For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுகவுக்கு வந்ததால் சம்பாதித்திருக்கிறீர்கள்-ஜெ

Google Oneindia Tamil News

சென்னை: சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் அதிமுகவில் சேர்ந்து பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்று அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். ஆனால், எப்படி பணக்காரர்கள் ஆனார்கள் என்று கூறவில்லை.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் சென்னை அருகே வானகரத்தில் நேற்று நடந்தது. அதில் ஜெயலலிதா பேசுகையில்,

என்னைப் பற்றித்தான் செய்திகள்...

மக்களவைத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் கதை முடிந்து விட்டது என பலர் கூறுகின்றனர். எனது செல்வாக்கு சரிந்து விட்டது என்கிறார்கள். அதிமுக அழிவுப்பாதையை நோக்கி செல்கிறது என்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கும் தமிழகத்தின் பத்திரிகைகளில் வரும் பிரதான செய்திகள் என்னைப் பற்றியதாகவும், அதிமுகவைப் பற்றியதாகவும்தான் இருக்கின்றன (இவர் வெளியிடும் அறிக்கைகளை சொல்கிறார் போல).

காய்க்கும் மரம்...

காரணம் காய்க்கும் மரம்தான் கல்லடி படும். இன்றைக்கும் தமிழகத்தின் தனிப்பெரும் கட்சி, மகத்தான மக்கள் இயக்கம் அதிமுகதான்.

நான் முதல்வராக இருந்த 10 ஆண்டுகளில் தொட்டில் குழந்தை திட்டம், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் திட்டம், கோவில், பள்ளிவாசல், தேவாலயம் ஆகியவற்றில் அன்னதான திட்டம் உள்பட பல மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறேன்.

ஜெயலலிதா என்ன செய்கிறார்..

கருணாநிதியால் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த நேரமில்லை. கருணாநிதிக்கும், அவரது காவல்துறைக்கும் ஒரே ஒரு பணிதான் உள்ளது. ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருக்கிறார், எங்கே இருக்கிறார், யார் யாரெல்லாம் அவரை சந்திக்கிறார்கள் இதுபோன்ற கேள்விகளை காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டிருப்பதால், அரசு நிர்வாகத்தை கவனிக்க நேரமில்லை.

ஒரு குடும்பத்தை கட்டிக் காத்து, நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்வது தாய்தான். அக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நல்லது எது என்பது தாய்க்குத்தான் தெரியும். பிள்ளைகளின் மீது அன்பு காட்டும் தாய், சில நேரங்களில் கண்டிக்கவும் தவறுவதில்லை. கண்டிப்பு காட்டுவது அந்த பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

நான் உங்கள் தாய்...

அதிமுக என்னும் மாபெரும் குடும்பத்தின் தாயாக நான் உள்ளேன். இக்குடும்பத்தில் உள்ள தொண்டர்களுக்கு எது நல்லதோ, அதைத்தான் நான் செய்வேன்.

இந்த அன்பான தாயின் அரவணைப்பு இருப்பதால்தான் ஒளிமயமான எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்லமுறையில் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் சமுதாயத்தில் என்றைக்கும் மதிக்கப்படுவார்கள்.

பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள்....

ஆனால், மறுகூடாரத்தில் உள்ள திமுகவினர் அப்படி அல்ல. அதிமுகவில் சேர்ந்து சாதாரண நிலையில் இருந்தவர்கள் எல்லாம் பெரும் நிலைக்கு வந்திருக்கிறார்கள். மிகவும் வறுமையில் வாடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் பெரும் பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் (எப்படி?).

ஆகவே, நான் ஒரு அதிமுக தொண்டன் என்று சொல்வதில் பெருமைப்பட வேண்டும்.

மறுபக்கத்தில் திமுகவின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. நேற்று வரை அமைச்சராக இருந்த ஒருவர் இன்று தலைமறைவாகி விட்டார். அவரை போலீஸ் தேடுகிறது. அமைச்சராக்குவதற்கு முன்பே அவரைப் பற்றி முதல்வர் கருணாநிதிக்கு தெரியாதா?.

கருணாநிதியின் கட்டுப்பாட்டில் கட்சியும் இல்லை; ஆட்சியும் இல்லை. அங்கே எல்லாமே குழப்பமாகத்தான் உள்ளது.

அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது (!!). இன்று நாட்டின் கடைகோடி மாநிலமாக உள்ளது.

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயார்...

நிர்வாகத் திறமையற்ற, தமிழ்நாட்டை அமளிக்காடாக மாற்றிய, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டனர்.

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துக் கூறி, அனைத்து வாக்குகளையும் சிந்தாமல், சிதறாமல் அதிமுகவுக்கு கொண்டு வந்து சேர்க்கக் கூடிய திறமை அதிமுக தொண்டர்களுக்கு உண்டு. அந்தக் கடமையை தொண்டர்கள் தவறாமல் செய்ய வேண்டும் என்றார் ஜெயலலிதா.

