For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனக்கு வந்தால் 'அலறல் வலி'.. பிறர்க்கு வந்தால் 'மெளன வலியா?'-ஜெ. கேள்வி

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி'யாகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி'யாக இருக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், நம் மௌன வலி யாருக்கு தெரியப் போகிறது என்று கூறியிருந்தார்.

இதையடுத்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

'நம் மௌன வலி; யாருக்குத் தெரியப் போகிறது?' என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டு தான் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் சந்தர்ப்பவாதி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் முதல்வர் கருணாநிதி.

தன்னுடைய அறிக்கையில் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்ததாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில் நின்றால் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்த கருணாநிதி, 1983ம் ஆண்டு இலங்கைத் தமிழர்களின் நலனுக்காக என்று கூறி தான் வகித்துவந்த சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு 1984ம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.

இதிலிருந்தே தேர்தல் தோல்வியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக சுயநலத்துடன் கருணாநிதியால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் அது என்பது தெளிவாகிறது.

1991ம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் எனது தலைமையில் அதிமுக 164 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றி அடைந்த நேரத்தில், ஒற்றை எண்ணில் ஒரே இடத்தில் வெற்றி பெற்று படுதோல்வியை தழுவிய கருணாநிதி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அப்போதும் அவமானம் தாங்காமல் தனி நபராக ஆளும் கட்சியை எதிர்கொள்ள துணிவில்லாமல் கருணாநிதி தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தாரே தவிர எந்த லட்சியத் திற்காகவோ கொள்கைக்காகவோ தியாகம் செய்யவில்லை.

அடுத்ததாக இலங்கைத் தமிழர்களுக்காக இருமுறை ஆட்சியை இழந்ததாக கூறியிருக்கிறார் கருணாநிதி. உண்மை நிலை என்ன வென்றால் 1976ம் ஆண்டு ஊழல் புரிந்ததற்காகவும், 1991ம் ஆண்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதற்காகவும் தான் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.

இவ்வளவு வாய்கிழியப் பேசும் கருணாநிதி, 2008ம் ஆண்டு தான் தாங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசின் உதவியோடு இலங்கை ராணுவம் அங்குள்ள தமிழர்களை கொன்று குவித்தபோது என்ன செய்து கொண்டிருந்தார் என்பது பற்றி ஒருவரி கூட தெரிவிக்கவில்லையே.

ஒரு வேளை அவர் நடத்திய கபட நாடகங்களான அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம், மனிதச் சங்கிலி போராட்டம் என்று அறிவித்து அனைவரையும் கொட்டும் மழையில் நனையவிட்டு தான் மட்டும் தன் மகனுடன் சீருந்தில் பவனி வந்தது; பிரதமருக்கு தந்தி கொடுங்கள் என்று அறிவித்தது,

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என அறிவித்தது, ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது; உலகத்தில் இதுவரை யாருமே நடத்தியிராத 3 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் ஆகியவற்றை மனதில் வைத்துத்தான் அறப் போராட்டங்கள் நடத்தியதாக தனது அறிக்கையில் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார் போலும்.

கருணாநிதிக்கு உண்மையான தமிழர் பற்று இருந்திருக்குமானால், 2008ம் ஆண்டு துவக்கத்திலேயே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். இதை கருணாநிதி செய்திருப்பாரேயானால் அப்பொழுதே இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கும். தமிழினம் அழிவது தடுத்து நிறுத்தப்பட்டிருக்கும்.

இதைச் செய்யாததன் மூலம் தமிழினத்திற்கு மிகப் பெரிய துரோகத்தை கருணாநிதி இழைத்து விட்டார். இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட கருணாநிதி முக்கிய காரணமாகி விட்டார்.

தன்னலம் காரணமாக தன் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்கும் வகையில் பிரபாகரன் தீவிரவாதி அல்ல, என் நண்பன் என்று தான் கூறியதையும், நாங்களே அடிமைகளாக இருக்கிறோம் என்று கூறி இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில் தன்னுடைய இயலாமையை தெரிவித்ததையும் மறந்து தற்போது பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி.

வீரம் என்கிற போராடும் மன வலிமை தன்னிடம் இல்லை என்பதையும், தன் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் செயல்படும் விவேகம் தன்னிடத்தில் மேலோங்கி நிற்பதையும் தனது அறிக்கையின் மூலம் கருணாநிதி தெளிவுபட கூறியிருக்கிறார்.

தமிழர்களுக்கு தமிழினத்திற்கு பாதிப்பு ஏற்பட்டால் கருணாநிதிக்கு அது 'மௌன வலி' ஆகத்தான் இருக்கும். தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது டெல்லி வரை ஓங்கி ஒலிக்கக் கூடிய 'அலறல் வலி' ஆக இருக்கும். இதுதான் கருணாநிதியின் தத்துவம்.

இந்த மௌன வலியை மக்கள் நம்பத் தயாராக இல்லை. தமிழனத்திற்கு கருணாநிதி இழைத்த துரோகத்தை மக்கள் மறக்க மாட்டார்கள் என்பதை இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நீண்ட கால உறுப்பினர்களே கட்சிப் பொறுப்பு:

இதற்கிடையே அதிமுக உட்கட்சித் தேர்தல் நவம்பர் 23ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்சி மேலிடம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு பொறுப்பாளர், ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட தேர்தல் பொறுப்பாளர், மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில் நடந்தது.

இக் கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, தேர்தல் அமைதியாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டும். மேலும், கட்சியில் புதிதாக இணைந்தவர்கள், வேறு கட்சிக்கு சென்றுவிட்டு கட்சிக்கு திரும்பியவர்கள் ஆகியோர் கட்சிப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படக் கூடாது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது கட்சியில் தொடர்ந்து உறுப்பினர்களாக உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்; கட்சிப் பொறுப்புக்கு தேர்வு செய்யப்படுவோர் மக்களிடம் செல்வாக்கு நிறைந்தவர்களாக இருப்பது அவசியம்;

கட்சி நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்படும் இடங்களைத் தவிர, போட்டி ஏற்படும் இடங்களில் வாக்குப் பெட்டிகள் வைத்து தேர்தலை நடத்த அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X