For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடுக்கி அணைக்காக முல்லை பெரியாறு அணையை தகர்க்க கேரளம் சதி: வைகோ

Google Oneindia Tamil News

Vaiko
சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது என்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியைப் பரப்பி அந்த அணையையே உடைக்க கேரளம் சதி செய்வதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தென் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை ஆதாரங்களுள் ஒன்றான முல்லைப் பெரியாறு உரிமைக்கு, பெரும் ஆபத்து நேர்ந்துள்ளது. கேரள அரசின் திட்டமிட்ட, தீங்கான செயல்களாலும் மத்திய அரசின் ஓர வஞ்சகமான துரோகத்தாலும், இந்த அபாயம் நம்மை வளைத்துள்ளது.

2006ம் ஆண்டு மே மாதம் திமுக அரசு பொறுப்பேற்றது. மத்தியில் அமைந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியிலும், திமுக பங்கு பெற்றது. அந்த மத்திய அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவும் தேவைப்பட்டதால், கேரளத்தில் ஆட்சிப் பொறுப்புக்குத் தலைமை ஏற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் அச்சுதானந்தன், தாம் பொறுப்பேற்றவுடன், முதல் வேலையாக, முல்லைப் பெரியாறு பிரச்சனையில், அப்பட்டமான பொய்களை, மோசடியான ஆவணங்களாக ஆக்கி, பிரதமர் மன்மோகன் சிங்கைத் தொடர்ந்து நான்கு முறை சந்தித்து, முல்லைப் பெரியாறு அணை உடையும் என்றும், லட்சக்கணக்கான கேரள மக்கள் உயிருக்கு ஆபத்து நேரும் என்றும், கேரளத்துக்குச் சாதகமான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்ளும் சூழலை ஏற்படுத்தினார்.

பிரதமர், உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளாமல், கேரள முதல்வரின் பொய்ப் புகார்கள் அடங்கிய கோரிக்கையை, மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும், சட்டத்துறை அமைச்சகமும் பரிசீலிப்பதற்கு அனுப்பி வைத்தார். இந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமையை, தமிழக முதல்வர் செய்யவே இல்லை.

தேங்கும் தண்ணீரும் தமிழகத்துக்கு கிடைக்கும் நீரும்:

கேரள முதல்வர் நான்கு முறை பிரதமரைச் சந்தித்த காலக்கட்டங்களில், தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கவும் இல்லை. ஒப்புக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை. முல்லைப் பெரியாரில் பயன்படுத்த முடியாமல் தேங்கி நிற்கும் தண்ணீர் 5 டி.எம்.சி. ஆகும். அதாவது 104 அடி உயரத்துக்குத் தேங்கி நிற்கும் தண்ணீரைப் பயன்படுத்த முடியாது.

152 உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், 15.5 டிஎம்சி தண்ணீர் தேங்கும். அதில் 10.56 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழகத்துக்குக் கிடைக்கும்.

145 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால், 13.5 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில், 8.5 டி.எம்.சி. தண்ணீர்தான் தமிழ் நாட்டுக்குக் கிடைக்கும்.

142 அடி உயரத்துக்குத் தண்ணீரைத் தேக்கினால் 12.7 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில்7.7 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்.

தற்போது உள்ள நிலவரப்படி, 136 அடி உயரத்துக்கு தண்ணீரைத் தேக்கினால், 11.2 டி.எம்.சி. தண்ணீர் தேங்கும். இதில், தமிழகத்துக்கு வெறும் 6.2 டி.எம்.சி. தண்ணீர்தான் கிடைக்கும்.

இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பதற்காக...:

இப்பொழுது பிரச்சனை ஏன் வந்தது தெரியுமா?. இடுக்கி அணைக்குத் தண்ணீர் வேண்டும். முல்லைப் பெரியாறில், 152 அடிக்குத் தண்ணீரைத் தேக்கினால், இடுக்கி அணைக்குத் தண்ணீர் கிடைக்காது, எனவேதான், இடுக்கி அணைக்குத் தண்ணீரைக் கொண்டு போவததற்காகவே, பெரியாறு அணைக்கு ஆபத்து என்ற பொய்ச் செய்தியை ஒரு மலையாள நாளிதழ் வெளியிட்டது.

1979ம் ஆண்டு நவம்பரில், தமிழகத்துக்குப் பாதகமான முடிவு எடுக்கப்பட்டதால், தமிழ்நாட்டில் 38,000 ஏக்கர் நிலம் முழுக்கப் பாசனத்தை இழந்து தரிசாயின.

இரு போக சாகுபடி செய்த 86,000 ஏக்கர் பரப்பு நிலங்கள், ஒரு போக சாகுபடிக்கு மாறின.

