For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராணுவ புரட்சி பயம்: இந்திய உதவி கோரிய ராஜபக்சே- பொன்சேகா தாக்கு

Google Oneindia Tamil News

Sarath Fonseka
கொழும்பு: இலங்கையில் ராணுவப் புரட்சியை மேற்கொள்ள நான் திட்டமிட்டு்ள்ளதாகக் கூறி அதை சமாளிக்க இந்திய ராணுவத்தின் உதவியை அதிபர் ராஜபக்சே கோரியுள்ளார். இதைவிட அசிங்கமான செயல் எதுவும் இருக்க முடியாது என்பதால் தான் நான் எனது பதவியை ராஜினாமா செய்தேன் என்று அந் நாட்டு முப்படைகளின் கூட்டுப் படைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

நேற்று ராஜபக்சேவை சந்தித்த பொன்சேகா, தான் ராஜினாமா செய்ய விரும்புவதாக தெரிவித்தார். அதை ஏற்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று ராஜபக்சே கூறினார். இதைத் தொடர்ந்து, பொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தை ராஜபக்சேவின் செயலாளர் லலித் வீரதுங்காவிடம் ஒப்படைத்தார்.

அந்தத் கடிதத்தில் பொன்சேகா கூறியுள்ளதாவது:

37 ஆண்டு காலமாக விடுதலைப் புலிகளுடன் நடந்து வந்த போரை நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன். ஆனாலும் நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசால் முடியவில்லை.
தமிழர்களின் நம்பிக்கையை அரசு இன்னும் பெறவில்லை. தமிழர்களின் நம்பிக்கையைப் பெற இந்த அரசிடம் எந்த கொள்கையும் இல்லை. இதனால் மீண்டும் ஒரு இனப் போர் மூள்வது தவிர்க்க முடியாததாகி வருகிறது.

போரில் உயிர் பிழைத்த தமிழர்களை முகாம்களில் அடைக்க வேண்டாம் என்று நான் கூறினேன். அதைக் கேட்கவில்லை. அவர்களை உடனே மறுகுடியேற்றம் செய்யுமாறு சொன்னதையும் கேட்கவில்லை.

நான் ராணுவத் தளபதியாக இருந்து போரை வென்று தந்தேன். ஆனால், பதவி உயர்வு என்று கூறி என்னை அதிகாரமில்லாத ஒரு டம்மி பதவிக்கு மாற்றிவிட்டனர்.

மேலும் கடந்த அக்டோபர் 15ம் தேதி இந்தியாவிடம் அதிபர் ராஜபக்சே ஒரு உதவியைக் கோரினார். நான் ராணுவப் புரட்சி செய்து ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும், அப்படி நடந்தால் இந்திய ராணுவத்தை அனுப்பி புரட்சியை ஒடுக்க உதவ வேண்டும் என்றும் இந்தியாவிடம் ராஜபக்சே கோரினார்.

இதன்மூலம் இலங்கை ராணுவத்தின் மரியாதையையே ராஜபக்சே குழி தோண்டி புதைத்துவிட்டார்.

மேலும் இந்த அரசில் ஊழல் தாண்டவமாடுகிறது. பத்திரிக்கைகளுக்கும் சுதந்திரமில்லை, தனி மனித சுதந்திரமும் இல்லை.

நாட்டில் அமைதியும் வளமும் திரும்பாவிட்டால் ராணுவத்தின் வெற்றியால் ஒரு பயனும் இருக்காது.

போரில் கிடைத்த வெற்றியால் எனக்கு மக்களிடையே கிடைத்த நற்பெயரால் இந்த அரசு அச்சத்தில் உள்ளது. எனது அதிகாரத்தைக் குறைக்கவே அதிகாரமில்லாத ஒரு கெளரவப் பதவியில் நியமித்தீர்கள். இதன்மூலம் என் மீது உங்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது புரிகிறது. கொடுத்த வேலையை சரியாகச் செய்து முடித்ததற்குக் கிடைத்த பரிசா இது?.

ராணுவத்தின் 60ம் ஆண்டு விழா வரை (அக்டோபர் மாதம் வரை) நான் ராணுவத் தலைவர் பதவியில் தான் இருக்க விரும்பினேன். ஆனால், ஜூலை மாதத்திலேயே என்னை கூட்டுப் படைத் தலைவராக்கி என் அதிகாரத்தைப் பறித்துவிட்டீர்கள்.

நான் ராணுவப் புரட்சி நடத்தி விடுவேன் என்று சிலர் சொன்னதைக் கேட்டு பயந்து இந்த நடவடிக்கையை எடுத்தீர்கள்.

இவ்வாறு தனது கடிதத்தி்ல் பொன்சேகா கூறியுள்ளார்.

அரசியல்-முடிவு செய்வேன்:

இந் நிலையில் கெலானியாவில் உள்ள புத்த கோவிலுக்குச் சென்று வழிபட்ட பொன்சேகாவிடம் நிருபர்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதற்கு,

எனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளேன். அது ஏற்கப்படும் வரை நான் கூட்டுப் படை தலைவர் தான். இதனால் சீருடைப் பணியில் இருந்து கொண்டே இந்தக் கேள்விக்கு நான் பதி்ல் சொல்வது சரியல்ல. என் ராஜினாமா ஏற்கப்பட்ட பின் இதற்கு பதில் சொல்கிறேன்.

எனக்கும் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்று கேட்கிறீர்கள். இதை முதலில் அரசிடம் கேளுங்கள் என்றார்.

இதற்கிடையே பொன்சேகாவை எதிர்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டாக ராஜபகசேவுக்கு எதிராக அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் அதிபர் பதவித் தேர்தலி்ல் நிறுத்த முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

பொன்சேகா ராஜினாமா ஏற்பு:

இந் நிலையில் கூட்டுப்படைத் தலைவர் சரத் பொன்சேகாவின் ராஜினாமா கடிதத்தை கொள்கை அளவில் அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த ராஜினாமா நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகா தனது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ராஜபக்சே உரிய பதிலை அளிப்பார் என்று லலித் வீரதுங்கா தெரிவித்துள்ளார்.

விசாரணை அம்பை கையில் எடுக்கும் ராஜபக்சே...

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இலங்கை இனப்படுகொலை குறித்த அறிக்கையில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்றை இலங்கை அரசு அமைத்துள்ளது.

இந்த கமிட்டி தற்போது பொன்சேகாவை தீவிரமாக விசாரிக்கும் என கருதப்படுகிறது. பொன்சேகா பதவியிலிருந்து விலகினாலும் கூட அவரையும் தீவிரமாக விசாரிக்க வேண்டும் என ராஜபக்சே உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

இதன் மூலம் பொன்சேகாவுக்கு நெருக்கடியைத் தர ராஜபக்சே திட்டமிட்டிருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது.

திடீரென 'ரொம்ப நல்லவரான' பொன்சேகா:

தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டதால் தான் தமிழர் நலன், தமிழர்களின் இதயங்களை வெல்வது என்று 'பக்கா அரசியல்வாதி' போல பேச ஆரம்பித்துள்ளார் பொன்சேகா.

இந்திய அரசைத் தவிர மற்ற சில நாடுகளாலும் ஐ.நாவாலும் பொன்சேகாவும் ராஜபக்சேவும் போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே தமிழர்கள் மீது அன்பு கொண்டவர் போல பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X