For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

5 மணி நேரம்.. நடு காடு.. பழங்குடிகள் அட்டூழியம்-பீதியில் தவித்த ரயில் பயணிகள்!

Google Oneindia Tamil News

மித்னாபூர்: ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.

மேலும் கடத்திச் செல்லப்பட்ட என்ஜின் டிரைவர் அனந்தராவ், துணை டிரைவர் கே.ஜே. ராவ் ஆகியோரையும் விடுதலை செய்தனர்.

நக்ஸல்களுக்கு எதிராக மேற்கு வங்க அரசும் பிற மாநில அரசுகளும் எடுத்துவரும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும், காட்டுப் பகுதிகளிலிருந்து பாதுகாப்புப் படைகளை உடனே வாபஸ் பெற வேண்டும், சிறையிலும், போலீஸ் காவலிலும் இருக்கும் நக்ஸல்களையும் நக்ஸல் ஆதரவாளர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற 22 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முழு அடைப்புக்கு, "போலீஸ் அக்கிரமங்களுக்கு எதிரான மக்கள் குழு'' (பி.சி.பி.ஏ) என்ற அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

பழங்குடி அமைப்பான இது நக்ஸல்களை ஆதரிக்கும் அமைப்பாகும்.

இந்நிலையில் நேற்று பகல் 2 மணியளவில் மேற்கு வங்கத்தின் மித்னாபூர் மாவட்டத்தின் வனஸ்தலா என்ற இடத்தை நோக்கி 1,200 பயணிகளுடன் சென்ற டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை ஜார்கிராம் என்ற இடத்தில் தண்டவாளத்தில் மரங்களை வெட்டிப் போட்டும், சிவப்புக் கொடிகளைக் காட்டியும் பழங்குடியினர் 400 பேர் தடுத்து நிறுத்தினர்.

கைகளில் கோடாரி, ஈட்டிகள், வில், துபபாக்கிகளுடன் டிரைவர், துணை டிரைவரை கடத்திய அவர்கள் ரயில்களி்ன் கண்ணாடி ஜன்னல்களை உடைத்தனர்.

மேலும் தங்களது அமைப்பின் தலைவர் சத்ரதார் மகோதாவை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மகோதா நல்லவர் என்று பெயிண்டால் ரயில் பெட்டிகளில் எழுதினர்.

ரயிலை எரிக்கப் போவதாக அவர்கள் கூறியதால் பயணிகள் ரயிலை விட்டு வெளியேறினர். அது காட்டுப் பகுதி என்பதால் பூச்சிகள் தொல்லையால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பாம்புகளும் நெளிந்ததால் பல பயணிகள் அலறினர்.

இதையடுத்து பயணிகளை மீண்டும் ரயில்களில் ஏறி அமருமாறு பழங்குடியினர் கூறிவிட்டனர்.

தகவல் அறிந்த ரயில்வே உயர் அதிகாரிகள், சிஆர்பிஎப் படையினர் அங்கு விரைந்தனர். தாங்கள் வரும் பாதையில் நஸ்கல்கள் கண்ணி வெடிகளை வைத்திருக்கலாம் என சிஆர்பிஎப் கருதியதால் வாகனங்களைத் தவிர்த்துவிட்டு ரயில் மூலம் அருகே உள்ள இடத்துக்குச் சென்று அங்கிருந்து நடந்தே கடத்தப்பட்ட ரயிலை அடைந்தனர்.

இதையடுத்து அவர்களுக்கும் நக்ஸல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 நக்ஸல்கள் பலியாயினர்.

இரவு 7.30 மணியளவில் மேலும் கூடுதலாக சிஆர்பிஎப் படையினர் வருவதைப் பார்த்த பழங்குடியினரும் நக்ஸல்களும் அந்த இடத்தைவிட்டு தப்பியோடிவிட்டனர். மேலும் ரயில் டிரைவர்களையம் விடுவித்துவிட்டனர். இதையடுத்து அந்த ரயில் மீட்கப்பட்டது.

தண்டவாளங்களில் கண்ணி வெடிகள் ஏதும் உள்ளதா என்று சோதனையிடப்பட்ட பின்னர் இன்னொரு ரயில் தண்ணீர், உணவுடன் அங்கு அனுப்பப்பட்டது. அந்த ரயில் மூலம் இரவு 9 மணியளவில் பயணிகள் புவனேஸ்வர் கிளம்பினர்.

இதன்மூலம் 5 மணி நேர ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தது.

இந் நிலையல் ரயில் கடத்தலுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று நக்ஸலைட்டுகள் கூறியுள்ளனர்.

தனியார் தொலைக்காட்சிக்கு அதன் தலைவர் கிஷென்ஜி அனுப்பியுள்ள செய்தியில், நாங்கள் ரயிலையோ, டிரைவர்களையோ டிரைவர்களை கடத்தவில்லை. பந்த் அறிவிப்பும் நாங்கள் வெளியிடவில்லை. ஆனால், மக்கள் கமிட்டி நடத்தும் பந்த்துக்கு ஆதரவு அளிக்கிறோம்.

போராடும் மக்களுக்கு எங்களுடைய ஆதரவு உண்டு. அந்த மக்களின் அவல நிலைமையை மம்தா பானர்ஜி நேரில் வந்து பார்க்க வேண்டும். போலீஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி மீது நடைபெறும் துப்பாக்கி சூடு மற்றும் தேடுதல் வேட்டையை உடனே நிறுத்த வேண்டும். போலீசாரின் நடவடிக்கையால் அந்த மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

ரயில் கடத்தல் நடந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே.பிள்ளை ஆகியோர் உடனடி ஆலோசனையில் ஈடுபட்டு, மேற்கு வங்க முதல்வருடனும் பேசி, மத்தியப் படையினரையும் ரயில்வே அதிகாரிகளையும் போலீசாரையும் ஒருங்கிணைத்து மீட்புப் பணிகளை படுவேகத்தில் நடத்தினர்.

இந் நிலையில் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயில் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. மாவோயிஸ்டு தீவிரவாதத்தை தகுந்த முறையில் அடக்குவதற்கான திறமை மேற்கு வங்காள அரசிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

பின்னர் வங்க மொழி செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், யாராவது என்னுடன் பேச்சு நடத்த விரும்பினால், அதற்கான நேரத்தை நிர்ணயம் செய்து விட்டு எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேச வரலாம். நான் அவர்களுடன் பேசத் தயாராக இருக்கிறேன். ஆனால், ரயில்களுக்கோ பயணிகளுக்கோ எந்தத் தொல்லையும் தருவதை அனுமதிக்க முடியாது என்றார்.

இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசிய மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ், மவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் மக்கள் கமிட்டி தலைவர் மகோதாவை விடுதலை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.

இதற்கிடையே ரயில் நிறுத்தப்பட்ட இடத்தை சுற்றியுள்ள பழங்குடி கிராமங்களில் சிஆர்பிஎப் படையினர் நஸ்கல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அப் பகுதியில் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டவணணம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க அரசை டிஸ்மிஸ்' செய்ய கோரும் மம்தா:

இந் நிலையில் மேற்கு வங்க அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்யுமாறு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் மம்தா பானர்ஜி வற்புறுத்தினார்.

கடந்த ஜூலை மாதம் மேற்கு வங்கத்தில், மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்ட போலீஸ்காரர்களின் குடும்பத்தினரை தன்னுடன் அழைத்துக் கொண்டு சிதம்பரத்தை சந்தித்த அவர்,

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குலைந்து போய் விட்டது. அங்கு போலீஸ்காரர்களே கடத்தப்படும் நிலை உள்ளது. எனவே 356வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X