• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

மும்பை பயங்கரம்-இன்றுடன் ஓராண்டு!

By Staff
|

மும்பை: வருடம் ஒன்று உருண்டோடி விட்டது. ஆனாலும் அது ஏற்படுத்தி வைத்துள்ள வடுக்கள் பல தலைமுறைக்கும் மறக்காகது, மறையாது. மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கோர தாண்டவமாடி இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகிறது.

2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி, இரவு 8 மணி. விறுவிறுப்பான பிசி வாழ்க்கையை முடித்து விட்டு வீடுகளுக்கு மக்கள் விரைந்து கொண்டிருந்தனர். ரயில்கள், பஸ்கள் என எங்கும் கூட்டம், சாலைகளிலும் வாகனத் திரள்.

பரபரப்பில் பம்பாய் மூழ்கிப் போயிருந்த அந்த நேரத்தில் இருளைப் பயன்படுத்திக் கொண்டு கடல் மார்க்கமாக இந்தியாவின் இதயத்திற்குள் காலடி எடுத்து வைத்தனர் அந்த பத்து தீவிரவாதிகள்.

ஐந்து குழுக்களாகப் பிரிந்து நகரின் பல்வேறு முக்கிய இடங்களுக்குள் கிளை பரப்பிச் சென்ற அந்த நாசகாரர்கள், இந்தியாவின் மீது போர் தொடுத்தனர்.

கண்மூடித்தனமான அவர்களின் தாக்குதலில் காக்கை, குருவிகள் போல அப்பாவி மக்கள் உயிரை விட்டு உதிர்ந்தனர்.

தாஜ்மஹால் பாலஸ் மற்றும் டவர் ஹோட்டல், ஓபராய் டிரைடன்ட் ஹோட்டல், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், நரிமன் இல்லம், லியோபோல்ட் கபே, காமா மருத்துவமனை, மெட்ரோ சினிமா, டைம்ஸ் ஆப் இந்தியா கட்டடத்திற்குப் பின்புறப் பகுதி, செயின்ட் சேவியர் கல்லூரி ஆகிய இடங்கள் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகின.

இவை தவிர மசகோவன் மற்றும் விலே பார்லே ஆகிய இரு இடங்களில் குண்டுகள் வெடித்தன.

26ம் தேதி இரவு 9.30 மணிக்குத் தொடங்கிய தீவிரவாதிகளின் வெறியாட்டம், 28ம் தேதி காலை தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்த கடைசித் தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டதோடு முடிவுக்கு வந்தது.

சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்தான் தீவிரவாதிகளின் தாக்குதலில் முதலில் சிக்கியது.

இரண்டு தீவிரவாதிகள் கையில் நவீன துப்பாக்கியுடன் கண்ணில் பட்டவர்களை சுட்டுத் தள்ளத் தொடங்கினர். அங்கு மட்டும் 52 பேர் கொல்லப்பட்டனர்.

அடுத்த இலக்காக ஓபராய், தாஜ் ஹோட்டல்கள் மாறின. தொடர்ந்து நரிமன் இல்லம் என அடுத்தடுத்து தீவிரவாதிகளின் வெறித்தனம் அரங்கேறியது.

சாதாரண தாக்குதலாக நினைக்கப்பட்ட நிலையில் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலால் நாடு நிலை குலைந்தது, மும்பை அதிர்ச்சியில் மூழ்கியது.

போலீஸாரை வைத்து இதை சமாளிக்க முடியாது என்று உணர்ந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர், துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.

ஆனால், தாஜ், ஓபராய், நரிமன் இல்லம் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கானோரை தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டதையடுத்து என்.எஸ்.ஜி கமாண்டோக்கள் விரைந்து வந்தனர்.

கராச்சியிலிருந்து வந்த தீவிரவாதிகள்...

தீவிரவாதிகள் பத்து பேரும் பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்திலிருந்து வந்தனர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்துதம், குபேர் என்ற இந்திய மீன் பிடி படகை தடுத்து நிறுத்தி அதில் இருந்தவரை கொன்று விட்டு அந்தப் படகு மூலம் மும்பை எல்லைக்குள் நுழைந்தனர். பின்னர் குபேர் படகை விட்டு விட்டு ரப்பர் படகுகள் மூலம் மும்பைக்குள் நுழைந்தனர்.

இந்த பத்து பேரும் மும்பை கடல் எல்லை வழியாக நகருக்குள் நுழைந்ததைப் பார்த்து சந்தேகமடைந்த உள்ளூர் மீனவர்கள் சம்பந்தப்பட்ட பகுதி போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீஸார் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டனர்.

முதல் தாக்குதல் சிவாஜி நிலையத்தில்...

இரவு 9.30 மணிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்குள் கசாப்பும், அபு இஸ்மாயிலும் நுழைந்து தாக்குதலை ஆரம்பித்தனர்.

