பொன்சேகாவை புறக்கணித்த முப்படை தளபதிகள்
கொழும்பு: ஒரு வழியாக பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் இலங்கை கூட்டுப்படைத் தலைவர் சரத் பொன்சேகா. தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 2 நாட்களில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை கூட்டுப்படைத் தலைவராக இருந்து வந்த பொன்சேகாவை எதிர்க்கட்சி கூட்டணி அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு ஒப்ப அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்ற அதிபர் ராஜபக்சே, உடனடியாக அவரை பதவியிலிருந்து விலக்குமாறும் உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று மாலை பொன்சேகா பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து பொன்சேகா கூறுகையில், ராணுவத் தளபதியாகவும், கூட்டு படைகளின் தலைவராகவும் நான் ஆற்றிய சேவைகள் திருப்திகரமாகவே இருந்தன.
ராணுவத்தினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் எனது நல்லாசிகள். இன்னும் இரண்டு நாட்களில் எனது எதிர்காலத் திட்டம் குறித்து நான் அறிவிப்பேன் என்றார்.
பொன்சேகாவுக்கு ராஜபட்ச நன்றி:
இந் நிலையில் விடுதலைப் புலிகளை வெற்றி கொள்வதில் முக்கிய பங்காற்றியதற்காக முப்படைகளின் தளபதி பொன்சேகாவுக்கு அதிபர் ராஜபட்ச நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிரிவுபசார விழா-முப்படை தலைவர்கள் புறக்கணிப்பு:
இந் நிலையில் பொன்சேகாவுக்கு பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையுடன் பிரிவுபசார விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியை ராணுவ, விமானப்படை, கப்பற்படை தளபதிகள் புறக்கணித்துவிட்டனர்.
இதுகுறித்து தனது உரையின்போது வருத்தத்துடன் குறிப்பிட்ட பொன்சேகா பின்னர் போர் வீரர்கள் நினைவு சின்னத்துக்கும் சென்று அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
பின்னர் அதிபர் ராஜபக்சேவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் பொன்சேகா.
இவரது ராஜினாமாவை தொடர்ந்து முப்படைகளின் கூட்டுத் தளபதி பதவியை விமானப்படை தளபதி ஏர்மர்ஷல் குணதிலக கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.