For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென் மாவட்டங்களில் 48 மணி நேரத்தில் கன மழை பெய்யும்

By Staff
Google Oneindia Tamil News

Satellite image of Tamil Nadu
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை...

தென் தமிழகத்தில் பல இடங்களில் இன்று மழை பெய்தது. தமிழகத்தின் வட பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிக அளவாக குன்னூரில் 6 செமீ மழை பெய்துள்ளது. ஆர்.எஸ்.மங்கலம், கன்னியாகுமரி, நாகர்கோவில் தலா 5, ராமநாதபுரம், ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், பூதப்பாண்டி, போடிநாயக்கனூர், கோவிலாங்குளம் தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

அறந்தாங்கி, பாளையங்கோட்டை, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தூத்துக்குடி, பவானிசாகர், குண்டா பாலம் தலா 3 செமீ, அதிராம்பட்டினம், திருவாடானை, தொண்டி, ராதாபுரம், மணியாச்சி, மயிலாடி, தக்கலை, திருச்செங்கோடு, சங்கரிதுர்க்கம் தலா 2 செமீ, பண்ருட்டி, உளுந்தூர்ப்பேட்டை, வல்லம், மணல்மேல்குடி, முதுகுளத்தூர், பரமக்குடி, பாம்பன், ஆயக்குடி, நாங்குநேரி, தென்காசி, சூரங்குடி, பேச்சி்ப்பாறை, மேட்டூர் அணை, ஓமலூர், சேலம், கேத்தி, கோத்தகிரி, அரவக்குறிச்சி, மாயனூர், முசிறி, திருப்பத்தூர் தலா ஒரு செமீ மழை பெய்துள்ளது.

23ம் தேதி காலை வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு..

தென் தமிழகத்தின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும்.

தமிழகத்தின் தென் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நெல்லையில் நேற்று மாலை முதல் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. இன்று காலையிலும் மழை நீடித்ததால் நகரம் வெள்ளக்காடாகியது. நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல ஓடியதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் யாரும் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.

நெல்லை மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் இன்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால், அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி, மின்னல்-300 டிவிக்கள் சேதம்:

இதற்கிடையே, கடையநல்லூரில் ஏற்பட்ட இடி, மின்னலுக்கு திரிகூடபுரம், சொக்கப்பட்டி பகுதிகளில் 300 டிவிக்கள் சேதமடைந்தன.

கடையநல்லூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் பலத்த இடி மின்னல் காணப்பட்டது. சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுக்கு பிறகு கனமழை கொட்டியது.

தொடர்ந்து ஏற்பட்ட இடி, மின்னல் காரணமாக கடையநல்லூர், சொக்கப்பட்டி, திரிகூடபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள சுமார் 300 வீடுகளில் வைக்கப்பட்டிருந்த டிவிக்கள் சேதமடைந்தன.

இந்நிலையில் பலத்த மழையின் காரணமாக கருப்பாநதி அணைக்கு வரக்கூடிய தண்ணீரின் வரத்தும் காலை அதிகமாக காணப்பட்டது. 1 அடி நீர்மட்டம் குறைந்திருந்த நீர்மட்டம் நேற்று அதிகாலை பெய்த மழையின் காரணமாக மீண்டும் 70 அடியை எட்டியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X