For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கர் ஹெட்லி ஒரு பாகிஸ்தானியர்!-தொடர்புகள் அம்பலம்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: டேவிட் கோல்ட்மேன் ஹெட்லி உண்மையில் ஒரு பாகிஸ்தானியர் என்ற உண்மை தெரிய வந்துள்ளது. அவரும், அவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டவருமான ராணாவும், பாகிஸ்தானைச் சேர்ந்த மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. ராணாவின் உறவினர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் அதிகாரிகளாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஹெட்லி மற்றும் பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்கரான தஹவூர் ஹூசேன் ராணா ஆகியோர் சிகாகோவில் வைத்துக் கைது செய்யப்பட்டனர். இருவரும் இந்தியாவிலும், டென்மார்க்கிலும் பெரும் தீவிரவாத செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்ததும், லஷ்கர் அமைப்புடன் இவர்களுக்குத் தொடர்பு இருந்ததும் தெரிய வந்தது.

இந் நிலையில் இவர்கள் இருவரின் பூர்வீகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

உண்மையில் ஹெட்லி ஒரு பாகிஸ்தானி ஆவார். இவரது உண்மையான பெயர் தாவூத் கிலானி என்பதாகும். பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசியல் மட்டத்தில் பிரபலமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ராணாவும், ஹெட்லியும்.

இருவரும் பாகிஸ்தானில் உள்ள ஹசன் அப்தல் கேடட் ராணுவ உறைவிடக் கல்லூரியில் படித்தவர்கள். இந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் பாகிஸ்தான் ராணுவத்தில் தளபதிகளாக, தூதர்களாக, தூதரக அதிகாரிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரும் சிறு வயதிலேயே அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்து விட்டனர். இருப்பினும் பாகிஸ்தானில் உள்ள அவர்களது உறவினர்களுடன் இன்னும் நல்ல தொடர்புகள் உள்ளன.

ராணாவின் இரு சகோதரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தில் முக்கிய அதிகாரிளாக உள்ளனர். ஹெட்லியின் தந்தை சலீம் கிலானி. இவர் முன்னாள் தூதரக அதிகாரி ஆவார். தற்போது இவர் உயிருடன இல்லை.

ராணாவும், ஹெட்லியும் முறையே கனடா மற்றும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்றாலும் கூட அவர்களுக்கும், பாகிஸ்தானுக்கும் நீடித்த தொடர்புகள் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானியர்கள் என்ற பூர்வீகத்தை வைத்துக் கொண்டு அமெரிக்கர், கனடியர் என்ற வேறு அடையாளத்துடன் இரு பிராந்தியங்களுக்கும் இடையே இவர்கள் சுதந்திரமாக உலவி வந்துள்ளனர்.

இந்த இருவருக்கும் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருடன் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக எப்.பி.ஐ கண்டுபிடித்துள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த மேலும் பலருடனும் இவர்களுக்குத் தொடர்பு உள்ளது. தீவிரவாத அமைப்புகளுடனும் நல்ல தொடர்பில் இருந்து வந்துள்ளனர் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலு்ம் பாகிஸ்தான் ராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதையும் முதல் முறையாக எப்.பி.ஐ ஆதாரங்களுடன் கண்டுபிடித்துள்ளதாம்.

ராணா, ஹெட்லியுடன் தொடர்புடைய பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி யார் என்பதை அமெரிக்க அதிகாரிகள் தெரியப்படுத்தாமல் உள்ளனர். இருப்பினும் அந்த அதிகாரி சமீபத்தில்தான் பாகிஸ்தான் ராணுவத்தை விட்டு வெளியேறியதாகவும், கர்னல் அல்லது பிரிகேடியர் ஜெனரல் ரேங்கிலான அதிகாரி அவர் என்றும் தெரிய வந்துள்ளது.

தற்போது அந்த அதிகாரி எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அனேகமாக அவர் பாகிஸ்தான் போலீஸ் காவலில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், அவர் கைது செய்யப்பட்டதாகவும், ராணுவத்திடமிருந்து வந்த நெருக்குதலால் அவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் பாகிஸ்தானில் இல்லை என்றும் இன்னொரு தகவல் கூறுகிறது.

அந்த நபரின் பெயர் வெறுமனே 'ஏ' என்று மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இதற்கிடையே ராணாவின் சகோதரர்கள் இருவர் ராணுவத்தில் இருப்பதால் அவர்களையும் சந்தேக வளையத்தின் கீழ் எப்பிஐ கொண்டு வந்துள்ளது. ஆனால் இருவருக்கும் எதிராக இதுவரை எந்தத் தகவலும் எப்பிஐக்குக் கிடைக்கவில்லையாம்.