கேரளத்தில் வஞ்சக திட்டம்-அணையை உடைப்பது:

புதிய அணை கட்டினால் என்ன? என்று சிலர் நினைக்கலாம். தற்போது உள்ள முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பத்து கிலோ மீட்டருக்கு அப்பால், கேரளம் எத்தனை புதிய அணைகளைக் கட்டிக்கொண்டாலும், நமக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை. ஆனால், தற்போது கேரளம், ஒரு வஞ்சகத் திட்டத்தோடு புதிய அணை கட்ட வேண்டும் என்கிறது. அதுதான் முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் திட்டம்.

கேரளம் திட்டமிடும் இடத்தில் புதிய அணை கட்ட வேண்டுமானால், தேக்கடி புலிகள் காப்பகம் உள்ள அடர்ந்த வனப் பகுதியில், பத்து கிலோ மீட்டருக்கு ரோடு போட வேண்டும். 12 முதல் 15 மீட்டர் அகலத்தில், மூன்று பாலங்கள் கட்ட வேண்டும். இதற்காக 1 லட்சத்து 20 ஆயிரம் டன் பாறைகள் உடைக்கப்பட வேண்டும். சுமார், 1020 கிலோ கரிமருந்து பயன்படுத்தப்பட வேண்டும். கரி மருந்து வைத்து வெடிக்கும் போது எழுகிற புகை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும்.

வன விலங்குகள், குறிப்பாக புலிகள், யானைகள், காட்டு மாடுகள், மான்கள, சிங்க வால் குரங்குகள், வரையாடுகள் மற்றும் பறவைகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். இந்தப்பகுதிகளில் வாழும் ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

வெடி வைத்தால். அணை தானாகவே உடையும்..:

தற்போது கேரளம் கட்ட உத்தேசிக்கும் புதிய அணை நமது முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கட்டத் திட்டமிடுகின்றனர். அதற்காக பாறைகளை உடைக்கும் போது, முல்லைப் பெரியாறு அணை தானாகவே உடையும் ஆபத்து ஏற்படும்.

2006ம் ஆண்டு இறுதியில், புதிய அணை கட்ட ஆய்வு செய்ய, கேரளம் அனுமதி கேட்டு, மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச் சூழல் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தது. அப்போது மத்திய வனம் மற்றும் சுற்றுப்புறச் சூழல் அமைச்சராக, திமுகவைச் சேர்ந்த ராசாதான் பொறுப்பில் இருந்தார்.

அப்போதே அவர், இந்த ஆய்வுக்கான அனுமதியை மறுத்திருக்க வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கும் இந்தப் பிரச்சனை குறித்து, தமிழக முதல்வரிடம் அவர் தெரிவிக்கவில்லையா?. அப்படித் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அது பச்சைத் துரோகம்.

2007ம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னர் அதே சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சராக, திமுகவின் டி.ஆர்.பாலு பொறுப்பு ஏற்றார். அவரும், கேரளத்துக்கு அனுமதி மறுக்கும் கடமையைச் செய்யவில்லை. அன்றே, கேரளத்தின் விண்ணப்பத்தைத் தள்ளுபடி செய்திருந்தால், இன்று ஜெய்ராம் ரமேஷ், கேரளம் ஆய்வு செய்ய அனுமதி கொடுக்கும் நிலை ஏற்பட்டு இருக்குமா?.

முல்லைப் பெரியாறு அணை உடைக்கப்பட்டால், இந்த அணையை நமக்கு உடமையானதாக்கும் கேரளத்துடனான 999 ஆண்டு கால ஒப்பந்தம் என்பது பொருள் அற்றதாகிவிடும். தற்போது, இந்த அணைக்காக2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய், கேரளத்துக்குக் குத்தகைப் பணமாகத் தருகிறோம்.

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், புதிய அணையில் தண்ணீர் பெறுவதற்கு, வருடத்துக்கு 200 கோடி ரூபாய் வரை கேரளம் கேட்கும். நமது தேவைக்கு வேண்டிய அளவு தண்ணீரையும் அவர்கள் தரப் போவதில்லை.

தமிழக விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறும். ஐந்து மாவட்ட மக்களுக்குக் குடி தண்ணீரும் கிடைக்காமல் போகும்.

முல்லைப் பெரியாறு உரிமை காக்கவும், கேடு செய்யும் கேரளத்துக்கும் துணை போகும் மத்திய அரசுக்கும், கடமை தவறிய தமிழக அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவும், நவம்பர் 8ம் நாள் தேனியில், மதிமுக சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும்.

நவம்பர் 14ல் மதுரை மாநகரில் மேலமாசி வீதி, வடக்குமாசி வீதி சந்திப்பில், என்னுடைய தலைமையில், மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X