For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்மூடித்தனமான கள்ளக்காதல் - பெண் சிறைக்காவலர் கொடூரக் கொலை

Google Oneindia Tamil News

Gayathry Mala
சேலம்: சேலத்தில் கண்மூடித்தனமாக பல்வேறு ஆண்களுடன் தொடர்பு கொண்டிருந்த பெண் சிறைக் காவலர் கொல்லப்பட்டார். தனது கள்ளக்காதலருடன் உறவு வைத்துக் கொண்ட பின்னர், அவரது கள்ளக்காதலரே பெண் காவலரைக் கொன்றுள்ளார்.

சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள பெண்கள் கிளை சிறையில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்தவர், எஸ்.காயத்ரி மாலா (33). கோவையை சேர்ந்தவர்.

திருமணம் - விவாகரத்து - மறுமணம்

காயத்ரி மாலாவும், மதுரை மத்திய சிறையில் சப்-ஜெயிலராக பணியாற்றி வரும் தமிழ்ச் செல்வன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தமிழ்ச்செல்வன், காயத்ரி மாலா இருவருமே ஏற்கனவே திருமணமாகி, விவாகரத்து பெற்றவர்கள்.

கடந்த 2002-ம் ஆண்டு இரண்டாம் நிலை காவலராக வேலைக்கு சேர்ந்த காயத்ரி மாலா, பதவி உயர்வு பெற்று, 8 மாதங்களுக்கு முன்பு கோவையில் இருந்து சேலத்திற்கு வந்தார். சேலத்தில் அய்யந்திரு மாளிகை ஹவுசிங் போர்டு குடியிருப்பில் காயத்ரி மாலா வசித்து வந்தார்.

கோவை வரதராஜபுரம் ஆர்.வி.எல். நகரில் காயத்ரி மாலாவுக்கு சொந்த வீடு உள்ளது. காயத்ரி மாலாவுக்கும், அவரது 2-வது கணவர் தமிழ்ச்செல்வனுக்கும் பிறந்த 4 வயது மகள் லட்சுமி பிரபா கோவையில் பெற்றோர் வீட்டில் இருப்பதால் வாரம் ஒரு முறை காயத்ரி மாலா கோவைக்கு சென்று தனது மகளை பார்த்து வருவது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சேலம் புதிய பஸ் நிலையத்துக்கு வந்த காயத்ரி மாலா, அங்கிருந்து கோவைக்கு பஸ்சில் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் கோவைக்கு செல்லவில்லை. திடீரென்று மாயமான அவருடைய செல்போன் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து, சேலம் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், சங்ககிரி அருகே உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரையில் ரயில் பாதைக்கு சற்று தொலைவில் உள்ள ஒரு முட்புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது.

நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், அங்கு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் பிணம் தலைகுப்புற கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பெண் அணிந்து இருந்த சுடிதார் விலக்கப்பட்டு, சுடிதாரின் டாப்சும் கழற்றப்பட்ட நிலையில் அந்த பெண் அரை நிர்வாண கோலத்தில் கிடந்தார். மேலும் அந்த பெண்ணின் தலையில் சுமார் 25 கிலோ எடை கொண்ட பெரிய பாறாங்கல்லும் வைக்கப்பட்டு கிடந்தது. இது குறித்து சங்ககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சங்ககிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் முகத்தில் பெரிய கல் வைக்கப்பட்டு, முகம் சிதைக்கப்பட்டு இருந்ததால் பிணமாக கிடந்தவர் யார் என்று அடையாளம் உடனடியாக தெரியவில்லை. இதனால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் முடிவில் இறந்து கிடந்தது மாயமான காயத்ரி மாலாவாக இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து காயத்ரி மாலாவின் பெற்றோருக்கும், கணவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து காயத்ரி மாலாவின் தந்தை, தம்பி, தம்பி மனைவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணத்தை பார்த்து இறந்து கிடப்பது காயத்ரி மாலாதான் என்று அடையாளம் காட்டினார்கள்.

காயத்ரி மாலாவின் கணவர் தமிழ்செல்வனும் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி மாலாவை அடையாளம் காட்டினார். பின்னர் காயத்ரி மாலாவின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பல ஆண்களுடன் தொடர்பு...

போலீஸார் நடத்திய விசாரணையில் காயத்ரி மாலாவின் மறுபக்கம் குறித்துத் தெரிய வந்தது.

கோவையை சேர்ந்த சரவணன் என்ற சரவணகுமார் (32) என்ற ஆயுள் தண்டனை கைதி, காயத்ரி மாலாவை கொலை செய்ததும், அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்த திடுக்கிடும் தகவலும் அம்பலம் ஆனது.

