - என்றும் நனைந்திடவே விரும்பி வாழும்;
- உங்களில் ஒருவன்,
அன்பு மறவாத
(மு.கருணாநிதி)'' என்று எழுதியிருந்தேன்.

இந்தச் சட்டம் அறிவிக்கை செய்யப்பட்டு, நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் காரணமாக சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கின்ற அந்த அருந்ததிய மக்கள் முன்னேறி வாழ்க்கையிலே வளம் பெறுவார்களேயானால், அன்றுதான் என்னுடைய உள்ளவேட்கை முழுவதுமாக நிறைவேறிய திருப்தி எனக்கு ஏற்படும் - என்று நான் எண்ணியதற்கு ஏற்ப, அருந்ததியர்களுக்கு பயன்கள் விளைந்திடத் தொடங்கியிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 2006-2007ம் ஆண்டில் அருந்ததியருக்கு மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த இடங்கள் மொத்தம் 13; 2007- 2008ம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம் 17; 2008-2009ம் ஆண்டில் கிடைத்த இடங்கள் மொத்தம் 29; ஆனால், அவர்களுக்கு 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றியதற்குப் பிறகு, 2009-2010ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கிடைத்த மொத்த இடங்கள் 56.

அதைப்போல, பொறியியல் பட்டப்படிப்பைப் பொறுத்தவரை, 2007-2008ம் ஆண்டில், (அதாவது, அவர்களுக்கு உள்ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேற்றுவதற்கு முன்பு) அருந்ததியருக்குக் கிடைத்த மொத்த இடங்கள் 744; ஆனால், உள் ஒதுக்கீட்டிற்கான சட்டம் நிறைவேறியதற்குப் பிறகு, 2009- 2010ம் ஆண்டில் பொறியியல் பட்டப்படிப்பில் அருந்ததியர் பெற்ற மொத்த இடங்கள் 1165.

இவ்வாறு உள் இடஒதுக்கீடு வழங்கியதன் காரணமாக, மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை அருந்ததியர் பெற்றுள்ள இடங்கள் 93 சதவீதம் அதிகரித்துள்ளன; அதைப்போல, பொறியியல் கல்லூரிகளைப் பொறுத்த வரை அவர்கள் பெற்றுள்ள இடங்கள் 57 சதவீதம் அதிகரித்துள்ளன.

அதே போல விரைவில் மாநகராட்சிகள் அனைத்திலும் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்குவதற்காக மனிதர்களை ஈடுபடுத்தும் அவலநிலை அகற்றப்பட்டு, இயந்திரங்கள் மூலம் தூய்மை செய்யும் பணி விரைவில் தொடங்கும்.

நாட்டில்- சமுதாயத்தில்- நலிவடைந்துள்ள மக்களை அடித்தட்டு மக்கள் எனக் குறிப்பிடுகிறோம்; இனி அவர்கள்தான்- நாட்டுக்கு, சமுதாயத்துக்கு வலிவுதரும் அடித்தள மக்கள் எனப் போற்றப்படும் நிலையை இந்த ஆட்சியில் உருவாக்கிடுவோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X