For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பாவுக்கு கெளடா; ரெட்டி சகோதரர்களுக்கு காங்கிரஸ்!

Google Oneindia Tamil News

பெங்களூர்: அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களை கட்சியை விட்டு நீக்கினால், எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசுக்கு ஆதரவு தர மாஜி பிரதமர் தேவ கெளடாவி்ன் மதசார்பற்ற ஜனதா தளம் முன் வந்துள்ளதால் கர்நாடக பாஜக சிக்கலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்பு பாஜகவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைத்து கெளடாவின் மகனான குமாரசாமி முதல்வரானார். ஆனால், அப்போது பாஜகவுடனான தனது கட்சியின் கூட்டணியை எதி்ர்ப்பது போல கெளடா நாடகம் போட்டார்.

குமாரசாமியிடமிருந்து விலகி இருப்பது போல சில காலம் நடித்துவிட்டு பின்னர் அனைவரும் ஒன்றாயினர்.

குமாரசாமி முதல்வராக இருந்தபோது பாஜக, குறிப்பாக ரெட்டி சகோதரர்கள் அவருக்கு பெரும் குடைச்சல் தந்து வந்தனர். இதையடுத்து பெல்லாரியில் உள்ள அவர்களது சுரங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமாரசாமி முயன்றார். இதனால் மோதல் மேலும் தீவிரமானது.

குமாரசாமி மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு வரை கூறினர் ரெட்டி சகோதரர்கள். அடு்த்து எதியூரப்பாவுக்கு முதல்வர் பதவியை குமாரசாமி விட்டுத் தர முடியாது என அடம் பிடித்தபோது பாஜக-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உடைந்து, சட்டசபை கலைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் குமாரசாமியால் ஏமாற்றப்பட்ட எதியூரப்பா, அனுதாப ஓட்டிலேயே வென்று முதல்வரானார். இந்த தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு ரெட்டிகளும் பெருமளவில் உதவியாக இருந்தனர். இதனால் அவர்கள் கேட்ட துறைகளைத் தந்தார் எதியூரப்பா.

இப்போது காலச்சக்கரம் முழுமையாக ஒரு ரவுண்டை முடித்துவிட்டது. எதியூரப்பா பக்கம் இருந்த ரெட்டிகள் இப்போது போர்கொடி தூக்கியுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ரெட்டி சகோதரர்களை அரசியல்ரீதியாக ஒடுக்க எதியூரப்பாவுக்கு உதவ முன் வந்துள்ளார் குமாரசாமியும் அவரது தந்தை தேவ கெளடாவும்.

ரெட்டிகளை கட்சியை விட்டு நீக்கினால் 30க்கும் குறைவான எம்எல்ஏக்கள் தான் வெளியில் செல்வார்கள் என்று கூறப்படும் நிலையில் 27 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் அதை ஈடு செய்யத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே குமாரசாமி-கெளடாவிடம் சூடு கண்ட எதியூரப்பா இந்த விஷயத்தில் அவசரப்படத் தயாராக இல்லை என்கிறார்கள்.

மத்தியத் தலைமை பிரச்சனையை தீர்த்து வைத்து தன்னை முதல்வராக தொடர வைக்கும் என்று நம்பும் எதியாரப்பா, அப்படியில்லாமல், தனது பதவி்க்கே ஆபத்து வந்தால், குமாரசாமியுடன் கைகோர்க்க தயங்க மாட்டார் என்கிறார்கள்.

இந் நிலையில் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டுள்ள ரெட்டி சகோதரர்களை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், ரெட்டிகளுக்கு மிக நெருக்கமான மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தனித்தனியாக அழைத்து பேசி வருகின்றனர். சுஷ்மா சுவராஜை மட்டும் 3 முறை அவர்களுடன் பேச்சு நடத்திவிட்டார்.

அப்போது எதியூரப்பாவை மாற்ற முடியாது என தலைமை கூற, அவரை மாற்றியே ஆக வேண்டும் என ரெட்டி சகோதரர்கள் கூறிவிட்டனர். இதனால் சமரசம் ஏற்படவில்லை.

தங்களது சொல்லை தலைமை தட்டிக் கழித்தால் பாஜகவை உடைத்து தனிக் கட்சி தொடங்கக் கூட அவர்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் எதியூரப்பா இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ரெட்டிகளுக்கு ஆதரவு தெரிவி்த்துள்ள சுமார் 60 எம்எல்ஏக்கள் கோவா, ஹைதராபாத், புனே, டெல்லி ஆகிய இடங்களில் 5 நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்களில சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டு நன்றாக கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை தேவைப்பட்டால் எந்த நேரத்திலும் டெல்லிக்கு அழைத்து சென்று தலைமை முன் அணிவகுப்பு நடத்த வைக்கவும் ரெட்டி சகோதரர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த அணிவகுப்புக்குப் பிறகும் மேலிடம் பணிந்து எதியூரப்பாவை மாற்றாவிட்டால் பாஜகவை உடைத்து தனி கட்சி ஆரம்பிப்பது, காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என்ற திட்டத்துடன் உள்ளனராம் ரெட்டி சகோதரர்கள்.

சிக்கல் தீராவிட்டால் எதியூரப்பா-குமாரசாமி, ரெட்டி சகோதரர்கள்-காங்கிரஸ் என இரு புதிய கோஷ்டிகள் உருவாகி ஆட்சியைப் பிடிக்க மோதல் நடத்தலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X