காயத்ரி மாலா, கடந்த 2002-ம் ஆண்டில் கோவை மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வந்தார். அப்போது திருச்செங்கோடு ரிக் உரிமையாளர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணகுமார் கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது காவலர் காயத்ரி மாலாவுக்கும், சரவணகுமாருக்கும் அறிமுகம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அதன்பிறகு தனது முதல் கணவரை காயத்ரி மாலா விவாகரத்து செய்தார்.

இதற்கிடையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக வேலூர் சிறைக்கு சென்ற காயத்ரி மாலாவுக்கும், அங்கு பயிற்சியாளராக வந்த மதுரை சப்-ஜெயிலர் தமிழ்ச்செல்வனுக்கும் காதல் ஏற்பட்டு, காயத்ரிமாலா கர்ப்பம் ஆனார்.

பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், ஆயுள் தண்டனை கைதி சரவணகுமாருடன் இருந்த கள்ளக்காதலையும் காயத்ரிமாலா கைவிடவில்லை. கடந்த 7 ஆண்டுகளாக அவர்களுடைய தொடர்பு நீடித்து வந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கோவை சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த சரவணகுமார், மீண்டும் சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகிவிட்டார். சேலம் மாவட்டம், ஓமலூரில் அவர் தங்கி இருந்தார். காயத்ரிமாலாவும் சேலம் சிறையில் பணிபுரிந்து வந்ததால், இருவரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

கடந்த சனிக்கிழமை அன்று கோவை சென்று பெற்றோரையும் மகளையும் பார்த்துவர காயத்ரிமாலா விரும்பினார். அப்போது சரவணகுமார் தனது செல்போனில் தொடர்பு கொண்டு தான் சங்ககிரியில் இருப்பதாகவும் எனவே சங்ககிரியில் இறங்கி தன்னை சந்திக்கும்படியும் காயத்ரிமாலாவிடம் தெரிவித்தார்.

ஏரிக்கரையில் உல்லாசம்...

அதன்படி, கோவை செல்லும் வழியில் காயத்ரி மாலா சங்ககிரியில் இறங்கி சரவணகுமாரை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கரைக்குச் சென்று இருவரும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த சமயத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணக்குமார், பாறாங்கல்லை தூக்கிப் போட்டு காயத்ரி மாலாவைக் கொலை செய்துள்ளார்.

சரவணகுமார் எடுத்துச்சென்ற காயத்ரிமாலாவின் செல்போன், தாலி செயின், கைக்கெடிகாரம் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த செல்போன் மூலம் இந்த வழக்கில் போலீசார் துப்பு துலக்கி கொலையாளியை பிடித்து உள்ளனர்.

கொலையாளி சரவணக்குமார் போலீஸில் கொடுத்த வாக்குமூலம்...

எனது பெயர் சரவணன் என்கிற சரவணகுமார் (32). ஓமலூரை அடுத்த செங்கரடில் வசித்து வருகிறேன். எனக்கு திருமணம் ஆகி வெள்ளையம்மாள் என்ற மனைவி இருக்கிறார். எனக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது எனது மனைவி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

கடந்த 1997-ம் ஆண்டு திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலைய எல்லையில் ரிக் வாகன உரிமையாளர் செங்கோட கவுண்டர் என்பவரை கொலை செய்த வழக்கில் எனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு நான் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டேன்.

அங்கு எனது நன்னடத்தை காரணமாக எனக்கு சாப்பாடு வண்டியை தள்ளி செல்லும் வேலை தரப்பட்டது. நான் கோவை பெண்கள் சிறைக்கு சாப்பாடு வண்டியை தினமும் தள்ளி செல்வேன். அப்போது எனக்கும் பெண்கள் சிறையில் பணிபுரிந்து வந்த காயத்ரி மாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியது. கோவை மத்திய சிறையில் இருந்த நான் அவ்வப்போது நான் பரோலில் வீட்டுக்கு சென்று வந்தேன். ஆரம்பத்தில் போலீஸ் பாதுகாப்புடன் நான் சென்று வந்தேன். பின்னர் எனது நன்னடத்தை காரணமாக நான் தனியாகவே பரோலில் சென்று வீட்டில் உள்ளவர்களை பார்த்து விட்டு மீண்டும் சிறைக்கு வர அனுமதித்தார்கள்.