புரட்சித் தலைவி தலைமையில் அமையும் அரசு...

முன்னதாக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம்:

-லட்சக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் இலங்கை அரசால் முள்வேலி போட்ட முகாம்களில் தொடர்ந்து சித்ரவதை செய்யப்படுவது உலகம் மன்னிக்க முடியாத ஈனச் செயலாகும்.

புரட்சித் தலைவி தலைமையில் அமையவிருக்கும் அரசு (!!) இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் அனைத்து உரிமைகளையும் பெற்று, தன்மானத்துடன், சுதந்திரமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.

-நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

-இந்தியாவில் யாருமே நிகழ்த்தியிராத அளவுக்கு, இந்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான சிபிஐ விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஏதுவாக, உடனடியாக மத்திய தொலைதொடர்பு மந்திரி ராசாவை, பிரதமர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.

லாரிகளிலும், கப்பல்களிலும் மணல் கடத்தல்...

-மணல் கொள்ளை காரணமாக, தமிழகத்தின் நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாலாறு, காவிரி, தாமிரபரணி, வைகை மற்றும் இதர ஆற்றுப் படுகைகளிலிருந்து தினந்தோறும் 10,000க்கும் மேற்பட்ட லாரிகளிலும், கப்பல்களிலும் பகிரங்கமாக மணல் கடத்தப்படுவதன் காரணமாக அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது.

-விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப் பஞ்சம் என்னும் அபாயத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது.

சீனா.. மத்திய அரசுக்கு எச்சரிக்கை....

-இந்தியாவின் அண்டை நாடான சீனா, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நிலையை சமாளிக்க தேசப்பற்றும், துணிவும் உள்ள தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவை.

இந்தியாவின் நலன் பறிபோகாமல் இருக்கத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், இந்திய நிலப்பகுதிகளை கபளீகரம் செய்ய துடிக்கும் சீனாவிடம் இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மீண்டும் வாக்குச்சீட்டு முறை...

-நாடாளுமன்றத் தேர்தலையடுத்து பாஜக, தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி நடத்த முடியும் என்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இது குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடியோ மாற்றமோ செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துவிட்டால், மோசடி நடந்திருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்போ அல்லது நீதிமன்றத்தின் முன்போ நிரூபிக்க எந்தவித வழிவகையும் இல்லை. மோசடி நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதும் இயலாத காரியம்.

நம் நாட்டில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள், வாக்கு பதிவானதற்கு இணையான அச்சு வெளியீட்டை (ஹார்டு காப்பி) உருவாக்குவது இல்லை. வாக்களிக்கும் சமயத்தில், மின்னணு வாக்கு எந்திரத்தில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கக் கூடிய அளவுக்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்காத வரையில், மோசடி குறித்த புகார்களின் உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க முடியாது.

ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்காளரும், தான் அளித்த வாக்கு அந்த வேட்பாளருக்கு அல்லது அந்தக் கட்சிக்குத் தான் சென்றடைகின்றதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலை இல்லாத பட்சத்தில், ஜனநாயக முறைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கும்.

உண்மையான ஜனநாயகம் மீண்டும் மலர, மின்னணு வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேர்தலில் வெற்றி!!... ஜெயலலிதாவுக்கு பாராட்டு!!!:

-மக்களவைத் தேர்தலில்சிறப்பான வியூகம் அமைத்து, திமுகவினரின் அடாவடியையும் மீறி 12 இடங்களில் அதிமுக கூட்டணி வெல்வதற்குக் காரணமாக இருந்த புரட்சித் தலைவியை இந்தப் பொதுக் குழு பாராட்டுகிறது (!!).

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மட்டன் பிரியாணி-சிக்கன் 65:

கூட்டம் முடிந்ததும் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்கள் 3,000 பேருக்கு மட்டன் பிரியாணி விருந்து நடந்தது. பிரியாணியுடன் சிக்கன் 65 வழங்கப்பட்டது.

முன்னதாக கூட்டத்துக்கு சசிகலாவுடன் வந்த ஜெயலலிதாவுக்கு குதிரைகளிலும், யானைகளிலும் அணிவகுத்தபடி அதிமுக தொண்டர்கள் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து மகளிர் அணியினர், மற்றும் இளம்பெண்கள் பாசறையினர் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

முதலில் மண்டபத்தின் அருகில் உள்ள சிறிய அறையில் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் 190 பேர் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டார்கள். இந்த கூட்டம் சுமார் 2 நிமிடத்தில் முடிவடைந்தது.

மண்டபத்துக்கு வெளியே எம்பிக்கள்...

பின்னர் பெரிய மண்டபத்தில் பொதுக்குழு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. உள்ளே போதிய இடம் இல்லாததால் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மண்டபத்துக்கு வெளியே உட்கார்ந்திருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X