ஹெட்லியின் பூர்வீகம் குறித்த தகவல்கள் அமெரிக்காவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹெட்லியின் தாயார் பெயர் செரில் ஹெட்லி. இவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார். இவர் பென்சில்வேனியாவைச் சேர்ந்தவர். அமெரிக்கப் பெண்மணியான இவர் 60களில் தூதரக அதிகாரியாக அமெரிக்காவுக்கு வந்த சலீம் கிலானியை காதலித்து மணந்து கொண்டார்.

முதலில் சலீம் கிலானியும், செரிலும் பாகிஸ்தானில்தான் வசித்து வந்தனர். பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். செரில் அமெரிக்காவுக்குத் திரும்பி விட்டார். 70களின் தொடக்கத்தில் அவர் அமெரிக்கா திரும்பினார். பிலடெல்பியாவில், 100 ஆண்டு கால கிளப் ஒன்றை வாங்கி அதற்கு கைபர் கணவாய் பார் - ரெஸ்டாரென்ட் என பெயரிட்டு நடத்தினார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் இதை வெற்றிகரமாக அவர் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தனது மகன் தாவூத் கிலானியை தனது பொறுப்பில் எடுக்கு அவர் நடத்தி வந்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கிலானியை செரிலே வளர்க்கலாம் என பாகிஸ்தான் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து 1977ம் ஆண்டு கிலானி, செரில் பொறுப்புக்கு வந்தார். அப்போது அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

அதுவரை இஸ்லாமியராக வளர்ந்து வந்த தாவூத் கிலானி, கலாச்சார அதிர்ச்சிக்குள்ளானார். பிலடெல்பியாவின் வாழ்க்கைச் சூழல், அமெரிக்க கலாச்சாரம், மேற்கத்திய பாதிப்புகள் அவரைக் குழப்பின.

தான் ஒரு முஸ்லீமாக இருக்கும் நிலையில் தனது தாயார் ஒரு பார் வைத்து நடத்திக் கொண்டிருந்ததை அவரை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இளைஞனாக இருந்தபோது வீட்டை விட்டு வெளியே அதிகமாக போக மாட்டாராம் கிலானி. எந்தப் பெண்ணுடனும் பேச மாட்டார். வீட்டில் வேலையாட்களாக இருந்த பெண்களுடன் மட்டுமே அவர் பேசுவது வழக்கம்.

இந்த நிலையில் 1985ம் ஆண்டு பாரை நடத்தும் பொறுப்பை கிலானியிடம் கொடுத்தார் செரில். ஆனால் அதை படு வேகமாக நஷ்டத்திற்குக் கொண்டு போய் விட்டார் கிலானி. பின்னர் அதை வேறு நபருக்கு விற்று விட்டனர்.

இந்த நிலையில், தனது தாயாருடன் சேர்ந்து பிலிக்ஸ்வீடியோ என்ற நிறுவனத்தை நடத்தினார் கிலானி. வணிகவியல் பட்டப்படிப்பையும் முடித்தார்.

1997ம் ஆண்டு கிலானி என்ற பெயரில், ப்ரூக்ளினுக்கு ஹெராயினைக் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைதாகி 15 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார் ஹெட்லி.

2006ம் ஆண்டு தனது பெயரை டேவிட் கோல்மேன் ஹெட்லி என மாற்றிக் கொண்டார். 2008ல் செரில் காலமானார்.

பிறப்பில் பாகிஸ்தானியராக இருந்த கிலானி பின்னர் மேற்கத்திய தாக்கத்தால், ஹெட்லியாக மாறியுள்ளார்.

ராணாவின் கதையும் கிட்டத்தட்ட இதுபோலத்தான். பல ஆண்டுகளுக்கு முன்பே ராணாவும் கனடாவுக்கு வந்து விட்டார். கனடா குடியுரிமையைப் பெற்றார். ஆனால் ஆரம்பத்தில் சிகாகோவில் அவர் வசித்தார். அவரது மனைவி பெயர் சம்ராஸ் அக்தர் ராணா. இவர்களுக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளார். பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார் ராணா.

கனடாவின் ஒட்டாவா நகருக்கு வெளியே ஒரு பிரமாண்ட வீடு ராணாவுக்கு உள்ளது. அங்கு அவரது வயதான தந்தை, ஒரு சகோதரர் ஆகியோர் வசிக்கின்றனராம். அவரது சகோதரர் ஹில் டைம்ஸ் இதழின் செய்தியாளராக இருக்கிறார்.

இந்த இருவருக்குள்ளும் ஏகப்பட்ட விஷயங்கள் மறைந்திருப்பதாக கருதும் எப்பிஐ இவர்களின் நோக்கம் என்ன, என்ன மாதிரியான செயல்பாடுகளில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர் என்பதை வெளிக் கொண்டு வரும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X