For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை துறைமுக ஊழல்-சிபிஐ விசாரணை முடக்கம்?

Google Oneindia Tamil News

Ashwini kumar
சென்னை: பல கோடி ஊழல் நடந்ததாக கூறப்பட்ட சென்னை துறைமுக பொறுப்புக் கழக முன்னாள் தலைவர் சுரேஷ் மீதான சிபிஐ விசாரணையில் சில குறுக்கீடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விசாரணை முடங்கிப் போயுள்ளது.

சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவராக ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சுரேஷ் வீட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது.

இதில் ரூ 2.36 கோடி சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின்னர் வங்கி லாக்கர்களைத் திறந்து சோதனை நடத்தியதில் 5 கிலோ தங்கம், ரூ. 50 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் சிக்கின.

ஜென் ஜார்ஜியோ என்ற கப்பலை விதிமுறைகளுக்கு மாறாக சென்னை துறைமுகத்திற்குள் வர அனுமதி அளித்த வகையில் துறைமுக நிர்வாகத்துக்கு ரூ.20 கோடி வரை நஷ்டத்தை சுரேஷ் ஏற்படுத்தினார் எனக் கூறி சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்தது.

மேலும், துறைமுக தளங்கள் ஒதுக்கீடு, சேது சமுத்திர திட்டக் குளறுபடி, துறைமுக 125-வது ஆண்டு விழா கொண்டாட்டம், நிலக்கரியைக் கையாள "கன்வேயர்' அமைத்ததில் முறைகேடு எனப் பல புகார்கள் கூறப்பட்டன.

இதில் பல மிக மிக முக்கியப் புள்ளிகள் ஒட்டுமொத்தமாக சிக்கப் போகிறார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சிபிஐ விசாரணை கிட்டத்தட்ட படுத்துக் கிடக்கிறதாம். எந்தவித மேல் நடவடிக்கையையும் சிபிஐ எடுத்ததாகத் தெரியவில்லை என்று துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

சுரேஷ் வீட்டில் சோதனை நடத்தியபோது தங்க பிஸ்கெட், சொத்து ஆவணங்கள், தங்க நகைகள், ரொக்கப் பணம், வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டன என்று கூறப்பட்டது.

வருமான வரித்துறையில் அவர் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி அவருடைய ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம்தான். சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்ட வங்கியில் இருந்து சம்பளத் தொகையை சிறிது கூட எடுக்காமல் பல கோடி ரூபாய் சொத்து சேர்த்தது எப்படி என்று சி.பி.ஐ. அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

துறைமுக பொறுப்புக் குழுத் தலைவர் பதவியிலிருந்து மாற்றம் செய்யப்பட்ட கடந்த ஜூன் மாதமே சென்னை கொட்டிவாக்கத்தில் ரூ.5 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள வீட்டு மனையைத் தனது மனைவி கீதாவுடன் சேர்ந்து சுரேஷ் வாங்கியுள்ளார்.

இதற்கான முத்திரைத்தாள் கட்டணம் மட்டும் ரூ.12 லட்சம் ரொக்கமாக சுரேஷ் செலுத்தியது எனப் பல ஆதாரங்கள் இருந்ததால், ஓரிரு நாளில் சுரேஷ் கைது செய்யப்படுவார் என சி.பி.ஐ. தரப்பில் அப்போது கூறப்பட்டது.

ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சுரேஷ் தொடர்பான வழக்கு எந்த நிலையில் உள்ளது என்பது பெரும் குழப்பமாகவும், கேள்விக்குறியாகவும் மாறியுள்ளது.

அரசியல் தலையீடுகள் இதில் புகுந்து விட்டதாகவும், இதனால்தான் சுரேஷ் மீதோ இந்த வழக்கு மீதோ எந்தவித மேல் நடவடிக்கையும் இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

மத்தியப் பிரதேச பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுரேஷ், சென்னை துறைமுகத் தலைவராக முதலில் நியமிக்கப்பட்டார். ஆனால் இவருக்கு கப்பல் துறையில் இருந்த செல்வாக்கின் காரணமாக தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சேது சமுத்திர திட்டம் உள்ளிட்டவைகளுக்கும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றார்.

