For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நகர்ந்தது - தமிழகத்தில் மழை குறையும்

Google Oneindia Tamil News

More rains in the store: Weatherman
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நகர்ந்து தற்போது லட்சத்தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி முனைப் பகுதியில் புதிதாக ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று உருவாகியது. இதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் மற்றும் உட்புறப் பகுதிகளில் பெரும் மழை பெய்து வந்தது. இன்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அரபிக் கடலுக்கு நகர்ந்து சென்று, லட்சத் தீவுப் பகுதியில் நிலை கொண்டுள்ளது.

தமிழகத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளதால், தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்றைய மழை நிலவரம்..

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பரவலான மழை காணப்பட்டது.

அதிகபட்சமாக சீர்காழி, சிவகிரியில் தலா 24 செமீ மழையும், குன்னூர், கூடலூரில் தலா 19 செமீ மழையும் பெய்தன.

பரங்கிப்பேட்டை, கொல்லிடம் தலா 18, சிதம்பரம் 17, கடலூர், காரைக்கால், மயிலாடுதுறை, அண்ணா பல்கலைக்கழகம், செம்பரம்பாக்கம், காட்டுமன்னார் கோவில், கொடைக்கானலில் தலா 15.

உத்தமபாளையம், ராஜபாளையத்தில் தலா 14, சென்னை விமான நிலையம், பொன்னேரி, சேத்தியாத்தோப்பு தலா 13, சென்னை தாம்பரம், புதுச்சேரி, நன்னிலம், திருவாரூர் தலா 12, திருவிடைமருதூர், தரங்கம்பாடி, நாகை, கோத்தகிரி, திருப்புவனம், பண்ருட்டி, விருத்தாச்சலம் தலா 11, குடவாசல், சங்கரன்கோவில், பெரியார் அணை, ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், ஊட்டி, தலா 10 செமீ மழை பெய்தது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், புதுச்சேரியிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இருக்கும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு முறை லேசான மழை பெய்யக் கூடும்.

அடுத்த 2 நாட்களில் மழைப் பொழிவு படிப்படியாக குறையத் தொடங்கும்.

தமிழகம் முழுவதும் நேற்றைய மழை நிலவரம்...

டெல்டா மாவட்டங்களில்...

தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து சீராக மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மழை காரணமாக, சென்னையில் இருந்து திருச்சி வழியாக வரும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் இரண்டே முக்கால் மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு தஞ்சை ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது. மழை பெய்து கொண்டிருந்ததால் தஞ்சை பெரியகோவில், அரண்மனை வளாகம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகள் வராமல் வெறிச்சோடி காணப்பட்டன.

நாகை மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரம் பலத்த மழை பெய்தது.

தலைஞாயிறு பகுதியில் அரிச்சந்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் எந்த நேரத்திலும் உடைப்பு ஏற்படும் நிலை உள்ளது. மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இறுதி கட்ட சம்பா சாகுபடி நடவு பணியும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம் பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி நெற் பயிர்கள் பாதியளவு தண்ணீரில் மூழ்கி உள்ளன. மழை தொடர்ந்தால் இந்த பயிர்கள் முழுமையாக மூழ்கி விடும் அபாயம் உள்ளது.

திருச்சி, தஞ்சை ஆகிய மாவட்டங்களின் மழை நீர் வடிகாலாக வெண்ணாறு மற்றும் கிளை ஆறுகள் உள்ளதால் திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான ஆறுகள் மற்றும் வாய்க்கால்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது.

நாணலூர் கோரையாற்றில் அகரம்களப்பாலில் உள்ள பாசன மதகில் உடைப்பு ஏற்பட்டதால், தேவதானம் - மன்னார்குடி, நாணலூர் - மன்னார்குடி இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. முத்துப்பேட்டை பகுதியில் தாண்டியக்காடு, கற்பகநாதர்குளம், கரையான்காடு ஆகிய இடங்களில் வளவனாற்று தண்ணீர் ஊருக்குள் புகுந்துள்ளது.

திருச்சியில்...

திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை லேசான மழை பெய்தது.

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. நேற்று காலையில் அவ்வப்போது தூறல் விழுந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்திலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காலையில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டியது. காலையில் அவ்வப்போது தூறல் இருந்தது.

வேலூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்து லேசான மழை தூறிக் கொண்டே இருந்தது. பகல் முழுவதும் தொடர்ந்து மழை பெய்தது. அரக்கோணத்தில் அதிகபட்சமாக 4 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

குற்றாலத்தில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு..

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப் பெருக்குக் காணப்படுகிறது. இதனால் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் குளிக்க தொடர்ந்து நான்காவது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நெல்லை மாவட்டத்தில் அடை மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 4 நாட்களாக விடிய விடிய மழை பெய்து வருகிறது.

தொடர் மழையால் நெல்லை அண்ணா நகர், சங்கர் காலனி, பாலபாக்கிய நகர், உள்பட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கனமழை காரணமாக குளங்கள் நிரம்பி வருகின்றன.

மழை பெய்து கொண்டே இருப்பதால் காட்டாற்று பகுதிகளில் இருந்து ஓடி வரும் வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது. தாமிரபரணியில் வெள்ளம் பாய்வதால் பல ஆற்று பாலங்கள் மூழ்கியுள்ளன.

நெல்லை குறுக்கு துறை சுப்பிரமணிய சாமி கோயிலில் தைப்பூச மண்டபத்தை மூழ்கடித்துக் கொண்டு வெள்ள நீர் பாய்கிறது. தாமிரகபரணி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கலெக்டர் ஜெயராமன் கேட்டுக் கொண்டுள்ளார். தொடர் மழையால் நெல்லையில் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

நெல்லை வண்ணார்பேட்டை, திருவனந்தபுரம் ரோடு பகுதி சாலைகள் பெயர்ந்து கற்குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

சங்கரன்கோவில் தாலுகா வீரசிகாமணியை சேர்ந்த மாடப்பன் மகன் சுப்பையா வீட்டு மேல் கூரை இடிந்து விழுந்தது. அதே ஊர் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அங்கப்பன், மருதங்கிணற்றை சேர்ந்த பெரியசாமி, பெரிய கோவிலாங்குளத்தை சேர்ந்த முத்தையா ஆகியோரின் வீட்டு சுவர்களும் இடிந்து விழுந்தன.

பாலம் உடைந்தது...

ஆழ்வார்குறிச்சி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை பெய்தது. நேற்று காலை சாரல் மழை தூறி கொண்டே இருந்தது. இந்த மழையால் பொட்டல்புதூரில் இருந்து ரவணசமுத்திரத்துக்கு செல்லும் சாலையில் ராமநதி ஆற்றின் குறுக்கே புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பாலம் சேதம் அடைந்து உள்ளது.

கடையநல்லூர் பகுதியில் பெய்து வரும் மழையால் கருப்பாநதி அணையின் நீர்மட்டம் நேற்று காலை 701/2 அடி உயர்ந்தது. சுரண்டை, ஆலங்குளம், புளியங்குடி, சிவகிரி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்து கொண்டே இருந்தது.

கடல் சீற்றம்...

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் எழுந்த வண்ணம் இருந்தன. கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு நேற்று முழுவதும் படகு இயக்கப்படவில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு போக்குவரத்து காலையில் 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகுகள் இயக்கப்பட்டன.

மழை காரணமாக குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை நீடித்தது. ராமநாதபுரம், பாம்பன், மண்டபம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால் அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. தொடர்ந்து பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றும் விடுமுறை விடப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் மிதமான மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்திலும் லேசான மழை பெய்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்துவருவதால் குளம்,குட்டைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இது தவிர நீலகிரி, திருப்பூர் மாவட்ட பகுதிகளிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

கோவையில் நேற்று காலையில் இருந்தே லேசான மழை பெய்து வந்தது. மாலையில் மழையின் தீவிரம் அதிகரித்தது.

திருப்பூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை செய்து வருகிறது.

ரயில் பாதையில் பாறைகள்...

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் பாறைகள் விழுந்த வண்ணம் உள்ளன.

நேற்று காலை 7.15 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் ஊட்டி மலை ரெயில் புறப்பட்டு வந்தது. அப்போது மழை பெய்து கொண்டு இருந்தது. ரெயில் காலை 8.30 மணிக்கு அடர்லி ரெயில் நிலையம் வந்தது. அந்த சமயத்தில் மழையின் காரணமாக திடீரென்று பாறை ஒன்று ரெயில் பாதையில் விழுந்தது.