இந்த கால கட்டத்தில் நான் காயத்ரி மாலாவுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 15.2.2009 அன்று பரோலில் வீட்டுக்கு வந்த நான் மீண்டும் கோவை சிறைக்கு செல்லவில்லை. இதனால் 24-ந் தேதி என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதன் பிறகும் நான் காயத்ரி மாலாவுடன் உல்லாச வாழக்கையை தொடர்ந்து வந்தேன். இந்த நிலையில் கடந்த 31-ந் தேதி அவர் என்னிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். தான் கோவைக்கு செல்வதாக தனது கணவரிடம் கூறி விட்டதாகவும், நீ சங்ககிரிக்கு வா என்று கூறினார். அதன்படி நானும் சங்ககிரி பஸ் நிலையத்திற்கு முன்னதாகவே சென்று காயத்ரிமாலா வருகைக்காக காத்திருந்தேன்.

பஸ்சில் அவர் வந்த நேரத்தில் நான் அவரிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினேன். அதே போல அவரும் என்னிடம் 3 முறை தொடர்பு கொண்டு பேசினார். சங்ககிரி பஸ் நிலையத்தில் காயத்ரிமாலா வந்து இறங்கியதும் 2 பேரும் சங்ககிரியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் ரயில்வே பாதை அருகில் உள்ள ஆவாரம்பாளையம் ஏரிக்கு சென்றோம்.

வாரம் ஒருமுறை உல்லாசத்திற்கு வற்புறுத்தினார்...

அங்குதான் நாங்கள் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருப்பது வழக்கம். அதே போல 31-ந் தேதியும் நாங்கள் அங்கு உல்லாசமாக இருந்தோம். அப்போது நான் காயத்ரிமாலாவிடம் ரூ.5 ஆயிரம் கேட்டேன். அதற்கு அவர், ரூ.5 ஆயிரம் தருகிறேன். ஆனால் நீ வாரம் ஒரு முறை என்னை சந்தித்து உல்லாசமாக இருக்க வேண்டும் என்று நிர்பந்தித்தார்.

அதற்கு நான், எனது மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். என்னால் வாரம் ஒரு முறை வர முடியாது என்று கூறினேன். அதை கேட்ட காயத்ரிமாலா, நீ கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவன். இப்போது பரோலில் வெளியே வந்து விட்டு தலைமறைவாக இருக்கிறாய். நான் நினைத்தால் உன்னை போலீசில் மாட்டி விட்டு மீண்டும் சிறையில் அடைத்து விடுவேன். ஒழுங்காக நான் சொல்வதை கேள் என்று மிரட்டினார்.

இவ்வாறு அவர் கூறியதும் எனக்கு ஆத்திரம் வந்தது. எங்கே நான் தலைமறைவாக இருப்பதை காயத்ரிமாலா சொல்லி விடுவாரோ என நினைத்தேன். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி காயத்ரி மாலாவின் தலையில் கல்லை தூக்கிப்போட்டேன்.

இதில் அவர் மயங்கி விழுந்தார். அதன் பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின், தோடு, கைகெடிகாரம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடினேன். பின்னர் அங்குள்ள புதரில் காயத்ரிமாலாவின் உடலை இழுத்துப்போட்டு அவரின் தலையில் பெரிய கல்லை போட்டு விட்டு ஓடி விட்டேன்.

காயத்ரி மாலாவை கொன்று விட்டு நான் கருப்பூர் அருகே செங்கரடில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன் என்று கூறியுள்ளார் சரவணக்குமார்.

கண்மூடித்தனமான கள்ளக்காதல்..

காயத்ரி மாலா முதலில் திருமணம் செய்து விவாகரத்து பெற்று பின்னர் தமிழ்ச்செல்வனை மணந்துள்ளார். முதல் திருமணத்தின் மூலம் காயத்ரி மாலாவுக்கு 12 வயதில் மகள் உள்ளார்.

தமிழ்ச்செல்வன் மூலம் இன்னொரு மகள் பிறந்தார். 4 வயதான இந்த சிறுமி கோவையில், காயத்ரி மாலாவின் பெற்றோருடன் வளர்ந்து வருகிறாள்.

தமிழ்ச்செல்வனின் முதல் மனைவி கோமளா. இவர் மூலம் தமிழ்ச்செல்வனுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

தமிழ்ச்செல்வனை மணந்த பின்னரும் சிறைக் கைதியுடன் கள்ளக்காதலை கடந்த 7 ஆண்டுகளாக பேணிவந்துள்ளார் காயத்ரி மாலா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தவிர ஒரு வக்கீலுடனும் அவருக்குத் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இப்படி மோசமான பழக்க வழக்கங்களைக் கொண்டிருந்த காயத்ரி மாலா, கள்ளக்காதலால் தற்போது உயிரையே இழந்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X