For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குழு தலைவர் பதவி: எதியூரப்பா-ரெட்டிகள் மோதல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: சண்டை சச்சரவு இல்லாமல் கர்நாடகத்தில் ஆட்சியை நடத்திச் செல்ல உருவாக்கப்படவுள்ள ஒருங்கிணைப்புக் குழுவுக்கு யாரை தலைவராக நியமிப்பது என்பதில் முதல்வர் எதியூரப்பாவுக்கும், ரெட்டி சகோதரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் எழுந்துள்ளது.

எதியூரப்பா-ரெட்டிகள் மோதலையடுத்து இரு பிரிவினைரையும் அழைத்து பாஜக மேலிடம் சமாதானப்படுத்தியது.

மேலும் கர்நாடக அரசில் முக்கிய முடிவுகளை எடுக்க ஒருங்கிணைப்புக் குழு (கோர் கமிட்டி) அமைக்கப்படும் என்றும், இந்தக் குழுவே அரசை நடத்திச் செல்லும் என்றும் தலைமை அறிவித்தது.

இந்தக் குழுவின் தலைவராக சுஷ்மா ஸ்வராஜை நியமிக்க வேண்டும் என்றும் ரெட்டி சகோதரர்கள் கூறி வந்தனர். ஆனால், சுஷ்மாவுக்கு எதிராக கோஷ்டி மாநில அரசின் நிர்வாகப் பிரச்சனையில் மத்திய தலைவர் நேரடியாக தலையிடுவது சரிவராது என்று கூறிவிட்டது.

இதையடுத்து கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரையே தலைவர் பதவியில் நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தாங்கள் கூறுபவரையே ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என்று எதியூரப்பாவும் ரெட்டி சகோதரர்களும் இப்போது தலைமையிடம் வற்புறுத்த ஆரம்பித்துள்ளதால் மீண்டும் சிக்கல் வெடித்துள்ளது.

தனக்குச் சாதகமானவரையே தலைவராக்க வேண்டும் என எதியூரப்பா கூறுகிறார். இதை ரெட்டிகள் ஏற்கவில்லை.

இந்தக் குழுவில் முதல்வர் எதியூரப்பா, பாஜக தேசியத் தலைவரும் உள்குத்து வேலைகளில் புகழ் பெற்றவருமான அனந்தகுமார், ரெட்டிகளோடு சேர்ந்து எதியூரப்பாவுக்கு ஆப்பு வைத்த ஜெகதீஷ் ஷெட்டார், ரெட்டிகளில் சகோதரர்களில் முக்கியமானவரான கருணாகர ரெட்டி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்களான சதீஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் இடம் பெறவுள்ளனர்.

இதுதவிர ஒரு தலைவர் மற்றும் மேலும் இரு உறுப்பினர்கள் இடம் பெறவுள்ளனர்.

தலைவராக தற்போதைய மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடாவை நியமிக்க வேண்டும் என்று எதியூரப்பா சொல்கிறார். ஆனால் ரெட்டி சகோதரர்கள் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தாங்கள் சுட்டிக் காட்டும் ஒருவரையே நியமிக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கெனவே எதியூரப்பாவிடமிருந்து பல அதிகாரங்களைத் தட்டிப் பறித்துள்ள ரெட்டி சகோதரர்கள் இப்போது ஆட்சி நிர்வாகத்தின் முக்கிய அங்கமாக கட்சியால் ஏற்படுத்தப்படும் அமைப்பையும் தங்களின் கைப்பிடியில் கொண்டு வர முயன்று வருகின்றனர்.

சபாநாயகர் ஷெட்டார் மீண்டும் அமைச்சரானார்:

இதற்கிடையே முதல்வர் எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்நாடக சட்டசபை சபாநாயகர் ஜெகதீஷ் ஷெட்டார் இன்று அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதன் மூலம் 2 வது முறையாக அவர் அமைச்சராகியுள்ளார்.

இன்று காலை ராஜ்பவனில் நடந்த எளிய நிகழ்ச்சியில் ஷெட்டார் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் பதவிப்பிரமாண் செய்து வைத்தார்.

முதல்வர் எதியூரப்பா, அமைச்சர்கள், ரெட்டி சகோதரர்கள், பாஜக தலைவர் சதானந்த கெளடா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

ஷெட்டாருக்கு பொதுப்பணித்துறை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

முன்னதாக, அமைச்சரவையில் சேருவதற்கு வசதியாக நேற்று தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார் ஷெட்டார்.

வட கர்நாடகத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஷெட்டார். ஷெட்டார் குடும்பமே அரசியல் குடும்பமாகும். அவரது தந்தை ஹூப்ளி மாநகராட்சிக்கு ஐந்து முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும், மாநகராட்சியின் முதல் பாஜக மேயராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர்.

1990 முதல் பாஜகவில் வளர்ச்சியைச் சந்தித்து வந்தார் ஷெட்டார். ஹூபளி ஊரக பாஜக தலைவராகவும், பின்னர் தார்வாட் மாவட்ட தலைவராகவும் இருந்தவர். 1999ம் ஆண்டு மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக செயல்பட்டார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு 20 வருட காலம் வக்கீலாகப் பணியாற்றியவர் ஷெட்டார். 2005ம் ஆண்டு கர்நாடக பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். 2008ல் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற முக்கியக் காரணமாகவும் இருந்தவர் ஷெட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X