சுரேஷ் இப்படி பலமானவராக மாறியதற்கு அரசியல் செல்வாக்கே காரணம் என அப்போது கூறப்பட்டது. அதே அரசியல் செல்வாக்குதான் சி.பி.ஐ வழக்கு, கைது நடவடிக்கைகளில் இருந்தும் அவரை இப்போது காப்பாற்றி வருவதாகத் தெரிகிறது என்று துறைமுக வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சுரேஷ் வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், சுரேஷைக் கைது செய்துதான் விசாரணை நடத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால் அவர் மீதும் முறைகேடுகளில் தொடர்புடைய அதிகாரிகள், இதர
தரப்பினர் மீதும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மோசடி குற்றச்சாட்டில் தொடர்புடைய சுரேஷ் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் அறிவுறுத்தி உள்ளோம், எவ்வித குறுக்கீடுகளும் எங்களைப் பாதிக்காது என்கின்றனர்.

ராசா விவகாரம்: சென்னையில் சிபிஐ இயக்குனர்

இதற்கிடையே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் சிபிஐ ரெய்ட் நடத்தியுள்ள நிலையில் அதன் இயக்குனர் அஸ்வினி குமார் சென்னை வந்தார்.

தமிழகத்தின் மூத்த சிபிஐ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

சிபிஐ இயக்குனரான பின் அவர் தமிழகம் வருவது இதுவே முதல் முறையாகும். தனது மனைவியுடன் நேற்று காலை சென்னை வந்த அவரை, விமான நிலையத்தில் அவரை நிருபர்கள் முற்றுகையிட்டனர்.

மத்திய அமைச்சர் ராசா, தொலை தொடர்பு அலுவலகங்களில் நடந்து வரும் ரெய்டு ஆகியவை தொடர்பாக அவரிடம் நிருபர்கள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

ஆனால், நான் தனிப்பட்ட முறையில் தமிழகம் வந்துள்ளதால் நிருபர்களுக்கு பதிலளிக்க முடியாது என்று கூறிவிட்டுச் சென்றார்.

பின்னர் எழும்பூரில் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகம் அருகே உயர் போலீஸ் அதிகாரிகளின் விருந்தினர் விடுதியில் அவர் தங்கினார்.

தனிப்பட்ட முறையில் வந்துள்ளதாகக் கூறினாலும், அங்கு வைத்து தமிழக சிபிஐ உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இதில் சிபிஐ இணை இயக்குனர் அசோக் குமார், எஸ்பிக்கள் முருகன், ஈஸ்வரமூர்த்தி உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் சேத்துப்பட்டில் உள்ள முன்னாள் தலைமை விஜிலன்ஸ் அதிகாரி சங்கர் வீட்டுக்குச் சென்ற அவர் அங்கும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பகலில் தமிழக போலீஸ் டிஜிபி ஜெயின் வீட்டில் மதிய விருந்தில் கலந்து கொண்டார்.

இதையடுத்து திருப்பதியில் அதிகாலை தரிசனம் செய்ய கிளம்பிச் சென்றார். இன்று மீண்டும் சென்னை திரும்பும் அவர் மீண்டும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை சிபிஐ அலுவலகத்துக்கும் அவர் செல்வார். பூந்தமல்லி ஹைரோட்டில் சிபிஐக்கு கட்டப்படவுள்ள புதிய அலுவலகம் குறித்தும் அதிகாரிகளிடம் பேசுகிறார்.

மாலையில் மதுரை செல்லும் அவர் ராமேசுவரத்துக்கும் செல்கிறார். அங்கிருந்து 29ம் தேதி சென்னை திரும்பும் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பு திட்டம் ரத்தாகிவிட்டதாகத் தெரிகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேசுக்கு எதிராக மதுரையில் பொதுக் கூட்டத்தை திமுக அறிவித்த நிலையில் ராசாவின் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டைத் துவக்கியது.

இதையடுத்து அந்தப் போராட்டத்தை ''முல்லைப் பெரியாறு புதிய அணைக்கு தமிழ்நாடு எதிர்ப்பு: மதுரை மாநகரில் மாபெரும் பொதுக் கூட்டம்'' என்று மாற்றிவிட்டு திமுக பம்மியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் சிபிஐ இயக்குனரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X