நில விற்பனைக்கு தடை-நீலகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
நீலகிரி: நீலகிரியில் நில விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்து அதிமுக சார்பில் இன்று நீலகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர், உதகமண்டலம் ஆகிய வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களிலும், அரசு குத்தகை நிலங்களிலும், கூடலூர் ஜென்ம ஒழிப்புச் சட்ட பிரிவு 17 நிலங்களிலும், காலம் காலமாக அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றவுடன், 2,174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள களக்காடு முண்டந்துறை, ஆனைமலை வன உயிரின சரணாலயம், முதுமலை வன உயிரின சரணாலயம் ஆகிய பகுதிகளை புதிய புலிகள் காப்பகமாக அறிவித்தது. இதனால், இந்த பகுதியில் உள்ள மக்களை வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 1949 ம் ஆண்டு தமிழ்நாடு தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தனியார் காடுகளை பாதுகாக்கும் பொருட்டு, மேற்படி பகுதிகளில் உள்ள பட்டா நிலங்களை ஏழை, எளிய மக்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் விதத்தில், தமிழக அரசு ஓரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, இந்தப் பகுதியில் இருப்பவர்கள் தங்களுடைய நிலங்களை விற்க வேண்டுமெனில் மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட 15 உறுப்பினர்கள் அடங்கிய உயர் நிலைக் குழுவின் ஒப்புதலைப் பெற வேண்டும். அதன் பின்னறே தங்களது நிலங்களை விற்பனை செய்ய முடியும்.
இந்த ஒப்புதலைப் பெறுவதற்கே அவர்கள் பல ஆண்டு காலம் காத்துக் கிடக்க வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற அறிவிப்பு தனி மனித உரிமையை பறிப்பதோடு மட்டும் அன்றி மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இது மட்டும் இன்றி , இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மூன்று அரசுப் பேருந்துகளைத் தவிர, அனைத்துப் போக்குவரத்து வசதிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், ரூ 900 கோடி மதிப்பில் நியூட்ரினோ ஆய்வுக் கூடம் இங்கு அமைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.
இந்த ஆய்வுக் கூடம் இங்கு அமைக்கப்பட்டால் இங்குள்ள புலிகள் காப்பகம் சுற்றுச் சூழலால் கடுமையாக பாதிக்கப்படும் என்று சுற்றுச் சூழல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே, கூடலூர், பந்தலூர், உதகமண்டலம் ஆகிய வருவாய் வட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் நிலங்களை எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி உடனடியாக விற்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும், பஸ் போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை உடனே நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்பாட்டம், திங்கள் கிழமை காலை 11 மணிக்கு, கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையிலும், நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் செல்வராஜ் மற்றும் நீலகிரி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மில்லர் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.