For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எதியூரப்பாவை சந்திக்க மறுத்து விட்ட ரெட்டி சகோதரர்கள்

Google Oneindia Tamil News

Yeddyurappa
டெல்லி: முதல்வர் எதியூரப்பாவை சந்திக்க ரெட்டி சகோதரர்கள் மறுத்து விட்டனர். இதனால் பாஜகவின் கடைசிக் கட்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது.

கர்நாடக முதல்வர் எதியூரப்பாவுக்கு போர்க்கொடி உயர்த்தியுள்ள ரெட்டி சகோதரர்களை அமைதிப்படுத்த பாஜக மேலிடம் புதிய சமாதான பார்முலாவை உருவாக்கியுள்ளது.

இதையடுத்து ரெட்டி சகோதரர்கள் - எதியூரப்பா இடையிலான சந்திப்புக்கு டெல்லியில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால் எதியூரப்பாவை சந்திக்கப் போவதில்லை என்று சகோதரர்களில் ஒருவரான கருணாகர ரெட்டி கூறியுள்ளார்.

இன்று காலை டெல்லியில் வெங்கையா நாயுடுவை சந்தித்த அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் முதல்வரை சந்திக்கப் போவதில்லை என்றார். இதனால் பாஜகவின் முயற்சிக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு சகோதரரான ஜனார்த்தன ரெட்டி கூறுகையில், நான் மூன்று நாட்களாக இங்குதான் இருக்கிறேன். மூத்த கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி வருகிறேன். விரைவில் கர்நாடக நலன் மற்றும் பாஜகவின் நலனைக் கருத்தில் கொண்டு கட்சி மேலிடம் சரியான நடவடிக்கையை எடுக்கும் என நம்புகிறேன் என்றார். கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கை தான் சந்திக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

கெளடாவுக்கு ரெட்டிகள் வெள்ளைக் கொடி:

இதற்கிடையே முன்பு தங்களுடன் மோதிய கெளடா-குமாரசாமி தரப்புக்கு ரெட்டிகள் வெள்ளைக் கொடி காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ரெட்டிகளை ஒடுக்க எதியூரப்பாவுக்கு தங்களது மதசார்பற்ற ஜனதா தளத்தின் 27 எம்எல்ஏக்களும் ஆதரவு தரத் தயாராக இருப்பதாக கெளடாவும் குமாரசாமியும் அவருக்கு தூது அனுப்பியிருந்தனர்.

காங்கிரஸ் ஆதரவு இல்லை:

இதையடுத்து தங்களுக்கு காங்கிரஸ் ஆதரவைப் பெற ரெட்டிகள் முயன்றனர். ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி மூலமாக இந்த முயற்சிகளை அவர்கள் மேற்கொண்டனர்.

ஜெகன் மோகன் பலம் பெறுவார் என அச்சம்:

ஆனால், இதே டெக்னிக்கை ஜெகன் மோகனும் பின்பற்றி ஆந்திராவில் முதல்வர் ரோசையாவுக்கு எதிராக காய் நகர்த்தினால் தங்களுக்கு சிக்கலாகிவிடும் என்று கருதும் காங்கிரஸ் ரெட்டி சகோதரர்களை ஆதரிக்கத் தயாராக இல்லை என்று அறிவித்துவிட்டது.

இதையடுத்து கெளடா-குமாரசாமியின் ஆதரவைப் பெற அவர்கள் திரும்பியுள்ளனர் ரெட்டி சகோதரர்கள். கெளடாவின் இளைய மகன் ரேவண்ணாவுக்கு துணை முதல்வர் பதவி தருவதாகச் சொல்லி அவரிடம் ரெட்டிகளின் வலதுகரமான ஸ்ரீராமுலு பேச்சு நடத்தி வருகிறார்.

பதவிக்காக கெளடா- குமாரசாமி- ரேவண்ணா குரூப் எதையும் செய்யத் தயங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசை காக்குமா வெங்கையா 'பார்முலா'?:

இந் நிலையில் எதியூரப்பா- ரெட்டிகள் இடையே சி்க்கலைத் தீர்க்க அந்தக் கட்சியின் தலைமை புதிய தீர்வை முன் வைத்துள்ளது.

இதன்படி போர்க் கொடி தூக்கியுள்ள அமைச்சர்களான ரெட்டி சகோதரர்களுக்கு சாதகமாக முதல்வர் எதியூரப்பா தனது செயல்பாட்டை மாற்றிக் கொள்வது, இதற்காக அவருக்கு மேலும் 6 அவகாசம் தருவது,

கூண்டோடு ராஜினாமா..