இதனை தொடர்ந்து அடர்லி ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே ஊழியர்களும், ரெயிலில் வந்த ரெயில்வே ஊழியர்களும் பாறையை உடைத்து ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு பாறை உடைத்து அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பரவலான அளவு மழை பெய்து வருகிறது. நேற்றும் பலத்த மழை பெய்தது.

தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் காய்கறிகள் பறிப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் விளையும் பீன்ஸ், கேரட் உள்பட இதர காய்கறிகளை சந்தைகளுக்கு கொண்டுவருவது ஓரளவு குறைந்து உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை லேசான தூறலுடன் மழை பெய்தது. பவானி மற்றும் பவானிசாகர், சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக லேசான தூறல் இருந்தது.

நாமக்கல் மாவட்டத்திலும் நேற்று காலை முதல் மழை தூறல் விழுந்தது. நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர் உள்பட அனைத்து இடங்களிலும் இந்த நிலை தான் இருந்தது.

தர்மபுரியில் நேற்று பகல் 12 மணி அளவில் பலத்து மழை கொட்டியது. மாவட்டம் முழுவதும் லேசான மழை தூறியது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மத்தூர் உள்பட அனைத்து இடங்களிலும் நேற்று காலை முதல் லேசான மழை பெய்தது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கோ.கொத்தனூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து தேவேந்திரன் (வயது 28), அவரது மனைவி சுகன்யா (22) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

விழுப்புரம் மாவட்டத்தில் லேசான மழை தூறல் மட்டுமே இருந்தது.

சிதம்பரத்தில் பெய்து வரும் மழையினால் சுமார் 500 வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மேடான இடங்களில் தங்க வைப்பதற்கு தேவையான ஆயத்த பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மழையினால் ஆலம்பாடி, கிருஷ்ணாபுரம், மருதூர், கொளக்குடி, எல்லைக்குடி, குமுடிமுளை, ஜெயக்கொண்டான், ஆதிவராக நல்லூர், கிள்ளை, பொன்னந்திட்டு, கீழச்சாவடி போன்ற 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிர் செய்த சம்பா நெற் பயிர்கள் முழுவதும் மூழ்கி உள்ளன.

புவனகிரி பகுதியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

புதுச்சேரியில்...

புதுச்சேரியில் தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய மழை பெய்தது. நேற்று காலையிலும் மழை நீடித்தது.

அரியாங்குப்பம் கடலூர்-புதுச்சேரி மெயின்ரோட்டில் மரவாடி அருகே மழைநீர் குட்டையில் நேற்று காலை முதியவர் ஒருவர் பிணமாக மிதந்தார்.

விசாரணையில் குட்டையில் பிணமாக மிதந்தவர் நோனாங்குப்பம் புதுக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வீரப்பன் (72) என்பது தெரியவந்தது.

கரூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி வருவதால் மக்களின் அன்றாய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் முக்கிய தொழிலாக ஜவுளி உற்பத்தி, மற்றும் சாயப்பட்டறை மற்றும் கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டுதல் பேன்ற பல தொழிற்சாலைக்கு தினசரி கிராமங்களில் இருந்து ஒரு லட்சம் மக்கள் வந்து செல்கின்றனர். கடும் மழையின் காரணமாக இந்த தொழிலுக்கு தொழிலாளர்கள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

24 மணி நேரமும் விடாது மழை கொட்டித் தீர்த்த வண்ணம் உள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள், ஆறு போன்றவைகளில் மழை நீர் நிரம்பியுள்ளது.

வயல்வெளிகள் மழை நீரால் சூழ்துள்ளதால் நெல் , மஞ்சள் போன்ற பயிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. மழை நின்ற பின்பே இதன் சேதம் குறித்த நிலவரம் தெரிய வரும்.

அதே போன்று அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் மழை காரணமாக சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். மேலும் பல பள்ளிகள் , கல்லூரிகள் மழை காரணமாக விடுமுறை அறிவித்துள்ளது.

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் இரண்டு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலையில் மாவட்டத்தின் பல பகுதிகள் திணறி வருகின்றன.

ஆனால் மழை குறித்த முன் எச்சரிக்கை பணி, மற்றும் விழிப்புணர்வு பணி போன்றவற்றில் மாவட்ட அரசு அதிகாரிகள் வழக்கம் போல் குறட்டை விட்டு வருகின்றனர்.

இதனால் பொது மக்களின் அன்றாட இயல்பு வாழக்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X