For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் கன மழை ஒய்ந்தது

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழை இன்று ஓய்ந்தது.

இருப்பினும் நகரின் தாழ்வான பகுதிகள், புறநகர்ப் பகுதிகளில் இன்னும் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.

கடந்த 3 நாட்களாக பெய்து வந்த கன மழையால் நகரமும், புறநகர்ப் பகுதிகளும் பெரும் பாதிப்பை சந்தித்தன. இயல்பு நிலை முற்றிலும் ஸ்தம்பித்துப் போனது.

இந்த நிலையில் இன்று காலையில் மழை ஒரு வழியாக நின்றது. இன்று முழுவதும் பெரிய அளவில் மழை இல்லை. அவ்வப்போது லேசான தூறல் மட்டுமே காணப்பட்டது.

வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்...

முன்னதாக மழை நீர் பெருமளவில் தேங்கிய வட சென்னை, கன்னிகாபுரம், கணேசபுரம் ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வீட்டிற்குள்ளும் இடுப்பளவு தண்ணீர் புகுந்து உள்ளதால் பெண்கள், குழந்தைகள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.

பேசின்பிரிட்ஜ் ரெயில் நிலையம் பாலம் அருகே உள்ள சாலை முதல் சூளை நெடுஞ்சாலை, செங்கல்வராயன் பாலிடெக்னிக் வரை உள்ள சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கியிருந்தது. இந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் மோட்டார்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.

மகாகவி பாரதியார்நகர், கண்ணதாசன்நகர் ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிலையங்கள் மழை வெள்ளம் சூ்ழ்ந்தது.


சென்னை ராயபுரம் போலீஸ் நிலையத்தின் சுற்றுச் சுவர் மழையின் காரணமாக நேற்று இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக இதில் யாருக்கும் அடிபடவில்லை.

சென்னை பெரம்பூர் லோகோ ஒர்க்சில் உள்ள பழமையான இரும்பு பாலத்தில் தொடர் மழையின் காரணமாக நேற்று மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பாலம் கீழே இறங்கியே காணப்பட்டது. இதையடுத்து அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

சென்னையில் இதுவரை 25 இடங்களில் மரம் விழுந்துள்ளது. நேற்று காலையில் கோபாலபுரத்தில் ஒரு கார் மீது மரம் விழுந்ததால் அந்த கார் சேதம் அடைந்தது. வில்லிவாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்கு மேல் மரம் விழுந்ததால் அந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

சேத்துப்பட்டில் ஹாரிங்டன் சாலையில் லேடி ஆண்டாள் பள்ளி அருகே இருந்த பெரிய மரம் ஒன்று வேராடு சாய்ந்து விழுந்தது. இதில் அயனாவரம் தாகூர்நகரை சேர்ந்த முத்து(29) என்ற வாலிபர் சிக்கிக்கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் வேகமாக செயல்பட்டு மரத்தை அகற்றி, வாலிபரை உயிரோடு மீட்டனர். மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

எழும்பூர், ஈ.வி.கே. சம்பத் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், வேளச்சேரி, திருவான்மியூர், அடையாறு, சைதாப்பேட்டை, தியாகராயநகர் உள்பட பல பகுதிகளில் வெள்ளநீர் ஆறாக சாலைகளில் ஓடியது.

புறநகர் பகுதியில் கொட்டிய பலத்த மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றின் கரையோரம் இருந்த குடிசைகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது. தாழ்வான பகுதிகளுக்குள் இருப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பெரும் திண்டாட்டம்...

தொடர் மழையால் போக்குவரத்து சிக்னல்கள் பல செயலிழந்தன. இதை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முட்டியளவு ஓடிய தண்ணீரில் சிக்கி பல மோட்டார் சைக்கிள் பாதிப்படைந்தன. இதனால் ஆங்காங்கு நடமாடும் சேவையைப் போல மெக்கானிக்குகள் முகாமிட்டு வாகனங்களை பழுது நீக்கித் தந்ததைக் காண முடிந்தது.

மீன் விலை உயர்வு

கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வந்ததாலும், கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாலும் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் சென்னையில் மீன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

இதனால் 20 லட்சத்துக்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு கடந்த ஒரு வாரமாக மீன்பிடிக்க செல்லவில்லை. மிகவும் குறைந்த தூரத்தில் நாட்டு படகுகளில் சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.

குறைந்த தூரத்தில் மத்தி, காரல், கானாங்கெழுத்தி போன்ற சிறிய மீன்களே கிடைக்கும். பெரிய மீன்கள் கிடைக்காததால் வெளிநாடுகளுக்கு மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் தமிழ்நாட்டிலும் பெரிய ரக மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே தற்போது கர்நாடகா, மகராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு அதிக அளவில் வஞ்சரம், சூறா, கொடுவா போன்ற மீன்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

இதனால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வஞ்சிரம் மீன் ஒரு கிலோ ரூ. 310 ஆகவும், கருப்பு வாவல் ரூ. 260 ஆகவும், சூறா மீன் ஒரு கிலோ ரூ. 150 ஆகவும், கொடுவா மீன் கிலோ ரூ.160 ஆகவும் உயர்ந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X