கண்மூடித்தனமாக இருவரும் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர். 109 பேர் காயமடைந்தனர். இரவு 10.45 மணிக்கு இங்கு தாக்குதல் முடிவுக்கு வந்தது.

அடுத்து லியோபோல்ட் கபே...

தெற்கு மும்பையின் பிரபலப் பகுதியான இங்கு 2 பேர் சரமாரியாக சுட்டதில் சில வெளிநாட்டினர் உள்பட 10 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

10.40 மணியளவில் விலே பார்லேவில் ஒரு டாக்சியில் வைக்கப்பட்ட குண்டுவெடித்தது. டிரைவரும், பயணியும் கொல்லப்பட்டனர்.

அதேபோல, வாடி பந்தர் பகுதியில் 10.20 மற்றும் 10.25 மணிக்கு அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.

சிக்கித் தவித்த நரிமன் இல்லம்...

தீவிராதிகளின் வெறியாட்டத்தில் சிக்கிய இன்னொரு இடம் நரிமன் இல்லம். யூதர்களின் மையமான இங்கும் புகுந்த தீவிரவாதிகள் பலரைப் பிணைக் கைதிகளாக பிடித்துக் கொண்டனர்.

இதையடுத்து இங்கு என்.எஸ்.ஜி. கமாண்டோக்கள் ஹெலிகாப்டர் மூலம் உள்ளுக்குள் இறக்கி விடப்பட்டனர். இதையடுத்து உள்ளே இருந்த 2 தீவிரவாதிகளுக்கும், கமாண்டோக்களுக்கும் இடையே நீண்ட நேரம் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் ஒரு கமாண்டோ வீரர் உயிரிழந்தனர். இரு தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த யூதரான ரபி காவ்ரியேல் ஹோல்ஸ்ட்பர்க் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

உள்ளே சென்ற கமாண்டோக்கள் ரபி உள்ளிட்ட 6 பேரின் பிணங்களைக் கண்டுபிடித்தனர்.

27ம் தேதி காலை நரிமன் இல்லம் கமாண்டோக்களின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

சிக்கிய தாஜ் - ஓபராய் ஹோட்டல்கள்...

தாக்குதலின் உச்சம் இனிமேல்தான் ஆரம்பானது. நகரின் புகழ் பெற்ற தாஜ்மஹால் பேலஸ் மற்றும் டவர் ஹோட்டலையும், ஓபராய் டிரைடன்ட் ஹோட்டலையும் தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தாஜ் ஹோட்டலில் நான்கு குண்டுவெடிப்புகளும், ஓபராயில் ஒரு குண்டுவெடிப்பும் நடந்தது.

27ம் தேதி காலை தாஜ் ஹோட்டலில் சிக்கிய பல பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அங்கு 2 தீவிரவாதிகள் பலரைப் பிடித்து வைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

தாஜ் ஹோட்டலின் முதல் மாடியில் இருந்த வாசபி ரெஸ்டாரென்ட் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஹோட்டலில் சிக்கிய அப்பாவிகளை மீட்கவும், தீவிரவாதிகளை வேட்டையாடவும், வெளியில் அதி விரைவுப் படையினரும், என்.எஸ்.ஜி. கமாண்டோக்களும் தயாராகினர்.

உள்ளுக்குள் இருந்த தீவிரவாதிகளுக்கு வெளியில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து தொடர்ந்து தெரிய வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. டிவிகள் நேரடியாக இதை ஒளிபரப்பு செய்ததே இதற்குக் காரணம் என்று தெரிய வந்த பின்னர் தாஜ் ஹோட்டலுக்குள் உள்ள டிவிகளில் டிவி ஒளிபரப்பு துண்டிக்கப்பட்டது. டிவி நிறுவனங்களும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய தடை விதிக்கப்பட்டது.

29ம் தேதி காலை 8 மணிக்கு தாஜ் மற்றும் ஓபராய் ஹோட்டலுக்குள் இருந்த 3 தீவிரவாதிகளும் கொன்று குவிக்கப்பட்டனர்.

தாஜ் ஹோட்டலில் சிக்கியிருந்த 300 பிணையாளிகளும், ஓபராயில் சிக்கியிருந்த 250 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

நேரடியாக ஒலிபரப்பான கொடுமை...

உலகிலேயே முதல் முறையாக, வெளியில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளை உள்ளுக்குள் இருந்த தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாத அமைப்பினர் சாட்டிலைட் போன் மூலம் லைவ் செய்து வழி நடத்திய அலங்கோலத்தை உலகம் அன்று கண்டது.

