For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் ஊழல்: திமுக மீது இளங்கோவன் தாக்கு, ஜெவுக்கு நன்றி

Google Oneindia Tamil News

Illangovan
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக மதுரையில் திமுக கூட்டம் நடத்துவது போல, ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து எங்களால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா? என்று கேட்டுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 7ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய இளங்கோவன்,

தமிழ்நாட்டில், அறிக்கையைப் பாராட்டி அறிக்கை விடப்படும் நிலை உள்ளது (முதல்வரின் அறிக்கைகளை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பாராட்டுவது). இதைப் பார்க்கும்போது இங்கு காங்கிரஸ் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

காஷ்மீர், பஞ்சாப், வட கிழக்கு மாநிலங்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் முதல்வர்களாகவும், துணை முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளதைப் பற்றி கருத்து கூறினால், சென்னையில் உள்ளவர்களுக்கு 'சுர்' என்று கோபம் வந்து டெல்லியில் புகார் செய்கின்றனர்.

தவறை விமர்சிக்கும் அதே நேரத்தில் மேம்பாலம் கட்டுதல், சாலைகள் கட்டுதல் போன்ற நல்ல விஷயங்களை பாராட்டத்தான் வேண்டும். இத்தகைய பணிகளின்போது ஏராளமான வீடுகள், கட்டடங்கள் இடிக்கப்படுகின்றன.

அதே போல், கங்கையையும், காவிரியையும் இணைக்கும் லட்சக்கணக்கான கிலோமீட்டரை உள்ளடக்கிய பணிகளில் எவ்வளவு கிராமங்கள், காடுகள், கட்டடங்கள் போன்றவை பாதிக்கப்படும்?.

தவிர, நதிகள் இணைப்பு ஏற்படும்பட்சத்தில் அந்தத் தண்ணீர் கர்நாடகம் அல்லது ஆந்திரம் வழியாகத்தான் தமிழ்நாட்டுக்கு வர வேண்டும். அப்போது அந்த மாநிலங்கள், எங்களுக்கே தண்ணீர் இல்லை. நாங்கள் எப்படி உங்களுக்குத் தண்ணீர் விட முடியும் என்று தண்ணீரை அடைத்துவிட்டால் என்ன செய்வது?.

புவி வெப்பமடைவதால் இமயமலை உருகி கங்கையே காணாமல் போகும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும்போது கங்கை-காவிரி இணைப்பு எப்படி?.

இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்தார். இவ்வாறு கருத்து சொன்னதற்கு ராகுலை 'கத்துக்குட்டி' என்கிறார் வைகோ.

கல்லூரி மாணவர்களிடம் ராகுல் உரையாடினால் கேள்வி எழுப்புகின்றனர். பெரியார், காமராஜர், அண்ணா போன்றவர்கள் கல்லூரிகளில் பேசியவர்கள்தான். கொச்சையான கருத்துகளைக் கூறினால்தான் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று நினைத்து திராவிடக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 1967ல் கல்லூரிகளில் பேசினர்.

தமிழ்நாட்டில் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது? பத்திரிகைகளுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை. கருத்துகளை வெளியிட்டால் கைது செய்யப்படுகின்றனர். அடிமைகள் போல் வாழ்கிறோம்.

தங்களைக் கேட்காமல் பெட்ரோல் விலையை உயர்த்திவிட்டதாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைச்சர் கேட்கிறார். அவரிடம் "எங்களைக் கேட்காமல் துணை, இணை என்று அறிவித்தீர்களே'' என்று நம்மால் கேட்க முடியவில்லை.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது. 'சர்வே' நடத்துவதற்கு மட்டும்தான் மத்திய இணையமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கேரளாவுக்கு அனுமதி கொடுத்தார். அவரைக் கண்டித்து மதுரையில் வரும் 10ம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கண்டித்து காங்கிரஸால் கண்டனக் கூட்டம் நடத்த முடியாதா? எல்லோருக்கும் ஒரு நியாயம்தான். தமிழ்நாட்டில் தாளம் போடுவதற்கென்றே புலவர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் ஒரு கூட்டம் தாளம் போட, ஒரு கூட்டம் ரசித்துக் கொண்டிருந்தது.

இலங்கைக்கு காங்கிரஸ், திமுக எம்பிக்கள் சென்று வந்ததற்கு கள்ளத் தோணியில் பயணம் செய்தவர்கள் (வைகோ) குறை கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் 9 ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜரின் பெயரை ஒரு பஸ் நிலையத்திற்கு வைக்க முடியாத நிலை உள்ளது. ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை வைக்க வேண்டும், இல்லாவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்று கூறிய ஜெயலலிதாவுக்கு நன்றி என்றார் இளங்கோவன்.

கருத்து கூற தங்கபாலு மறுப்பு:

இளங்கோவனின் இந்த பேச்சு குறித்து கருத்து கூற தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மறுத்துவிட்டார். இது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X