அமைச்சர்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வது, எதியூரப்பா-ரெட்டி சகோதரர்களுக்கு ஆட்சேபனை அல்லாதவர்கள் மட்டும் மட்டும் மீண்டும் அமைச்சராக்கப்படுவது,

ரெட்டி சகோதரர்களும் அமைச்சரவையில் இடம் பெறாமல் தவிர்ப்பது, அதே நேரத்தில் அவர்களுக்கு மிக நெருக்கமான ஸ்ரீராமுலு மட்டும் மீண்டும் அமைச்சராவது, அவருக்கு உள்துறையை வழங்குவது,

ரெட்டிகளுக்கு முக்கியத்துவம்..

ரெட்டிகளுக்கு பிடிக்காத ஷோபா, ஆச்சாரியா ஆகியோரை அமைச்சரவையை விட்டு நீக்குவது, ரெட்டி சகோதரர்கள் சொல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை முக்கிய துறைகளின் தலைவர்களாக நியமிப்பது,

போக்குவரத்து, மின்துறை உள்பட மாநிலத்தின் அனைத்து கழகங்களுக்கும் இரு தரப்பினரும் பேசி தலைவர்களை நியமிப்பது,

முக்கிய நிர்வாக, அரசியல் முடிவுகளை எடுக்க ரெட்டிகள்-எதியூரப்பா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவை அமைப்பது, இந்த குழுவே அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுப்பது,

6 மாதம் அவகாசம்...

இதே நிலை 6 மாதத்துக்கு நீடிப்பது, இந்தக் காலகட்டத்தில் ரெட்டி சகோதரக்களுக்கு சாதகமாக எதியூரப்பா நடந்து கொள்வது, அதன் பின்னர் எதியூரப்பாவி்ன் செயல்பாட்டில் ரெட்டி சகோதரர்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் அவர்கள் மீண்டும் அமைச்சரவையில் இணைந்து கொள்வது என்ற பார்முலாவை எதியூரப்பா-ரெட்டி ஆகிய இருவரிடமும் பாஜக தலைமை முன் வைத்துள்ளது.

ரெட்டிகள், எதியூரப்பா, மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடா, முக்கிய எம்பிக்களான அனந்த்குமார், தனஞ்செய குமார், சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் மற்றும் எதியூரப்பா ஆதரவு, ரெட்டி ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜக தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் பல சுற்றுப் பேச்சு நடத்திய பின் இந்த பார்முலா உருவாக்கப்பட்டுள்ளது.

'பார்முலா' மன்னன் வெங்கையா:

அனைத்து தரப்பின் கருத்தையும் கேட்டு இந்த சமாதான பார்முலாவை உருவாக்கியவர் வெங்கையா நாயுடுவாம்.

இதை ரெட்டி சகோதரர்களும் எதியூரப்பாவும் ஏற்றுக் கொண்டால் விரைவிலேயே கர்நாடக பாஜகவில் ஏற்பட்டுள்ள சிக்கல் தீரும் என்கிறார்கள்.

இதை இரு தரப்பும் ஏற்காவிட்டால் இதில் சில திருத்தங்களும் செய்து கொள்ளலாம் என இரு தரப்பிடமும் பாஜக டெல்லி தலைவர்கள் கூறியுள்ளனர்.

சென்னையில் கர்நாடக போலீஸ்?:

இந் நிலையில் ரெட்டி சகோதரர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 60 எம்எல்ஏக்களும் புனே, கோவா, ஹைதராபாத், டெல்லி என நான்கு இடங்களிலும் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்கள், ரிசார்ட்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து தங்க வைக்க ரெட்டி சகோதர்கள் திடடமிட்டுள்ளதாக செய்திகள் வந்ததையடுத்து அவர்களைக் கண்காணிக்க கர்நாடக உளவுப் பிரிவினர் சென்னையில் குவிந்துள்ளனர்.

இவர்களது திடீர் வருகையை வைத்துத் தான் எதியூரப்பா சென்னைக்கு வரப் போவதாக நேற்று முன் தினம் தகவல்கள் வந்தன. ஆனால், கர்நாடக உளவுப் பிரிவினர் சென்னை வந்துள்ளது தங்களுக்கு ஏதும் தெரியாது என்கிறது தமிழக உளவுப் பிரிவு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X