வெறும் பத்து பேர், 3 நாள் முற்றுகை, உயிரிழப்புகள் 164. படுகாயமடைந்தவர்கள் 500க்கும் மேல், சொத்து நாசம் பல நூறு கோடி. இந்த கொடிய தாக்குதலில் ஹேமந்த் கர்கரே, விஜய் சலஸ்கர், அசோக் காம்தே ஆகிய அருமையான மூன்று காவல்துறை அதிகாரிகளை நாடு பறிகொடுத்தது.

நம் உயிரை விட மக்களின் உயிரும், நாட்டின் கெளரவமும் முக்கியம் என்று நினைத்து தீவிரவாதிகளுடன் கடுமையாக போராடி தங்களது இன்னுரியுரை நீத்தனர் கமாண்டோ வீரர் உண்ணிகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

3 நாள் முடங்கிப் போய் விட்டது மும்பை. கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை, அலுவலகங்கள் ஸ்தம்பித்துப் போயின. பொதுப் போக்குவரத்து ஆடிப் போயிருந்தது. தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா வந்திருந்த நியூசிலாந்து அணி திரும்பிப் போய் விட்டது. படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. மும்பையின் இயக்கம் கிட்டத்தட்ட நின்று போய் விட்டது. இந்திய மக்களின் இதயமும் விண்டு போயிருந்தது.

சிக்கிய கசாப் - வேட்டையாடப்பட்ட 9 பேர்...

3 நாள் போருக்குப் பின்னர் இந்தியப் படையினரிடம் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதி அஜ்மல் கசாப் மட்டுமே.

கசாப் உள்ளிட்ட 10 பேரும் பாகிஸ்தானியர்கள் என்றும், அவர்களது பெயர், விவரம் உள்ளிட்டவை டிசம்பர் 9ம் தேதிதான் அடையாளம் காணப்பட்டனர்.

10 தீவிரவாதிகளின் பெயர்கள், ஊர்கள் விவரம்.

1. அஜ்மல் அமீர் கசாப், பரீத்கோட்.

2. அபு இஸ்மாயில் தேரா இஸ்மாயில் கான், தேரா இஸ்மாயில்கான்.

3. ஹபீஸ் அர்ஷத், முல்தான்.

4. பாபர் இம்ரான், முல்தான்.

5. ஜாவேத், ஓகாரா.

6. சோயீப், நரோவல்.

7. நஸீ, பைசலாபாத்.

8. நாசர், பைசலாபாத்.

9. அப்துல் ரஹ்மான், ஆரிப்வாலா.

10. பஹத்துல்லா, திபல்பூர்.

தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது லஷ்கர் ஏ தொய்பா என்று தெரிய வந்தது. இதுதொடர்பாக இந்தியா ஆதாரங்களை அடுக்கியது. பாகிஸ்தானுக்கும் அனுப்பி வைத்தது. வழக்கம்போல மறுத்தது பாகிஸ்தான். அமெரிக்கா மூலம் நெருக்குதலும் கொடுத்தது இந்தியா. இன்று வரை மும்பைத் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் தரப்பு இதுவரை எந்த முன்னேற்றத்தையும் காட்டவில்லை. வழக்கம் போல இதுவும் அரசியலாகி விட்டது.

கசாப் பாகிஸ்தானி என்பதை நிரூபிக்கும் பல தகவல்களை பாகிஸ்தானிய மீடியாக்கள் உள்பட உலக மீடியாக்கள் வெளியிட்டு அம்பலப்படுத்தின. ஆனாலும் அதை தொடர்ந்து மறுத்து வந்தது பாகிஸ்தான். 2009 ஜனவரி 7ம் தேதிதான் கசாப் பாகிஸ்தானி குடிமகன் என்பதை அந்த நாடு ஒத்துக் கொண்டது.

இன்னும் பிணவறையில் உடல்கள்...

மும்பை தாக்குதல் நடந்து ஒரு வருடமாகி விட்டது. கசாப் மீதான விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. 9 தீவிரவாதிகளின் உடல்களை பாகிஸ்தான் வாங்கிக் கொள்ளம முன்வராததால், தொடர்ந்து பாதுகாப்புடன் பிணவறையில் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக பாகிஸ்தானில் சதித் திட்டம் தீட்டியவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து இந்தியா கோரிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் வழக்கம் போல பம்மாத்து காட்டிக் கொண்டிருக்கிறது.

தாக்குதல் அதிர்ச்சியிலிருந்து மும்பை மீண்டு விட்டது. ஆனாலும் வடுக்கள் இன்னும் போகவில்லை. அப்பாவி மக்களின் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என்ற பதில் தெரியாத கேள்வியுடன் மக்கள் தொடர்ந்து தங்களது அன்றாக வாழ்க்கை போராட்டத்தை நடத்தி வருகின்றனர்- வேதனையை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இன்றே பதிவு செய்யுங்கள , பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more