வாய்க்காலில் மூழ்கிய வேன்: தம்பதி, 2 குழந்தைகள் பலி- தற்கொலையா?
சத்தியமங்கலம்: கீழ்பவானி வாய்க்காலில் மாருதி வேன் மூழ்கியதில் கணவன், மனைவி, இரு குழந்தைகள் பலியாயினர். இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
ஈரோடு அருகே உள்ள புஞ்சை புளியம்பட்டியை சேர்ந்த ராஜப்பன் (35) போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். இவரது மனைவி ஜெயமாலா (30), குழந்தைகள் கார்த்தி (4), பிரகாஷ் (1).
நேற்றிரவு மனைவி, குழந்தைகளுடன் மாருதி வேனில் பவானி சாகர் அணைக்கட்டுக்கு சென்றுவிட்டு கீழ்பவானி வாய்க்காலை ஒட்டிய மண் ரோடு வழியாக வேனை ஓட்டிச் சென்றார் ராஜப்பன்.
அப்போது வேன், வாய்க்காலுக்குள் பாய்ந்தது. அதில் பயணம் செய்த 4 பேரும் பலியாயினர்.
தகவல் அறிந்த விவசாயிகள் கயிற்றைக் கட்டி வேனை வெளியே இழுத்து, கண்ணாடியை உடைத்து வேனுக்குள் பிணமாகக் கிடந்த நால்வரின் உடல்களையும் மீட்டனர்.
மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் இந்த சாலையில் ராஜப்பன் ஏன் வேனை ஓட்டிச் சென்றார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜப்பனுக்கு கடன் பிரச்சனை இருந்ததாகவும், இதனால் குடும்பத்துடன் தற்கொலை செய்ய வேனை வாய்க்காலுக்குள் இறக்கி இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!